(Reading time: 54 - 107 minutes)

முன்பாகவே ஆண்கள் மூவரும் கோவிலுக்கு வந்துவிட்டனர். வாணி, நர்மதா, இளங்கோ குடும்பத்தினரும் கூட ஏற்கனவே வந்து சடங்கிற்கான ஏற்பாட்டை  கவனித்துக் கொண்டிருந்தனர்.  பட்டு வேட்டி சட்டையில் மூன்றுபேரும் கம்பீரமாக தங்களின் இணையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த பத்து நாட்களும் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க எந்த தடைகளும் இருக்கவில்லையென்றாலும், இந்த நல்ல நாளிலேயே தங்களின் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இளங்கோவும் செல்வாவும் காத்திருந்தனர். அதனால் இந்த நாளை இருவரும் ஆவலாக எதிர்பார்த்தனர். அந்த நாளும் வந்துவிடவே அவர்கள் மனம் உற்சாகத்தில் இருந்தது.

இவர்களுக்கு இப்படி என்றால் துஷ்யந்தோ ஒரு தவிப்போடு இந்த நாளுக்காக காத்திருந்தான். இத்தனை நாள் கங்காவை பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.. அவளோடு  சில வார்த்தைகள் பேசினால் போதும் என்று தனக்கு தானே கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டவனுக்கு, இப்போது அவர்கள் உறவுமுறை பற்றி தெரிந்ததும் இத்தனை நாள் கணவன் மனைவியாய் இருவரும் வாழ்ந்திருக்க வேண்டிய தருணங்களை  இழந்ததை நினைத்து மனம் வருத்தம் கொண்டது.

இன்று அவர்களது திருமண நாள். இதற்கு முன் வந்த திருமண நாட்கள், ஒன்று சேர்ந்து கொண்டாட முடியாமல் போன பண்டிகைகள் எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டான்.

ஆனால் அப்படியிருந்தும் அவர்களின் தலை தீபாவளியை இளங்கோ வீட்டில் கொண்டாடியதை மனம் நினைத்து பார்த்தது. ஏன் சாதாரணமாக வாழ வேண்டிய ஒரு இல்லற வாழ்க்கையை இறைவன் முதலிலேயே கொடுக்கவில்லை என்று அவன் மனமும் இந்த பத்து நாட்களாக கேட்டுக் கொண்டு தான் இருந்தது. ஒருவரையொருவர் விட்டு பிரியாமல், அவர்களிடையே இருந்த நேசம் மாறாமல் இத்தனை நாள் அருகருகே இருக்கும் சந்தர்ப்பமாவது கிடைத்ததே என்று மனம் கொஞ்சம் ஆறுதல் தேடிக் கொண்டது. 

மூன்று பெண்களும் கோவிலுக்கு வந்ததும் சடங்குகள் ஆரம்பித்தது. இளங்கோவின் அண்ணி, நர்மதாவின் அம்மா இன்னும் மூன்று குடும்பத்திற்கும் தெரிந்த சில சுமங்கலி பெண்மணிகள் அனைவரும் மூன்று பெண்களையும் உட்கார வைத்து, மஞ்சள் கயிறில் தாலியோடு சேர்த்து சில உருப்படிகளையும் கோர்த்து, அதை தங்க சங்கிலியோடு சேர்த்து பிணைத்து, முதலில் துஷ்யந்தை அழைத்து கங்காவின் கழுத்தில் தாலிக்கொடியை அணிவிக்கச் சொல்ல, அவன் அதை அவளுக்கு அணிவித்ததும், அனைவரும் அவர்களை அச்சதை தூவி ஆசிர்வதித்தனர். பின் அந்த தாலியில் குங்குமத்தை வைக்கச் சொல்லி அவன் கையில் குங்குமச் சிமிழை கொடுத்ததும், துஷ்யந்தும் அப்படியே செய்தான்.

பின் செல்வாவும் இளங்கோவும் அவர்கள் மனைவிகளுக்கும்  அதையே செய்தனர். அதேபோல் மாலை நடந்த பார்ட்டியும் இனிதே நடைபெற்று அனைவரின் மனதும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. அதன்பின் கங்கா முறைப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு மருமகளாய் உரிமையோடு  வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் வந்தாள்.

ளங்கோவும் செல்வாவும் மிக தீவிரமாக பேசியப்படி நின்றிருக்க, “ரிஷப் ஆர்டர் செஞ்ச பூவெல்லாம் திருப்பி அனுப்பியாச்சா?” என்றப்படி நர்மதா அங்கே வந்தாள். உடன் யமுனாவும் வந்தாள். செல்வா திருதிருவென விழித்து இளங்கோவை பரிதாபமாக பார்த்தான்.

