தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 18 - மது
AT THE END OF INFINITY
“வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள்....” டிவியை அணைத்து விட்டிருந்தான் பாலகிருஷ்ணன்.
‘மழை பெய்யவிருக்கிறதாமே சென்னையில். காண வேண்டும். மழையைக் கண்டு குதூகலிக்கும் அவள் முகத்தை ஆசை தீர காண வேண்டும்’ அவன் மனம் பரபரத்தது.
ஹரிணி அன்றிரவு பணியில் இருப்பதை அறிந்தவன் அதிகாலை அவளது பணி முடிந்ததும் அவள் கிளம்பி வரும் போது அவள் முன் நின்று அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணினான்.
“மீட்டிங் முடிய நைட் பத்து மணி ஆகிடும் விதும்மா” அன்று மதியம் மீட்டிங் தொடங்கும் முன் அவளுக்கு போன் செய்திருந்தான்.
“அப்போ அங்கே ஹோட்டல நைட் தூங்கி எழுந்து மார்னிங் டிபன் சாப்பிட்டு கிளம்புங்க பாலா. லஞ்சுக்கு எல்லாம் வீட்டுக்கு வந்திடலாம். நைட் டிராவல் எல்லாம் வேண்டாம்” அவள் சொல்லியிருந்தாள்.
கேட்டிருக்க வேண்டுமோ அவன். அப்படி கேட்டிருந்தால் இனி எப்போதும் அவள் முகத்தை காணவே முடியாத நிலை ஏற்பட்டிருக்காதோ.
அப்போது மணி இரவு பதினொன்று ஆகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்பினால் காலை ஏழு மணிக்கெல்லாம் போய் சேர்ந்து விடலாம் என மனதிலே கணக்கு போட்டவன் ஹோட்டல் ரிஷப்ஷனை அழைத்து செக் அவுட் செய்வதாக சொன்னான்.
அவன் எப்போதும் போல நிதானமாக தான் காரை ஒட்டி வந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடலாம் எனும் தூரத்தில் அவன். சடசடவென நல்ல மழை. காரின் ஜன்னலை லேசாக திறந்து வைத்து அவனைத் தீண்டிய சாரலை ரசித்தான்.
“உனக்கு இளையராஜா சாங்க்ஸ்னா ரொம்ப பிடிக்குமா” பூர்வி தந்திருந்த திருமண பரிசான இளையராஜா பாடல்கள் அடங்கிய மியுசிக் ப்ளேயரை எப்போதும் அவள் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கேட்டான்.
“ஆமா இளையராஜா சாங்க்ஸ்னா எனக்குப் பிடிக்கும்” அவளது விருப்பத்தை அறிந்தவன் காரில் இளையராஜா பாடல்களையே எப்போதும் தவழ விடுவான்.
“அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது” உண்மையிலே அந்த மழைத்துளிகளில் எல்லாம் ஹரிணியின் முகம் தான் தெரிந்தது அவனுக்கு.
இதோ இன்னும் சில மணித்துளிகளில் அவள் முகத்தைக் கண்டு விடுவான் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போது தான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அது நிகழ்ந்தது.
நெடுஞ்சாலையின் வலது புறமாக சென்னை நோக்கி அவன் பயணித்துக் கொண்டிருக்க சென்னையில் இருந்து பங்களூரு சென்ற சரக்கு லாரி ஒன்று அதிவேகத்துடன் டிவைடரை உடைத்துக் கொண்டு பாலாவின் கார் மீது வேகத்துடன் மோத அவன் கார் மொத்தமாக சுழற்றி வீசப் பட்டது. பாலாவின் பின் வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் போய் முட்டி நின்றது அந்த லாரி.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அனைத்தும் நடந்திருக்க லாரி ஓட்டுனரும் கிளீனரும் அந்த இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். பேருந்தின் ஓட்டுனர் மற்றும் பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
பாலாவின் கார் சுழற்றி வீசப் பட்ட போதும் அவன் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரின் உள்ளேயே பலத்த காயங்களுடன் மயங்கிப் போயிருந்தான்.
உடனடியாக ஹைவே பட்ரோல் அருகாமையில் உள்ள ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க அனைவரும் உடனடியாக அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.
போக்குவரத்து தடைபட்டிருக்க பொது மக்களும் அந்த அடைமழையைப் பொருட்படுத்தாது விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் புரிந்தனர்.
கார் அப்பளமாக நொறுங்கி விட்டருந்த நிலையில் பாலகிருஷ்ணன் காரில் இருந்து மீட்கப் பட்டான். உடனடியாக பாராமெடிக் வந்து சோதனை செய்து இன்னும் உயிர் இருப்பதாக சொல்லி அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றினர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஒரு கணம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான் கணேஷ் ராம். என்னவாயிற்று. பாஸின் ஹனிக்கு ஏதோ பெரிய பிரச்சனை போலவே.
“டாக்டர் நீங்க சைன் செய்றீங்களா” ஸ்டாப் நர்ஸ் நோயாளியை வார்டுக்கு மாற்றும் உத்தரவு படிவத்தை அவன் முன் நீட்டவும் தான் ஸ்மரணை பெற்றான்.
“இல்ல நான் எப்படி” என்று திணறியவன் ஹர்ஷாவை தேடிச் சென்றான்.
கணேஷ் ராம் அங்கே சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. இந்த மூன்று மாதங்களில் அவன் ஹர்ஷாவைப் பார்த்து பிரமிப்பு அடையாத நாளே இல்லை எனலாம்.
அவன் அதுவரை ஹர்ஷாவைப் பற்றிக் கேள்விப்பட்டது எல்லாம் ஒன்றுமே இல்லை எனும்படி அவனது திறமையையும் ஆளுமையையும் கண்டு வியந்தான்.
மிகவும் சிக்கலான சவாலான சர்ஜரிகளைக் கூட மிகுந்த கம்பீரத்துடன் அதே சமயம் கவனத்துடன் அவன் அணுகுவதை ஒரு ரசனையுடனே பார்த்திருப்பான்.