(Reading time: 44 - 87 minutes)

கிரணின் செயல் அரக்கதனமென்றால், அக்கொடிய செயலை செய்யத் தூண்டிய ஜெய்யை எதில் சேர்ப்பது.  அப்படிதான் அவனுக்கு தன்னை பழிவாங்கும் வெறியிருந்தாலும் இவ்வழியை தேர்ந்தெடுக்காமல் தன்முன் வந்து நேருக்குநேர் மோதியிருக்கலாமே.  பெண்ணை பழித்தீர்க்க இந்த சமுதாயத்தில் எல்லோருக்கும் தோன்றும் கேவலமான வழி இதுவே.  சில நாட்களுக்கு முன்பு கூட அவன் நினைவு இவளைவிட்டு மறையாமலிருப்பதில் வியந்திருந்தவளுக்கு இப்போது மொத்தமாக வெறுத்துவிட்டது. 

கிரணிடமிருந்து தப்பிக்கும் நோக்கோடு மட்டுமே அவனை தாக்கிவிட்டு.. அதற்காக இன்றளவும் வருந்திக் கொண்டிருந்தவளுக்கோ, அதற்கு காரணமான ஜெய்யை நினைக்கையில், எரிமலையாக கொதித்து சீறிப்பாய்ந்தது கோபம்.  செய்வதறியாது அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.  என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? ஒரே கேள்வி குடைய பித்து பிடித்தவள் போல் விடிய விடிய விழித்திருந்தவளுக்கு தோன்றிய ஒரே வழி, அவனுடைய முடிவு அதுவும் அவள் கைகளில்.

அடுத்து எப்படி இவளெண்ணத்தை நிறைவேற்றுவது என்று யோசித்திருக்கும் போதுதான் வடிவு, ஜெய்யோடு அவளின் திருமணத்திற்கு சம்மதத்தை கேட்க...

சரயூ! உனக்கு என்ன தோனுதோ அதை சொல்லுடா... யாரு என்ன சொல்றாங்கங்கறது எல்லா முக்கியமில்ல...நீ தைரியமான பொண்ணு! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு...நீ சரியான முடிவைதா எடுப்ப”  

ராகுல், தங்கையின் நன்மைக்காக சொன்ன வார்த்தைகள், இவளின் திட்டத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைய, திருமணத்திற்கு சம்மதித்தாள்.

குலதெய்வ வழிப்பாடு முடித்தன்று அத்தனை தூரப் பயணக்களைப்பில் ஜெய் அசந்து தூங்கும் வேளையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள்.  ஒருவனை கொன்றுவிட்டு தவிக்கும் குற்றவுணர்வும், அதற்கு காரமாண ஜெய்யும் அவனுடைய நம்பிக்கை துரோகமும் சரயூவை மறுமுறை கத்தியெடுக்க வைத்தது.  சத்தமில்லாது பூனை போல் நடந்து வந்து, அவனைக் கண்ட நொடி நெஞ்சில் விரிந்த கிரணின் ஈனச்செயலில் உக்கிரமாகக் கத்தியை ஓங்கியதுதான்.... காரணமேயின்றி தாவி வந்து அவளை பற்றிக்கொண்ட பதற்றத்தில் தள்ளாடியது உடல்.  உள்ளத்தின் உள்த்தட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவன் மீதான நேசம் விழிவிரித்தது.  ஆழ்க்கடலின் முத்தாக கோபத்தின் பின் மறைந்திருந்த காதல் திடீரென ஒளிர்ந்து பளபளக்க அதில் அடங்கிவிட்டது அகத்தின் பழிவெறி.  சட்டென அங்கத்தை ஆக்கிரமித்த காதல் வலியில் ஆட்டம்கண்டது கைகள்.

‘என்ன செய்யவிருந்த நான்? அன்னைக்கு ஒருத்தனை கொன்னது போதாதா? கிரணை அனுப்பியது இவனாவே இருந்தாலும் இவனைக் கொல்ல நான் யாரு? நான் இதை செய்யமாட்டே.  இவனோட காதல் நாடகமா இருந்திருக்கலாம், ஆனா என்னோடது இல்லயே.  முதன்முதலா காதல உணர்ந்தப்போ எத்தனை சந்தோஷமாயிருந்தது.  அதை எனக்கு கொடுத்தவனை என்னால கொல்ல முடியாது... முடியவே முடியாது! இது என்னால முடியாது!’

பேச்சு மூச்சின்றி மடியில் கிடக்கும் மனைவியைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கினாலும், வேதிக்கின் மீதான கோபத்தில் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய், முகமெல்லாம் சிவக்க உடலிறுக உட்கார்ந்திருந்தான் ஜெய்.

போகவிருக்கும் உயிரோடும், நெஞ்சில் நிறைந்திருக்கும் கணவனின் நினைவுகளோடும் போராடிக் கொண்டிருந்தவளின் இதழ்கள் அசைவதைக் கண்டவனுக்கு மொத்தமும் உருகியது.  குனிந்து காது கொடுக்க,

“சா...ரி.. சஞ்சு”

அவளை அள்ளி நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டவனுக்குள் எண்ணிலடங்கா தவிப்பு.

‘அய்யோ! என்னடி ஆச்சு உனக்கு? நானும் நீயும் ஒன்னுடி....நீ உங்கிட்டயே மன்னிப்பு கேட்பியா? எங்கிட்ட மன்னிப்பு கேட்குற அளவுக்கு அந்நியமா போயிட்டனா? அப்படியேனாலும் இந்த நிலைமைல கூட எங்கிட்ட மன்னிப்பு கேட்குற அளவுக்கு நீ எதையுமே செய்யலயே.  மனசுல என்னத்தை வச்சிட்டு இப்படி புலம்புறயோ? எல்லாத்தையும் மறந்துட்டு நீ எழுந்து வந்துட்டாலே போதும்டா.  நீ உன்னோட சுயத்தை இழக்குறதுக்கு காரணமான அந்த வேதிக்கை நான் என்ன செய்யுறனு பார்க்கவாவது நீ எழுந்து வரனும் சரூ!’ கண்களை மூடி மௌனமாக தன் மனதின் எண்ணங்களை உயிரில் கலந்துவிட்ட காதலிக்கு பரிமாற்றினான்.   

காரை ஓட்டிக்கொண்டு, அவ்வப்போது கண்ணாடி வழியாக இவர்களை கவனித்துக்கொண்டிருந்த ரூபின் ஜெய்யின் இச்செயலில் தன்னால் தானோ இந்நிலை என்று வருந்தினான்.

வேதிக் துப்பாக்கியை அழுத்துமுன் ரூபினின் துப்பாக்கி அவன் கையை பதம் பார்த்திருந்தது.  உடனடியாக காவல்துறையினர் அவனை சுற்றிவளைத்து பிடித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.