(Reading time: 29 - 58 minutes)

ஆக்சிடன்ட் என்பதால் காவல் துறை சம்பந்தமான நடைமுறைகள் மற்றும் மருத்துவமனை நடைமுறைகள் எல்லாவற்றிற்கும் அவள் தான் சென்று கையெழுத்து போட வேண்டியதாய் இருந்தது.

“மேடம்” அவளது கைகளைப் பிடித்துக் கொண்டனர் அங்கிருந்த பணியாளர்கள்.

“மேடமோட சார்ன்னு சொன்னாங்க. எங்களால தாங்க முடியல” மருத்துவமனையில் யாரேனும் உயிரிழந்தால் உரிய முறையில் உடலை தயார் செய்து உறவினரிடம் ஒப்படைக்கும் பணியாளர்கள் அவர்கள்.

“ரொம்ப தாங்க்ஸ்” ஹரிணி அவர்களிடம் சொல்ல அனைவரின் கண்களும் அருவி.

“நான் போய் பார்க்கவா” அங்கிருந்த பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டாள்.

“ஐயோ மேடம் நீங்க என்கிட்டே பர்மிஷன் கேட்குறீங்களே” அவர் பதறினார்.

உடல் முழுவதும் வெள்ளைப் போர்வையால் சுற்றப்பட்டு முகம் மட்டும் தெரியும்படி பாலகிருஷ்ணனை பெட்டில் கிடத்தியிருந்தார்கள்.

நிம்மதியான நிறைவான ஓர் உறக்கத்தில் இருப்பது போல இருந்தது அவன் முகம். ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகின்றது என்று பார்க்கும் இடமெல்லாம் அவள் முகத்தையே கண்டவன் இன்று இமை மூடிக் கிடந்தான்.

“மேடம் வண்டிக்கு சொல்லவா” பணியாளர் ஒருவர் கேட்க கொஞ்சம் பொறுக்குமாறு அவரிடத்தில் கூறினாள்.

கல்யாணியும், வரூதினியோடு பாரதியும் மருத்துவமனைக்கு வந்து சேர சுகீர்த்தி ப்ரீத்தி மூலம் விஷயத்தை அறிந்து கதறி அழுதனர். அவர்கள் வந்துவிட்ட செய்தியை அறிந்த ஹரிணி அவர்களிடம் சென்றாள்.

“அத்தை, வேற எந்த உறுப்பையும் தானம் செய்ய முடியாது. ஆனா கண்ணை மட்டும் செய்யலாம். செய்யட்டுமா” அவள் கண்களில் ஒரு சொட்டு நீர் இல்லை. ஆனால் அவளின் குரலே கல்யாணிக்கு அவள் உணர்வுகளைக் காட்டிக் கொடுத்தது.

உள்ளுக்குள் அத்தனை வேதனைகளையும் புதைத்துக் கொண்டு வெளியில் திடமாக அவள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவர் மகன் இவ்வுலகில் இல்லை எனும் பேரிடரை காட்டிலும் ஹரிணியின் நிலையைக் கண்டு அதிகமாய் மனம் வெதும்பினார்.

சாரதாவும் ஸ்வாதிகாவும் வந்து சேர்ந்திட மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும் சாரதா பொறுப்பேற்று அவர்களின் பணியாளர்கள் மூலம் மேற்கொண்டார்.

விபத்து ஏற்பட்டு சர்ஜரியும் செய்ததால் உடல் தாங்காது என்று விரைவாகவே தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதோ சுற்றமும் நட்பும் வந்து விசாரித்து சென்று உறக்கமில்லா ஒரு இரவுப் பொழுதும் கடந்து விட்டிருந்தது.

“அப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா. துக்கத்தை மனசில அடைச்சு வைக்காதே. அழுது கொட்டித் தீர்த்திடு” கல்யாணி அவளருகில் வந்து சொல்லியும் கல் போல இறுக்கமாய் அமர்ந்திருந்தாள்.

“கொஞ்சம் இந்த ஜூஸையாவது குடிம்மா. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காம இப்படி இருந்தா என்னமா” சாரதா வந்து சொல்லிப் பார்த்தார்.

“காதல் எப்படி வரும் ஹரி”

“நான் சாதாரண மனுஷன் விதும்மா”

“யூ வில் பி ஹாப்பி வித் ஹிம்ன்னு எனக்கு நிறைவா இருக்கு”

“அவங்க நட்பு பற்றிய தெளிவு எனக்கு உண்டு”

“ஏன் பாலா காதல்னா என்னவென்று எனக்கு உணர்த்தணும் என்றே என் வாழ்க்கைப் பயணத்தில் உடன் சேர்ந்து வந்தாயா? நான் அதை பரிபூரணமாய் உணர்ந்து என் இதயம் முழுக்க நிறைத்துக் கொண்ட பின் வேலை முடிந்தது என்று போய்ச் சேர்ந்துவிட்டாயா? காதலை என்னுள் விதைத்தால் மட்டும் போதுமா பாலா. நீரூற்றி, உரமிட்டு, பாதுகாத்து பூத்துக் குலுங்கி காய்த்துக் கனிய செய்ய வேண்டாமா? அந்தக் கடமையை செய்யாமல் எப்படி  போகலாம் பாலா? இந்தக் கைகளால் உனக்கே சிகிச்சை செய்யும் படி ஆகிப் போனதே. ஒரு டாக்டராய் இருந்தும் உன்னை என்னால காப்பாத்த முடியலையே. நான் ஒரு டாக்டரா தோத்துட்டேன். உன்னைக் காப்பாற்ற தவறிட்டேன்”

அவள் மனதில் சூறாவளி வீசிக்கொண்டிருப்பதை யாருமே அறியவில்லை.

தவு திறக்க ஹாலின் நடுவிலேயே பாலகிருஷ்ணனின் மாலையிட்ட புகைப்படமும் அதன் அருகே கால்களை மடித்தபடி அமர்ந்திருந்த ஹரிணியும் தான் அவனது கண்களில் பட்டனர்.

ஹர்ஷா வந்ததும் அனைவரும் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

“ஹனி” அந்த அழைப்பில் மெல்ல நிமிர்ந்தாள் அவள்.

“அவள் அழைத்தாளே. சீக்கிரம் வா ஹரி என்றாளே. உன்னால் மட்டும் தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று கதறினாளே. வரவில்லை நான். உடனடியாக அவள் முன் தோன்றவில்லை நான், பாலாவைக் காப்பாற்ற முடியவில்லை என்னால்” அவளது கோலத்தைக் கண்டவன் மனம் சுக்குநூறாகிப் போனது.

கடைசியாக வீடியோ காலில் சர்வ அலங்காரத்துடன் மகிழ்ச்சி நிறைந்த அவள் முகத்தைப் பார்த்தவன் இன்று இந்நிலையில் அவளைக் காணவும் உடைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.