(Reading time: 54 - 107 minutes)

ரவு தாமதமாக உறங்கியதால் கங்கா காலையில் கண் விழிக்க கொஞ்சம் தாமதமானது. அதனால் அவசர அவசரமாக எழுந்திருக்க நினைத்தால், அவளால் எழுந்திருக்க முடியவில்லை. ஏனெனில் துஷ்யந்த் அவள் மீது தலை வைத்து படுத்திருந்தான். அதை ரசித்தவளாக அவன் தலையை கோதியவள், மெதுவாக அவனை கீழே படுக்க வைக்க நினைத்து அவன் தலையை நிமிர்த்திய போது, அவன் இன்னும் அவள் மீது அழுத்தமாக தலையை பதித்தான்.

“முழிச்சிட்டு தான் இருக்கீங்களா?”

“ஆமாம்.. இப்போ தான் படுத்தேன்.. அதுக்குள்ள என்னை எழுப்புற..”

“அதனால என்ன படுத்து தூங்குங்க.. உங்களை யாரு எழுந்துப் போக சொன்னது.. நான் தானே போகப் போறேன்..*

“நான் எழுந்தா தானே நீ எழுந்திருக்க.. நான் இப்படியே தான் தூங்கப் போறேன்..”

“அய்யோ விளையாடாதீங்கப்பா.. நான் இந்த விட்டுக்கு வந்த முதல் நாளே.. லேட்டா எழுந்திதுச்சா என்னை என்ன நினைப்பாங்க?”

“ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்த கணவன், மனைவி இப்போ ஒன்னா சேர்ந்திருக்காங்க.. அவங்கக்குள்ள” என்று சொல்லி முடிக்கும் போதே,

“அவங்கக்குள்ள என்ன?” கங்கா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“அவங்கக்குள்ள பேசிக்க நிறைய இருக்கும் தானே.. நாமளும் அதானே செஞ்சோம்.. நீ என்ன நினைச்ச?” என்றுக் கேட்டான்.

“விளையாடாதீங்க.. எனக்கு நேரமாகுது எழுந்திருங்க..”

“அப்போ ஒரு கண்டிஷன்..”

“என்ன?”

“துஷ்யந்த் எனக்கு நேரமாகுது எழுந்திருங்கன்னு என்னோட பேர் சொல்லி கேளு.. அப்போ பார்க்கலாம்..”

“என்னது உங்க பேர் சொல்லியா.. உங்க பேர் சொல்லு எப்போ உங்கக்கிட்ட பேசி இருக்கேன்..”

“4 முறை.. அன்னைக்கு ஜீரத்துல, கோவிலில் அர்ச்சனை செய்யும் போது, ஹாப்பி பர்த்டே பாடும் போது, அப்புறம் ஹாஸ்பிட்டலில் என்னோட பேர் சொல்லிக்கிட்டே ஓடி வந்து கட்டிப்பிடிச்சியே..”

“அதெல்லாம் என்ன அறியாம கூப்பிட்டது.. தெரிஞ்சே அப்படில்லாம் கூப்பிட வராது..”

“அப்போ ஏதாச்சும் செல்ல பேர் வச்சு கூப்பிடு..”

“விளையாடாதீங்கப்பா.. என்னன்னு செல்ல பேர் வச்சு கூப்பிட்றது.. பேசாம ஒன்னு செய்யவா.. உங்க முழு பேர் துஷ்யந்த மகாராஜாவாமே.. அத்தை சொன்னாங்க.. அதனால வேந்தே, சுவாமி, நாதா இப்படி ஏதாச்சும் கூப்பிடவா..” என்றதும் அதிர்ச்சியில் அவன் எழுந்திருக்க, உடனே புடவையை சரி செய்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்துக் கொண்டாள்.

“செல்லப் பேர் வைக்கறதெல்லாம் தானா வரணும். எதுக்கு நாமே செயற்கையா தேடிக்கிட்டு இருக்கணும்.. நம்ம அப்பா அம்மால்லாம் பேர் சொல்லியோ, இல்ல செல்ல பேர் வச்சோவா கூப்பிட்டாங்க.. அதனால அதெல்லாம் வேண்டாம்” என்றவள், குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

மூன்று ஜோடிகளுமே தேன் நிலவுக்காக குன்னூருக்கு செல்ல தீர்மானித்தனர். அதே நேரம் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கையும் சீராக அமைந்ததால், புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல கோமதியும் விஜியும் தீர்மானித்ததால், வாணியை அவர்களுக்கு துணையாக சேர்த்து கூட நம்பகனமான ஒருவரை ஏற்பாடு செய்து மூவரையும் அனுப்பிவிட்டு தான், இவர்கள் குன்னூர் சென்றனர்.

அவர்கள் சென்றது தேன்நிலவுக்கு என்பதால், தனித்தனி ஜோடிகளாக அதிக நேரம் தனிமையிலும், அனைவருமாக  சிறிது நேரம் ஒன்றாக  கூடி இருந்தும் அந்த பயணத்தை ரசித்தனர். கங்காவும் யமுனாவும் முன்பு அவர்கள் இருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்றார்கள். திடீரென காணாமல் போன அக்காவும் தங்கையும் இப்போது அவரவர் கணவரோடு நல்லப்படியாக வாழ்வதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் உண்மையிலேயே மகிழ்ந்தனர்.

துஷ்யந்தும் கங்காவும் முன்பு இங்கு இருந்ததை போலவே, அந்த எஸ்டேட் பங்களாவில் உள்ள தோட்டம், எஸ்டேட்டிற்கு செல்லும் பாதை, அவர்களுக்கு திருமணமான கோவில் என்று அந்த இடத்திலேயே தினமும் தங்கள் பொழுதை கழித்தனர். இருவருக்கும் அது சலிக்கவே இல்லை. அன்றும் அப்படித்தான் இருவரும் நடந்துக் கொண்டிருந்த போது, “வாங்க நாம பங்களாவுக்கு போவோம்.. எனக்கு இப்போ கால் வலிக்குது..” என்று சொல்லி அவள் அந்த இடத்திலேயே அப்படியே நின்றுவிட்டாள்.

“நாம எப்போதும் இவ்வளவு தூரம் நடக்கறது தானே கங்கா.. இன்னைக்கு மட்டும் என்ன வாயேன்..” என்று அவனழைத்ததற்கு,

“போங்க நீங்க முன்ன மாதிரி இல்ல.. நான் இப்படி சொன்னா நீங்க தூக்கிப்பீங்கன்னு பார்த்தா.. இப்படி சொல்றீங்க..” என்று அவள் சிணுங்கியதும், அவளை தூக்கிக் கொண்டான்.

“இப்போ மட்டும் என்ன இறக்குங்க..”

“கோச்சுக்காதம்மா.. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும்.. அதை நீ வெளிப்படையா சொல்லணும்னு தான் சும்மா இப்படி சொன்னேன்”

“ம்ம் சும்மா சமாளிக்காதீங்க..” என்று முகத்தை சுழித்து ஒழுங்கு காட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.