ஆறு வருடத்திற்கு முன்பே திருமணம்.ஆகியிருந்தாலும், இன்று தான் உரிமையான கணவன், மனைவியாக துஷ்யந்தும் நர்மதாவும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதால், இந்த இரவு அவர்கள் மறக்க முடியாத இரவாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த நால்வரும் சில விஷயங்கள் யோசித்து வைக்க, அதை அறிந்த இருவரும் இதெல்லாம் வேண்டாமென்று மறுத்துவிட்டனர். அதனால் அந்த பூக்களையெல்லாம் திருப்பி அனுப்பியாகிவிட்டதா? என்று தான் நர்மதா கேட்டாள்.

உண்மையிலேயே இன்று புதிதாக வாழ்க்கையை தொடங்க போகிற ஜோடி, இந்த இரண்டு ஜோடிகள் தான்.. துஷ்யந்த் வேண்டாமென்று மறுத்ததால், அதை தங்கள் அறைக்கு உபயோகித்துக் கொள்ள செல்வாவும் இளங்கோவும் நினைத்தனர். இந்த பத்து நாட்களில் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள் ஆனதால், மனம் திறந்து தங்கள் தேவையை இருவரும் பகிர்ந்துக் கொண்ட போது தான், இருவமே ஒன்று போல் யோசித்ததை நினைத்து சிரித்துக் கொண்டனர். அவரவர் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது தான் அவர்களது திட்டம்.

இப்போது நர்மதா வந்து கேட்டதும் என்ன சொல்வதென்று செல்வா முழிக்க, “நான் வீட்டுக்கு போறப்போ எடுத்துட்டு போய் கொடுத்திட்றேன் நர்மதா..” என்று இளங்கோ சமாளித்தான். அவனுக்கும் அது சாதகமான பதில் தான்..

“சரி யம்ஸ் கிளம்பலாமா?” என்று இளங்கோ கேட்க,

“இளன் இன்னைக்கு நைட் நான் இங்கேயே இருக்கேனே.. நர்மதா என்ன இருக்க சொன்னா..” என்றதும், இரு ஆண்களுக்கும் அதிர்ச்சியில் மயங்கி விழாத குறை தான்..

“யம்ஸ் இன்னைக்கு வீட்டுக்கு போயிட்டு காலையிலேயே வருவோமே..”

“அண்ணா இன்னைக்கு ஒருநாள் யமுனா என்கூட இருக்கட்டுமே..”

“மது.. அவங்களுக்கும் ஏதாச்சும் வீட்ல வேலை இருக்கும்.. பத்து நாளா பார்ட்டிக்கான ஏற்பாடு, ஷாப்பிங்னு நம்மக் கூட தான இருந்தாங்க.. அதனால வீட்டுக்கு போகட்டும்..”

“இல்ல ரிஷப் மாமா.. வீட்ல எங்களுக்கு என்ன பெருசா வேலை இருக்கப் போகுது.. அதுவுமில்லாம நைட்ல போய் என்ன செய்ய போறோம்..” என்று யமுனா கேட்டதும்,

‘ஆண்டவா இது என்னப்பா சோதனை.. புதுசா கல்யாணம் ஆகியிருக்கு.. நைட்ல என்ன செய்யப் போறோம்னு கேக்கறாளே.. இவ தெரிஞ்சு தான் சொல்றாளா? இல்ல தெரியாமலே சொல்றாளா?” என்று இளங்கோ மனதில் பேசிக் கொண்டான்.

“இங்கப்பாருங்க இன்னைக்கு நைட் ரெண்டுப்பேரும் ஒன்னா இருந்து என்ன செய்யப் போறீங்க.. யமுனா நீ வீட்டுக்கு போ..” என்று சொல்லியப்படியே விஜி அங்கு வந்தார்.

“யமுனா இன்னைக்கு நைட் இங்க இருக்கணும்னு ஆசைப்பட்றா.. இருக்கட்டுமே விஜி.. ஏன் போகச் சொல்ற?” என்று விஜியோடு உடன் வந்த கோமதி கேட்டார்.

“காலையிலிருந்து எல்லாம் ஒன்னா தானே இருந்தாங்க அண்ணி.. இப்போ நைட் ஆயாச்சு எல்லாம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? அதான் சொல்றேன் யமுனா நீ வீட்டுக்கு கிளம்பு..” என்றார் உறுதியாக,

“சரி இளன் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்..” என்று யமுனா கேட்டதும்,

“சரி இந்த பூவை கொடுத்திட்டு வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல, செல்வாவும் அவனுடனே சென்றான்.

“சரி கங்காவை ரூம்ல தனியாகவா விட்டுட்டு வந்தீங்க.. போய் அவ கூட இருங்க” என்று சொல்லவும், இருவரும் அங்கிருந்து சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.