(Reading time: 44 - 87 minutes)

“சொல்லு சரூ...எனக்காக தானே?! நான் கேட்காமலேயே எனக்கு என்ன வேணும்னு புரிய போய் தானே இதை எடுத்துட்டு வந்த? அப்போ என் மனசு மட்டும் உனக்கு புரியாத மாதிரி நடிக்காதடி.  நீயில்லாம நான் நல்லாயிருப்பேனு உனக்கு தோனுதா சொல்லு... நடந்ததையெல்லா மறந்துடு சரூ! நாம நமக்காக மட்டும் புதுசா ஒரு வாழ்க்கைய தொடங்கலாம்.  அப்றம் அன்கண்டிஷ்னல் லவ் மட்டும்தா” கண்களில் கனவுமின்ன ஜெய் சொல்லிட..

“உண்மை தெரிஞ்சா நீ இப்படியெல்லா பேசமாட்ட சஞ்சு” என்றவளின் குரலில் தெரிந்த மாற்றத்தில் திகைத்தான்.

“நீ ரொம்ப நல்லவ சஞ்சு! உன்னோடது உண்மையான காதல்.  ஆனா அந்த காதலுக்கு நான் தகுதியானவ கிடையாது.  நம்ம கல்யாணமே பழிவாங்குறதுக்காக நடந்தது.  ஒருமுறை உன்னை கொல்ல முயற்சி செய்த” என்றவள் அவனை ஏறிட, அவனிடத்தில் எந்த மாற்றமுமில்லை.

புதிதாக எதையோ எதிர்பார்த்திருந்தவனுக்கு சரயூவின் வார்த்தைகள் சிறு துளி நிம்மதியளித்து.

கணவனுக்கு இது தெரிந்தால் துடித்துவிடுவானென்று நினைத்திருந்தவளுக்கோ அவனுடைய அமைதி குழப்பத்தை தந்தது.  தான் சொன்னதை ஜெய் நம்பவில்லையோ என்று நினைத்தவள், “நான் உண்மையைதா சொல்ற சஞ்சு!” எனவும்..

“தெரியும் சரூ!” என்றவன் மிகவும் அமைதியாக.

எந்த காரணத்திற்காக அவனை பிரிய நினைத்தாளோ அதை அவன் அறிந்திருந்தான்.  அதைக் குறித்து கேள்வியேதும் கேட்காது இப்போதும் அவளுக்காக அவளின் காதலுக்காக மட்டுமே காத்திருக்கிறான்.

“தெரிஞ்சுமா இங்க வந்திருக்க சஞ்சு?!” என்று விழிகள் விரிய ஆச்சரியமாக கேட்டவளை பார்த்து மென்னகை பூத்தவன்,

“அன்னைக்கு என்னோட ரூமிற்கு நீ வரவும் நம்மோட வாழ்க்கை மலர்ந்திடும்னு நினைச்சு ஏமாந்து போனது உண்மைதா.  ஆனா கத்தியை தலைக்கு மேல கொண்டு போனவ அப்படியே கீழே உட்கார்ந்து அழுதப்போதா ரொம்ப சந்தோஷமா இருந்தது!”

இவன் என்ன குழப்புகிறான்.  தன்னை ஒருத்தி கொல்ல வந்திருக்கையில் மகிழ முடியுமா?!

“என்ன அப்படி பார்க்குற சரூ? அந்த சம்பவம்தா உன்னோட காதலின் ஆழத்தை எனக்கு உணர்த்துச்சு.  ஏதோ ஒரு காரணத்துக்காக கொல்ல நினைச்ச, ஆனா உன்னால அது முடியல.  காரணம் உன் மனசுல எனக்கான இடம்”

இவளுடைய கொலை முயற்சியை இப்படியும் பார்க்க முடியுமா என்று வியந்திருக்கையில்

“இப்போவாவது புரிஞ்சுக்க சரூ!” என்று மீண்டும் தன் காதல் மன்றாடலில் வந்து நின்றான்.

“உனக்கு புரியலையா? நான் உன்னை கொலை பண்ணியிருப்ப சஞ்சு” என்று கொலையில் அழுத்தம் கொடுத்து அவனுக்கு புரியவைத்துவிடும் நோக்கோடு சரயூ சொல்ல..

“கொலை பண்ணலயே! அதுக்கு காரணமான காதலை உனக்கு புரியலையா?” அவள் கேள்வியை அவளுக்கே திருப்பினான்.

இவனென்ன புரிந்து கொள்ளாமல் பேசுகிறான்.  இன்றில்லை நாளை கணவன் மனைவிக்கிடையே ஒரு சிறு சண்டையோ கருத்து வேறுபாடோ வந்தால் இது தானே முதலில் நினைவிலாடும்.  எதையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக தன்னுடைய முடிவிற்கு திரும்ப திரும்ப வந்து நிற்கிறான்.

“நமக்குள்ள ஒத்துவராது! ஒன்னா சேரந்து வாழவும் முடியாது” சரயூ தீர்மானமாக முடித்திட...

“இதுக்கு பதில் அன்னைக்கே என்னை நீ கொன்னிருந்தா கூட உன் கையால செத்த சந்தோசத்துல நிம்மதியா போய் சேர்ந்திருப்பே.  ஆனா பிரிவை பத்தி பேசி என்னை ரொம்ப கஷ்டபடுத்துற சரூ!” என்றவனின் பாவமான குரலில் உருகியது இவளுள்ளே.

அதை வெளிக்காட்டாது அமைதியாக ஜன்னலை வெறித்தாள்.

அவளையே பார்த்திருந்தவன், “சொல்ல வேண்டியதை சொல்லிட்டே! இன்னமும் நாம சேர்ந்து வாழ முடியாதுனு தோனிச்சுனா இந்தா பிடி” என்றபடி அவளை நெருங்கியவன், பழக்கூடையிலிருந்த கத்தியை எடுத்து அவளிடம் நீட்டி, “அன்னைக்கு செய்யாம விட்டதை இப்போ செய்துட்டு நிம்மதியா இரு.  நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியாது.  குறைந்த பட்சம் உன்னால என்னோட உயிர் பிரிஞ்சதுன்ற சந்தோஷத்தையாவது எனக்கு கொடு சரூ” என்றுவிட்டு ஆழமாக அவளை பார்த்தான்.

அவளில்லாமல் அவனில்லை என்று சொல்லிவிட்டான்! இவளுக்கும் அதே நிலைதானே! அவனில்லாமல் அவளுக்கு மட்டும் ஏது வாழ்க்கை? அவனுடைய காதலுக்கு அவள் தகுதியினாவளல்ல என்ற எண்ணம் மறைந்து மெல்ல மெல்ல அவன் காதலுக்கு அவளையடைய எல்லாத் தகுதியும் இருக்கிறதே என்று சிந்தையுணர்த்த... ஜெய்யின் நேசப் பார்வை உள்ளத்தை ஊடுருவி உயிரை தொட்ட கணம், கையிலிருந்த கத்தியை தட்டிவிட்டு, அவனைப் பாய்ந்து கட்டிக்கொண்டு அழுது கரைந்தாள்.

“நீயென்ன லூசாடா! இன்னொரு முறை உன் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்துச்சு, நான் என்ன செய்வேனே தெரியாது” என்ற அவளுடைய வார்த்தைகளே மனமாற்றத்தை உரைத்திட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.