(Reading time: 44 - 87 minutes)

சில மணிநேரங்களுக்கு முன்னால் உணர்ந்திருந்த காதலை, காதலனே பொய்யென, நாடகமென கூறிய நொடியில் சரயூவின் மனது உறைந்து போனது.  அன்று அவள் வாழ்க்கையில் புகுந்திருந்த சூறாவளியில் குத்துயிரும் கொலையுயிருமாய் நுனிவேரில் நின்றிருந்த நம்பிக்கைக் கொடியை தன்னுள் சுருட்டிக் கொண்டு ஓய்ந்து போனது.

கிரணை நம்பி அவனோடு சென்றது முட்டாள்தனமென்றால், இத்தனை வருடங்களாய் இல்லாமல் இன்று ஜெய்யிடம் காதல் கொண்டது பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.  திடீரென மூச்சுக் காற்று தடைபட்டு இருட்டில் அமிழ, உலகமே மாயமாகிட, அவள் மட்டும் தனித்து விடபட்டதாக தோற்றமளிக்க மயங்கி சரிந்தாள். 

முதன்முறையாக தன் திட்டத்தில் வெற்றி கண்டிருந்த வேதிக், எந்நிலையிலும் அவளுக்கு ஜெய்யின் அன்பு கிடைத்திடக் கூடாதென்று, தான் உருவாக்கியிருந்த அந்த போலியான காணொலியை சரயூவிற்கு காண்பித்தான்.  அவன் கணக்கு சரியென்பது போல் அவளும் இடிந்து போனாள்.  இந்நிலையை மேலும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமென பழிவெறி தூண்டிவிட.... இப்போது சரயூவை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், அவனுக்கு பிடித்தவகையில் அவளை ஆட்டி வைக்கலாம்.  அதற்கேற்றார் போல் அவன் பேசிட...

பரிட்சயமில்லாத பலவுணர்வுகளை ஒரே நாளில் அறிந்து கொண்டவளுக்கு வலி வேதனை கேள்விகள் குழப்பங்கள் மலையெனக் குவிந்திருந்த வேளையில் வேதிக்கின் மனதை மாற்றும் வார்த்தைகள், அவன் சொல்வதுதான் சரியென்ற மாயையை கொடுத்தது.  நடந்தவைகளை யாரிடமும் பகிராத பட்சத்தில் தன்னால் குடும்பத்தாருக்கும் தலைக்குனிவு இருக்க போவதில்லை.  கிரணின் உடலை அப்புறப் படுத்தும் வேலையை வேதிக்கே பார்த்து கொள்வதாக சொன்ன போது மனதில் குற்றவுணர்வு தோன்றினாலும் அவனுடைய தவறுக்கு கிடைத்த தண்டனைக்கு இவள் வருந்த தேவையில்லை என அவளை நினைக்க வைத்திருந்தது வேதிக்கின் மாய வார்த்தைகள்.

மனதளவில் ஏற்பட்டிருந்த காயங்களோடு யாரிடமும் சகஜமாக பேசக்கூட முடியாமல் ஒதுங்கி கொண்டாள்.  சரயூவிடம் தெரிந்த மாற்றத்தில் குடும்பத்தாரிடம் நிலைக் கொண்ட கவலையும் கரிசனமும் அவளை மிகவும் சோதித்தது.  நடந்தவைகளை எல்லோரிடமிருந்தும் மறைப்பது அவள் நினைத்திருந்ததை போல் சுலபமாயிருக்கவில்லை.  அதுவும் அப்பாவிடம் சொல்லாது மறைப்பது பெரும் வேதனையாக இருந்தது. 

