(Reading time: 44 - 87 minutes)

‘முதல்லயே சரயூக்கு ஒன்னுன்னா குதிப்பா.  இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் இப்படி உட்கார்ந்திக்குறத நம்ப முடியலையே! ஒரு வேளை ரூபின் நினைச்ச மாதிரி இவனுக்கு ஏதாவது ஆகிருக்குமோ?’ என்று தன்னையே கேட்டபடி ஜெய்யினருகே வந்தாள் சௌம்யா.

இருக்கையின் மீதிருந்த அவன் கையை மெதுவாக அழுத்தவும் திரும்பினான்.

“சரயூக்கு ஒன்னுமில்லைனு, டாக்டர் இப்போதா சொன்னாரு சஞ்சய்.  இன்னொரு பத்து நிமிஷத்துல கண் முழிச்சிருவாளாம்.  நீ இப்படி உட்கார்ந்திருந்தா அவளுக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க? நடந்ததையெல்லா கேட்ட எனக்கே கஷ்டமாயிருக்கு.  சரயூக்கு எப்படியிருக்கும்? அவளுக்கு இப்போ நம்மோட அன்பும் அரவணைப்புதா தேவைப்படும்.  அதோட உன்னோட காதலே அவளை சீக்கிரமா குணபடுத்திடும் பாரு.  முதல்ல எழுந்து போயி முகம் கழுவிட்டு வா.  உன்னை பார்க்கவே என்னவோ போலிருக்கு.  சரயூ எழுந்ததும் உன்னைதா தேடுவா அப்போ இப்படி அழுதுவடிஞ்ச முகத்தோட இருக்காதே”

சரயூவின் மீதான ஜெய்யின் காதலை நன்கு அறிந்திருந்த சௌம்யா சூழ்நிலையை சற்று இலகுவாக்க, எதுவும் பெரிதாக நடந்திடவில்லை என்பதை போல் பேசினாள்.

வேதிக்கைத் தக்க ஆதரத்தோடு பிடித்திடும் எண்ணத்தில் இதை செய்துவிட்டு ரூபின் குற்றவுணர்வில் தவிப்பதை கவனித்திருந்தான்.    மூன்று மாதக் குழந்தையை வீட்டில் விட்டு தன்னருகில் உட்கார்ந்திருக்கும் சௌம்யாவென இருவரும் நட்புக்கு துணை நிற்க... இவர்களை போன்றுதானே வேதிக்கையும் நினைத்திருந்தான்.  ஆனால் அவன் இப்படியெல்லாம் செய்யக்கூடும் என்று இவனே அறிந்திராத போது ரூபினை குறைக்கூறுவது சரியில்லை என்பதில் எந்த பயனுமில்லை.

மறுபடியும் மனம் அவனுடைய நம்பிக்கை துரோகத்தில் வந்து நின்றது.  பழிவாங்க நினைத்தவன், சரயூவிடம் நேருக்கு நேர் மோதியிருக்க வேண்டுமேயன்றி இப்படி முதுகில் குத்தியிருக்க வேண்டாம்.  அவளுக்கு மட்டுமா செய்திருக்கிறான்.  இவர்கள் அனைவரையும் அல்லவா நட்பென்ற பெயரில் ஏமாற்றிவிட்டான்.  நினைக்கியிலேயே நெஞ்சு கொதித்தது.  அவனை விட தற்போது சரயூவும், இவனுக்காக வந்து நிற்கும் தோழர்களும் முக்கியமென்று வன்மத்தை ஒதுக்கிவிட்டு முகத்தை அலம்பிக் கொண்டு வந்தான் ஜெய்.

அறையில் நுழைந்து மனைவியின் கையை பிடித்தபடி அவள் கண்விழிக்கும் தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.  சற்று நேரத்தில் கண் திறந்தவள் ஜெய்யை பார்த்ததும் மெலிதாக சிரித்தாள்.  மூளைக்கு விஷமேறியதால், கைகால்கள் செயல்பட இன்னும் சில தின மருத்துவத் தேவையிருந்தது.  அவளுடைய சிரிப்பைக் கண்டவனுக்கோ போன உயிர் திரும்பி வந்து உடலோடு ஒட்டிக்கொண்ட உணர்வு. 

“சஞ்சு... என்னை மன்னிசிருடா!” என்று முடிக்குமுன்னே குரல் உடைந்தது.

சாலையில், பள்ளியில், பேருந்தில், மார்க்கெட்டில், மாலில் என எத்தனையோ சிறு தவறுகளை தட்டிகேட்டிருக்கிறாள் சரயூ.  ஆனால் அவளே மறந்துவிட்டிருந்த ஒரு சம்பவம், சூறாவளியாக தன்னுடைய வாழ்க்கையை தாக்குமென்றோ அவளின் செயலுக்கு இப்படியொரு பின்விளைவு வரக்கூடுமென்றோ கனவிலும் நினைத்திருக்கவில்லை.  அதுவும் தவறான ஒருவனை நம்பி, தன்னை உயிருக்கும் மேலாக தாங்கும் இவனை இழக்கவிருந்தாளே.  மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை எதையும் திருப்பிவிடாது என்பதை அறிந்திருந்தாலும் அகத்தை அரிக்கும் அவளுடைய செயலை குறைத்திடுமென நம்பினாளோ! 

“உன்னை மன்னிக்குற அளவுக்கு நீ ஒன்னும் செய்யலைடா.  எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத சரூ” என்றவனின் கை இப்போது அவள் தலையை தடவியது.

இவனையா கொல்லத்துணிந்தேன்? அப்பழுக்கற்ற இவன் காதலையா பொய்யென்று நினைத்தேன்?

மனதிலெழுந்த வலி கண்களில் கண்ணீரைப் பெருக்க... பார்வை மட்டும் அவன் முகத்தில் பதிந்திருந்தது.

தன்னுடைய உடல்நிலையை நினைத்து வருந்துகிறாளாக இருக்குமென்று நினைத்தவன்,

“உனக்கு ஒன்னுமில்லடா சரூ! பாரேன் இன்னும் ஒரே வாரத்துல நீ பழைய மாதிரி ஆயிடுவியாம்.  நாம வீட்டுக்கு போயிட்லாம்” ஒரு மாத கால சிகிச்சையை இங்கிருந்து பெற வேண்டுமென்பதை மறைத்து, ஜெய் சமாதானம் சொல்லவும், அவளுக்குள் பாரமேறியது.

எந்த முகத்தோடு அந்த வீட்டிற்குள் செல்லுவாள்? அவனைக் கொல்ல தானே திருமணம் முடித்து அங்கு அடியெடுத்து வைத்தாள்.  புகுந்த வீட்டிற்குள் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகளிருக்கும்.  ஆனால் இவளுக்கோ ஒரே லட்சியம்தான் இருந்தது.  அது கொண்டவனை கொன்றுவிடுவதாயிற்றே! மறுபடியும் அதே வீட்டிற்குள் இவளால் சகஜமாக இருந்திட முடியுமா?

சரயூவிடமிருந்து பதில் வராது போகவும்... “என்னடா யோசனை? எதை பத்தியும் கவலை படாத.  எல்லா சரியா நடக்கும்” என்றவனுக்கு திடீரென அவள் பெற்றோரின் நினைவு வர, தாயைத் தேடுகிறாளோ என்று தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.