(Reading time: 54 - 107 minutes)

விடிந்தாலும் வானம்

இருள்பூச வேண்டும்

மடிமீது சாய்ந்து

கதைபேச வேண்டும்

முடியாத பார்வை

நீ வீச வேண்டும்

முழு நேரம் என்மேல்

உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை

நாம் போவோம் அதுவரை

நீ பார்க்க பார்க்க

காதல் கூடுதே

ஓஹோ…. ஓ… ஓ…

ஓஹோ… ஹோ……

உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்

என் மூச்சில் சேருதே

இருவரும் நடந்து வந்தவர்கள், ஒரு இடம் பார்த்து இளைப்பாற, கங்காவின் மடியில் துஷ்யந்த் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

“கங்கா.. நாம வருஷத்துக்கு ஒருமுறை இதே போல இங்க வந்து ஒரு பத்து நாளாவது இருந்துட்டு போகணும்..”

“ஆமா ஆரம்பத்துல ஆம்பிளைங்க இப்படித்தான் சொல்வீங்க.. அப்புறம் எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருப்பீங்க..”

“ம்ம் அப்படியெல்லாம் கிடையாது.. நீ கூட இருந்து பார்க்கத் தானே போற.. நம்ம பிள்ளைங்க, பேரக் குழந்தைங்களுக்கு கல்யாணம் ஆனா கூட அவங்ககையெல்லாம் விட்டுட்டு நாம இங்க அடிக்கடி ஓடி வந்திடுவோம்.. ஏன் வயசான காலத்துல இங்கேயே செட்டில் ஆகிடலாம்..”

“ம்ம் எனக்கும் அது சந்தோஷம் தான்.. ஆமாம் நம்மக்கூட ரெண்டு ஜோடி வந்தாங்களே அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. அவங்களை விட்டுட்டு இப்படி நாம தனியா சுத்திக்கிட்டு இருக்கோமே.. அவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்க..?”

“ம்ம் நாம அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சந்தோஷமா தான் நினைப்பாங்க.. இளங்கோ கிட்ட பேசினேன்.. அவனும் யமுனாவும் ஊட்டிக்குப் போறாங்களாம்.. உன்கிட்ட சொல்ல சொல்லி கொஞ்ச நேரம் முன்ன தான் பேசினாங்க, ஆனா செல்வா என்னோட தம்பின்னு நல்லாவே நிருபிக்கிறான்.. நாம எஸ்டேட்டை தான் சுத்தி சுத்தி வரோம்… அவங்க ரூமை விட்டு வர்றதே இல்லையாம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

“என்ன நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க..”

“ஹே உண்மையிலேயே சந்தோஷத்துல தான் பேசறேன் கங்கா.. அன்னைக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு நான் செஞ்ச தப்பை சரியாக்க, செல்வாவுக்கும் நர்மதாவுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன்.. அவங்க சந்தோஷமா வாழறது பார்த்து உண்மையிலேயே மன நிறைவோட தான் பேசறேன்..”

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. அவங்க காலேஜ் படிக்கும் போதே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சாங்க..” என்று முழு விவரத்தையும் கூறினாள். அதைக் கேட்டு அதிர்ந்தவன்,

“என்ன கங்கா சொல்ற.. அன்னைக்கு மட்டும் அந்த கல்யாணம் நடந்திருந்தா.. நினைச்சு பார்க்கவே அதிர்ச்சியா இருக்கு..”

“அந்த நேரம் நானும் இப்படித்தான் நினைச்சேன்.. ஆனா இப்போ எனக்கு என்ன தெரியுமா நினைக்க தோணுது.. உங்கப்பேர் பக்கத்துல என்னோட பேர் தான் எழுதி வச்சிருக்கு.. அதனால தான் இப்படி மனசுக்கு சங்கடம் கொடுக்கிற எதுவும் நடக்கவில்லை..” என்றதும் துஷ்யந்தும்.அதை ஆமோதித்தான்.

தேன் நிலவை முடித்துவிட்டு வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர். பெரியவர்களும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று திரும்பி வந்துவிட்டனர். முன்னே மகன்களுக்கு திருமணம் ஆனால் போதும் என்று இருந்தவர்களுக்கு இப்போது பேரன் பேத்தியை பார்க்கும் ஆசை வந்துவிட்டது. பகலில் அலுவலகத்திலும் வீட்டிற்கு வந்தால் மனைவியின்  முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றும் மகன்களை பார்க்க கோமதிக்கும் விஜிக்கும் மனம் நிறைந்திருந்தது.

கங்காவும் நர்மதாவும் குடும்ப பொறுப்பை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு, விஜிக்கு ஓய்வு கொடுத்து விட்டனர். வாணியின் உதவியோடு இருவரும் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துவிடுவார்கள். இப்படியே சில மாதங்கள் செல்ல, சீனியரான கங்கா தான் முதலில் தாயாகிய நற்செய்தியை கூறினாள். தன் வாழ்வை முழுமையாக்கிய மனைவியை துஷ்யந்த் தூக்கி தட்டாமலை சுற்றினான்.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை.. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் துஷ்யந்தும் செல்வாவும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அன்று இளங்கோவும் யமுனாவும் கூட வீட்டிற்கு வருவார்கள்.

இன்றோ கங்காவிற்கு ஒரு வேலையும் வைக்காமல், நர்மதாவும் யமுனாவும் அவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வேலைகளை பார்க்க, கங்காவோ போரடித்து போய் உட்கார்ந்திருந்தாள். பெரியவர்கள் இருவரும் புராண கதைகளை வெவ்வேறு மாதிரி மாற்றி ஒளிபரப்பிக் கொண்டிருக்க அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று பார்த்து துஷ்யந்தும் செல்வாவும் சீரியஸாக ஏதோ அலுவலக விஷயமாக பேசிக் கொண்டிருந்தனர்.  இந்த நேரம் இளங்கோ இருந்தாலாவது அவனோடு பேசிக் கொண்டிருக்கலாம்.. ஆனால் அவனும் ஏதோ வேலை இருக்கிறது என்று யமுனாவை அனுப்பி வைத்தவன், இன்னும் வரவில்லை.

அப்படியே ஓய்வு என்ற பெயரில் கடுப்போடு கங்கா உட்கார்ந்திருக்க, கடைசியாக இளங்கோவும் வந்து சமையல் வேலையும் முடிந்ததால் அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிட்டனர். பின் பெரியவர்கள் ஓய்வு எடுக்க செல்ல, முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று துஷ்யந்த் சொன்னதும் இளையவர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.