இதற்கிடையில் இவளை சந்திக்க வந்த மைத்ரீ, பின்னிருந்து கழுத்தை வளைக்கவும் விதிர்விதித்து போனாள்.  அன்றையை கிரணின் செயல்கள் மனதை ஆக்கிரமிக்க சற்று நேரத்திற்குத் தோழியை அவனாகவே கண்டவள் சுவரோடு ஒண்டினாள்.  தோழியின் இயல்பான பேச்சில் தான், மெல்ல மெல்ல வந்திருப்பது மைத்ரீயென்று மனம் புரிந்து கொண்டது.  மீண்டும் தோழியை சந்தித்து, பயத்தில் இவள் எதையாவது உளறிவிடுவாளோ என அவளிடமிருந்தும் விலகிக்கொண்டாள்.   

அதன் பிறகு சரயூவின் வாழ்க்கை அவளுடைய அறையிலேயே முடங்கிகொள்வதும், யஷ்விதாவிடம் பேசுவதும், அவ்வப்போது கைப்பேசியில் அழைக்கும் வேதிக்கும் மட்டுமாக மாறிப்போனது.  யஷ்விதா மூலமாக சரயூவின் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டும், தேவைபட்ட போதெல்லாம் பேசியும் அவளை தன்னுடைய கட்டுப்பாட்டிலியே இருக்கும்படி பார்த்துகொண்டான் வேதிக்.

எதிரியின் கட்டுப்பாட்டில் சிக்கியிருப்பதை அறியாது தன்னுடைய சுயத்தை இழந்து, சிரிப்பை மறந்து, தன்னம்பிக்கை சிதைந்து, குடும்பத்தினரோடும் சகஜமாக பழகமுடியாது தன்னையே தனிமை படுத்திகொண்டு, என்ன வாழ்க்கையிது? வெறுத்துவிட்டது.  மனம் திறந்து பேசுகையில் இதை யஷ்விதாவிடம் சொல்லிட, அன்றிலிருந்து சரயூவைத் திருமணம் செய்துகொள்ளும்படி அறிவுருத்தினாள்.  இவள் எத்தனை மறுத்தும் அவள் விடுவதாக இல்லை.  புது உறவுகள், புது சூழ்நிலையென வரும்போது  சரயூவும் பழையது மறந்து சகஜ வாழ்க்கைக்கு திரும்ப உதவிடும் என்று யஷ்விதா நம்பினாள்.  அவள் பேச பேச ஒரு சமயத்தில் யஷ்விதா சொன்னது போல் யார் யாரோ செய்த பிழைக்கு தான் ஏன் இப்படியிருக்க வேண்மென்ற கேள்வி எழுந்தபோது ஜெய்யின் முகமும் கண்முன் விரிய, தான் இன்னுமா இவனை மறக்கவில்லை? ஆச்சரியமாக இருந்தது.  காதலையுணர்ந்தத் தருணமும் அது தந்த அடிமனதின் தித்திப்பும் இன்றும் உணரமுடிவது அதிசயமாக இருந்த நொடியே அவனுடைய நாடகத்தில் இவள் ஏமாந்தது வெறுப்பாகவும் இருக்க தன்னையே வெறுத்தாள்.  நாளுக்கு நாள் அந்த வெறுப்பே ஒரு வகையான இயலாமையையும் கோபத்தையும் அவளுள் பரப்பிட... பெற்றோரின் வேதனை இவளால் கூடுவதை தாங்கமுடியாது தான் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

அன்றிரவு வேதிக்கிடமிருந்து வந்த அழைப்பு அவளின் மொத்த உயிரையும் உறிந்து குடித்துவிட்டது.  வலி அடிஉயிரில் அமிலத்தை ஊற்றிய வலி! இப்படியும் ஒருவனால் செய்ய முடியுமா? சஞ்சயால் இதையும் செய்ய முடியுமா? அவனுடைய காதல் பொய்யென அவனே சொல்லிவிட்டான் தான்.  ஆனால் நான்கு வருடம் உடனிருந்து நண்பனாக பழகியதும் பொய்யா? ஒரு நிமிடம் கூடவா அவன் உண்மையான நட்போடு இருந்திருக்க மாட்டான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.