(Reading time: 54 - 107 minutes)

அடுத்து அங்கு இந்த மூவர் மட்டுமே இருந்தனர்.. “நர்மதா.. இந்த நகையெல்லாம் கண்டிப்பா போட்டுக்கணுமா?” என்று கங்கா நர்மதாவிடம் பரிதாபமாக கேட்டாள்.

“அது பர்ஸ்ட் நைட்க்கு மருமகளை அனுப்பும்போது இதெல்லாம் செய்யணுமாம் அத்தை சொல்லியிருக்காங்க..”

“ஆனா எங்களுக்கு ஒன்னும் இது பர்ஸ்ட் நைட் கிடையாதே..”

“அத்தைக்கு உங்க கல்யாணத்தை பார்க்க முடியலையே என்ற வருத்தம்.. நீங்க ரெண்டுப்பேரும் ஒன்னா வாழ்ந்திருந்தா கூட பரவாயில்லை..  இத்தனை நாள் பிரிஞ்சு ஒன்னு சேர்ந்ததால அத்தைக்கு இந்த சம்பிரதாயமெல்லாம் செஞ்சு பார்க்க ஆசை இருக்குக்கா..”

“ஆமா உங்க கல்யாணத்தப்பவும் அத்தை இதெல்லாம் செஞ்சாங்களா?”

“உங்களுக்கு தெரியாததா க்கா.. எந்த சூழ்நிலையில் ரிஷப்க்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு.. அப்போ இருந்த மனநிலைக்கு யாருக்கும் இதெல்லாம் தோனல.. அதில்லாம இன்னும் எங்களுக்குள்ள..” என்று சொல்ல வந்தவள் அதோடு நிறுத்திக் கொண்டாள். ஆனால் நர்மதா சொல்ல வந்ததை கங்கா புரிந்துக் கொண்டாள்.

“நர்மதா என்ன இது? கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகுது இன்னுமா உங்க வாழ்க்கை ஆரம்பிக்கல? என்ன பிரச்சனை நர்மதா?”

“அய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லக்கா.. ஆரம்பத்துல ரிஷப் மேல கோபம் இருந்ததால  கொஞ்சம் விலகியிருந்தேன்.. ஆனா இப்போ அப்படில்லாம் ஒன்னுமில்ல..”

“அப்புறம் ஏன் இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்கீங்க..?”

“அது ஆரம்பத்துல நான்தான் அவர்கிட்ட இருந்து விலகியிருந்தேன்.. இப்போ எனக்கு எந்த பிரச்சனையுமில்ல..  ஆனா நானா எப்படி அவர்க்கிட்ட சொல்றது..”

“இப்படி பார்த்தா இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்படி இருக்கறது.. வாய திறந்து மனசுல இருக்கறதை சொல்லன்னாலும், நம்ம செய்கையிலாவது உணர்த்தனுமில்ல.. இவ்வளவு நாள் கோபத்துல விலகியிருந்ததால, உனக்காக செல்வா பார்த்திருக்கலாம்ல,  இதுக்கு மேலயும் இப்படியே இருக்க கூடாது.. பெரியவங்களுக்கு தெரிஞ்சா அவங்க மனசு கஷ்டப்படாதா? போ போய் ஒரு நல்ல புடவையா கட்டிக்கிட்டு வா..”

“அக்கா.. எனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருக்குக்கா..”

“நர்மதா.. கங்காவை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டல்ல.. அன்னைக்கு துஷ்யந்த் தம்பிக்கிட்ட அவ தயக்கம் காட்டியிருந்தா, தம்பியை இன்னைக்கு எல்லோரும் நல்லா பார்த்து இருக்க முடியுமா? நீதான் தைரியமா செல்வா தம்பிக்கிட்ட காதலை சொன்னியாமே, இப்போ அதெல்லாம் எங்கப் போச்சு..” என்று வாணி எடுத்துக் கூறினார்.

“செல்வா தம்பி இளங்கோ கூட வெளிய போச்சுல்ல.. தம்பி வர்றதுக்குள்ள வா புடவைக் கட்டி தயாராகு..” என்று அவரே அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் செல்வா எங்கே வெளியில் போனான். இளங்கோ எடுத்து போன பூக்களில் பாதியை வீட்டுக்கு வெளியிலேயே வைத்து வாங்கிக் கொண்டவன், எல்லாம் கங்காவை அலங்காரம் செய்ய அறைக்குள் இருந்த போதே, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் வந்தவன், அவனது அறைக்குச் சென்றிருந்தான். அறையை முழுவதும் மலர்களால் அலங்கரித்தவன், நர்மதாவின் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் இன்னும் அவள் வரவில்லையே, ஒருவேளை அங்கேயே தூங்கிவிட்டாளா? என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். பின் அவள் இன்னும் என்ன தான் செய்துக் கொண்டிருக்கிறாள் என்று பார்க்க, அறையிலிருந்து மெதுவாக வெளியில் எட்டிப்பார்த்த போது தான், நர்மதாவும் வாணியும் அங்கே வந்தார்கள்.

செல்வா அறைக்குள் இருப்பதை பார்த்த வாணி அப்படியே அங்கேயே நின்றுவிட, “இவன் எப்போது வீட்டுக்கு வந்தான்..” என்று சிந்தித்தப்படி நர்மதா அறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த அலங்காரத்தை பார்த்து அதிசயித்து தான் போனாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனை சாதாரணமாக ஒரு பார்வை பார்த்தவள், வார்ட்ரோபை திறந்து ஒரு புடவையை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

“என்ன எந்த ஒரு ரியாக்‌ஷனும் இல்லாம போறா.. செல்வா எல்லாம் பக்காவா தானடா செஞ்சிருக்க.. இதை பார்த்துமா அவளுக்கு பல்ப் எரியல.. என்னடா செல்வா உன்னோட நிலைமை இப்படியாகிப் போச்சு..” என்று புலம்பினான்.

வெளியில் வந்த நர்மதாவின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. இப்போது தான் போனார்கள் அதற்குள் வந்துவிட்டார்களே என்று கங்கா கேள்வியாக பார்க்க..

“கங்கா.. செல்வா தம்பி வீட்ல தான் இருக்கு.. ரூமை திறந்தது தான் ஒரே பூவாசம் தான் பார்த்துக்கோயேன்..” என்று வாணி கேளியாக கூற, நர்மதாவின் வெட்கச் சிவப்பே கங்காவிற்கு அனைத்தையும் புரிய வைத்தது.

“அப்போ அலங்காரத்தை அசத்தலா செஞ்சிட வேண்டியது தான்..” என்று சொல்லி நர்மதாவை கண்ணாடியின் முன் உட்கார வைத்தாள்.

“அய்யோ அக்கா இதெல்லாம் எதுக்குக்கா..”

“இதெல்லாம் இப்போ உனக்கு தான் ரொம்ப அவசியம்” என்று கூறியவள், நர்மதாவிற்கு நன்றாக அலங்காரம் செய்து அவளிடம் பால் சொம்பை கொடுத்து அனுப்பி வைத்தாள். பின் வாணியையும் படுக்கச் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றாள். என்னத்தான் இத்தனை நேரம் மனதில் உள்ள பதட்டத்தையும் இறுக்கத்தையும் மாற்ற முயற்சி செய்தாலும் முடியவில்லை.  இவ்வளவு நாள் இப்படியில்லையே, இன்று மட்டும் ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.