(Reading time: 29 - 58 minutes)

அவள் மீது பார்வையை விலக்காமலே அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான். அவளும் அவனையே தான் பார்த்திருந்தாள்.

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கால்களில் முகம் புதைத்து அழுதான். குலுங்கி குலுங்கி அழுதான்.

“ஆண்பிள்ளைகள் அழுவதில்லை” காலம் காலமாக சொல்லி வந்ததை உடைத்தெறிந்தான். உலகத்தில் மிகச் சிறந்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவன், அனைவரும் மரியாதையாக டாக்டர் ஹெச்எஸ்ஆர் என்று அழைக்கும் படி ஓர் உயரத்தில் இருப்பவன், அரசகுலத்தில் பிறந்த ராஜகுமாரன் என்ற அத்தனை அடையாளங்களையும் மறந்து ஹனியின் ஹரியாக, அவள் உதவி என்று அழைத்தும் அதை நிறைவேற்ற தவறிய குற்றவாளியாக அவள் முன்னே மண்டியிட்டான்.

“ஹரி” உடைந்தாள் அவளும்.  

அவன் முகத்தை நிமிர்த்தி அவனது கண்களில் வழியும் அருவியை துடைத்தவள் விழிகளிலும் சாகரம். அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தனது துக்கத்தைக் கரைத்து தீர்த்தாள்.

நீ கிளம்பு ஹரி. யு ஷுட் கோ. உனக்கான கடமைகள் இருக்கு” ஒரு வாரம் கடந்துவிட்டிருந்த நிலையில் எல்லோரும் அவரவர் பாதைகளில் பயணம் செய்ய தயாராகிவிட ஹர்ஷாவிடம் சொன்னாள் ஹரிணி.

அவளை எப்படி தனியே விட்டுச் செல்வது என்று மனமே இல்லாமல் சென்றான் அவன்.

உடன் இருக்கிறோம் என்று சொன்ன கல்யாணி பாரதி இருவரிடமும் மறுப்பு தெரிவித்து ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

மற்றவர்கள்  நமது சந்தோஷத்தில் உடன் சேர்ந்து மகிழலாம். துக்கத்தில் கண்ணீர் வடிக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதுமான நமது சுகதுக்கங்களை, பயணத்தின் சுமைகளை அவர்கள் மீது ஏற்றுவது நியாயம் ஆகுமா. அவரவர் பாதைகள், அதில் சிரமங்கள் என்று இருக்கும் போது இன்னொருவரை தன் வாழ்க்கையின் பாரத்தில் பங்கெடுக்க சொல்வது சரி என்று ஹரிணி எண்ணவில்லை.

பாலகிருஷ்ணனின் தொழிலை அவனது நண்பர்கள் தொடர்ந்து நடத்தி லாபத்தின் பங்கை ஹரிணியிடம் தர முடிவு செய்திருந்தனர். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தாள்.

இன்சியுரன்ஸ் என்று மிகப் பெரிய தொகையை ஹரிணியிடம் கொடுத்தனர். அதை அப்படியே தொடாமல்  வங்கியில் போட்டு வைத்தாள்.

தான் பணிபுரிந்த மருத்துவமனையில் தனது ராஜினாமாவைக் கொடுத்தாள்.

“இனி இந்த கோட்டையும் ஸ்டேதேஸ்கோப்பையும் தொடும் போதெல்லாம் அங்க டாக்டர் ஹரிணியா மட்டும் என்னால இருக்க முடியுமான்னு தெரியல பாலா. எனக்கு இனி இது வேண்டாம்” தனது ஸ்டேதேஸ்கோப்பையும் வெள்ளைக் கோட்டையும் ஒரு கவரில் வைத்து பாலகிருஷ்ணன் புகைப்படம் அருகில் இருந்த மேஜையில் பூட்டி வைத்தாள். 

ந்த வித மனக்கசப்புகள் இருந்தாலும் ஓர் துக்க நிகழ்வு அதை நீக்கி விட வலியது. அப்படி எண்ணித் தான் மனோரஞ்சனி முரளியுடன் ஹரிணியைப் பார்க்க வந்தாள்.

ஆகாஷின் உண்மையான நிறம் தெரிந்ததும் மனம் உடைந்த ரஞ்சனி அப்போது தான்  ஹரிணிக்கு தான் எவ்வளவு பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று மருகினாள்.

அச்சமயம் அவள் மேல் உண்மையான நேசம் கொண்ட முரளி அவளுக்கு ஆதரவாய் இருந்தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த தகவல்களை எல்லாம் ஹரிணி முரளி வாயிலாக அறிந்தே இருந்தாள்.

இருப்பினும் ரஞ்சனியைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை அவள்.

ரஞ்சனியும் முரளியும் துக்கம் விசாரிக்கவென ஹரிணியைக் காண வந்திருந்தனர்.முரளி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவாறு இருந்த ஹரிணி ரஞ்சனி பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

“ஹரிணி என்னை மன்னிச்சிடு” தீனமாய் ஒலித்தது ரஞ்சனியின் குரல்.

“நீங்க யார் ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்கணும்” உணர்ச்சிகளற்ற குரலில் கேட்டாள்.

“ஹரிணி என்ன எனக்கு நான் யாருன்னு புரியல” அவள் முரளியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

“எப்போ இன்னொரு பெண் மேல உன் சுயநலத்திற்காக வெகு சுலபமாய் தவறான களங்கத்தை ஏற்றி விட்டாயோ அப்போதே ஒரு மனிதப் பிறவியாக கூட உன்னை என் மனம் ஏற்க மறுத்துவிட்டது. அந்தப் பெண் நான் என்பதால் இல்லை. என்னிடத்தில் வேறு யாராக இருந்த போதும் என் நிலைப்பாடு இதுவாக தான் இருக்கும்” இனி உன்னிடம் பேச ஒன்றுமில்லை என்பது போல முரளியிடம் திரும்பிப் பேசிக் கொண்டிருந்தாள்.

“நான் செஞ்சது ரொம்ப தப்பு தான் ஹரிணி. அப்போ எனக்கு வேற வழி தெரியல” ஹரிணியின் கரங்களைப் பற்றிக் கெஞ்சினாள் ரஞ்சனி.

“ஒரு நிமிஷம் என்னோட இடத்தில உன்னை நிறுத்திப் பார். அப்புறம் சொல்லு” என்று தனது கைகளை விலக்கிக் கொண்டாள்.

தலையைக் குனிந்தபடியே ஏதும் சொல்லமால் மௌனமாய் இருந்தாள் ரஞ்சனி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.