(Reading time: 29 - 58 minutes)

அவள் முதலில் தமிழில் சொல்லவும் ஓர் ஆச்சரிய மின்னல் அவனிடத்தில். ஆனால் உடனே மொழிபெயர்த்து வட்டார மொழியிலேயே உரையாடவும் சற்றே குழப்பம் அடைந்தான்.

“வாங்க உட்காருங்க” என அங்கிருந்த ஸ்டூலில் அமரச் சொன்னவள், “மூச்சு வாங்குதா, இதயம் படபடவென்று அடித்துக் கொள்கிறதா, எப்போது இருந்து” என்று கேட்டுக் கொண்டே அவன் புஜத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியைப் பொருத்தினாள்.

ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பையும் காட்டும் கருவியை  விரலில் மாட்டி விட்டாள்.

அது வரை அவனுக்கு எல்லாம் சீராகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நிஜமாகவே சுவாசம் தடைப் பட்டது போல உணர்ந்தான். அட்ரீனலின் ஊற்றென பொங்கி அவன் நாடி நரம்புகளில் எல்லாம் பாய்ந்து அவனது இதயத்தை குதிரையின் வேகத்தில் துடிக்கச் செய்தது.

அவளோ அனைத்தையும் குறித்துக் கொண்டாள்.

“இதயத் துடிப்பு அதிவேகமாக இருக்கே” என்று யோசித்தவள் ரிஜிஸ்டரைப் பார்த்தாள். அதில் வேறு ஏதும் குறிப்புகள் இல்லை. சரி எதற்கும் இதயத்தைப் பரிசோதனை செய்து விடலாம் என்று எண்ணியவள்

“உங்க ஷர்ட் பனியன் எல்லாம் கழற்றி விட்டு அந்த பெட்ல படுங்க. எகோன்னு (ECHO) ஒரு டெஸ்ட் அது செய்யணும்” என்றவாறே எகோ செய்யும் மெஷினை உயிர்ப்பித்தாள்.

அவன் மறுப்பாய் தலையசைத்து ஏதோ சொல்ல வர

“ரகு, பயப்படாதீங்க, இது வலிக்காது. உங்க இதயத்தை இந்த டிவில பார்க்கலாம்” அவள் சொல்லவும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதைப் போல அவள் சொல்லியபடி செய்தான்.

அவன் உடம்பில் ஈசிஜி ஸ்டிக்கரை ஒட்டி வயர்களைப் பொருத்தினாள்.

திரைச்சீலையை இழுத்து விட்டவள் பெரிய விளக்குகளை அணைத்து விட்டு எகோ மெஷின் முன்பு ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

பக்கவாட்டில் படுத்திருந்தவனை அவளை நோக்கி ஒருக்களித்து படுக்குமாறு அவள் சொல்லவும் சற்றே திணறித் தான் போனான்.

அவன் அசையாது இருக்கவும் அவன் தோளைப் பற்றி அவளை நோக்கித் திருப்பியவள் அவனது இடது கரத்தை தலைக்கு முட்டுக் கொடுத்து வசதியாக படுத்துக் கொள்ளுமாறு சொன்னாள்.

ஸ்கேன் கருவியை அவன் மார்பில் வைத்தபடியே மானிடரைப் பார்த்திருந்தாள்.

“விண்டோ இஸ் நாட் க்ளியர். ஸ்ஸ்ஸ்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் அவன் மார்பின் முடி காரணமாக சற்று தெளிவாக தெரியவில்லை ஆதலால் கொஞ்சம் அழுத்திப் பார்ப்பதாகவும் வலி இருந்தால் சொல்லுமாறு சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காமல் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜெல்லியைத் தடவி ஸ்கேன் செய்வதை தொடர்ந்தாள்.

அங்கே படுத்திருந்தவன் ஓர் இளைஞன். திடமான ஓர் ஆண்மகன் என்ற நினைப்பே அவளுக்கு இல்லை. அவனது இதயம் ஒன்றே அவள் சிந்தனையில் இருந்தது.

மானிடரில் தெரிவதை உற்றுப் பார்த்த அவள் விழிகளையும், அவ்வப்போது சுருங்கிய புருவங்களையும், இடையிடையே ஒன்றும் கஷ்டமாக இல்லையே என்று கனிவோடு கேட்ட அவள் இதழ்களையும் இமை தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்க ஹார்ட் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கு” புன்னகையுடன் சொன்னவள், “உங்க பிரச்சனைக்கு வேற காரணம் இருக்கலாம். அது இன்னும் சில டெஸ்ட் செய்து பார்த்தா தான் தெரியும்” அவள் சொல்ல

“காரணம் டெஸ்ட் செய்யாமலே நான் அறிவேன்” மௌனத்தில் மொழிந்தான் அவன்.  

ப்போது கதவு திறக்கும் ஓசை கேட்கவும், அந்த ரோல்லிங் சேரை சற்று பின்னால் நகர்த்திப் பார்த்தவள் “ஹரி, இங்கே இருக்கேன்” என்றாள்.

“இன்னும் நீ பேஷன்ட்ஸ் பார்த்து முடிக்கலையா” கேட்டுக் கொண்டே அவன் உள்ளே வர

“இவர் தான் லாஸ்ட். லேட்டா வந்தார். எகோ பார்த்துட்டு இருக்கேன். வா வந்து பாரு” என்று அவள் சொல்ல

“இரு கை கழுவிட்டு வரேன்” என்றான்.

“டாக்டர் ஹர்ஷவர்தன், பெரிய டாக்டர். அவர் வந்து செக் செய்வார். சரியா ரகு” அவள் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே வந்த ஹர்ஷா நேராக சேரில் அமர்ந்திருந்த ஹரிணியின் பின்னால் நின்று கொண்டு அவள் தோள் மீது ஒரு கரம் வைத்து சற்றே குனிந்து மானிடரை நோக்கினான். வேறெதுவும் அவனது கவனத்திலும் பதியவில்லை.

“செஸ்ட்ல ஹேர் இருந்ததால் விண்டோ க்ளியரா இல்லாம இருந்தது. ரொம்ப கோ ஆபரேட் செய்தார். அப்புறம் எல்லா வியூஸ்ஸும் நல்லா வந்தது” என்றவள் தான் எடுத்த படங்களை திரையில் ஓட்டிக் கொண்டே வந்தாள்.

“லுக் ஹொவ் பியூடிபுள் ஹிஸ் ஹார்ட் இஸ்” என்று மானிடரைப் பார்த்துக் கொண்டே மலர்ந்து அவள் சொல்ல அவளையே பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தவன் இதழ்களில் ஓர் மந்தகாசப் புன்னகை.

ஹர்ஷாவும் ஹரிணியும் திரையில் இருந்த படங்களைப் பார்த்து விவாதிக் கொண்டிருக்க இருவரையும் ரசனையோடு பார்த்திருந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.