(Reading time: 29 - 58 minutes)

ஹரிணியின் நெற்றியில் வெப்பமாய் ஓர் துளி பட்டுத் தெறிக்க தலையை நிமிர்த்தாமலேயே கேட்டாள்.

“அழறியா”

“ஹ்ம்ம்”

“ஹிஸ் ஹைனஸ் பிரின்ஸ் ஹர்ஷவர்தன், தி கிரேட் ஹார்ட் சர்ஜன் டாக்டர் ஹெச்எஸ்ஆர் ஒரு புடவை வாங்கித் தர சொன்னதுக்கு அழறார்ன்னு தெரிஞ்சா எல்லோரும் என்ன நினைப்பாங்க” அவனது மனநிலையை உணர்ந்தவள்  அவனை சகஜமாக்க முயன்றாள்.

“அவங்க கிட்ட எல்லாம் நீ கேட்கலையே. ஹரி கிட்ட தானே கேட்ட. அதனால யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க” இப்போது நெகிழ்வது அவள் முறையாகிப் போனது.

மற்றவர் பார்வைக்கு அவள் கேட்டது ஒரு புடவை. ஆனால் இதுவரை யாரிடமும் ஏன் கடவுளிடமும் தனக்கு இது வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையுமே கேட்காதவள் ஒரு புடவையை கேட்கிறாள் என்றால் அதன் ஆழ்ந்த அர்த்தம் அவன் மட்டுமே அறிவான் அல்லவா.

“பெரிய பிரின்ஸ்ஸாம் பிரின்ஸ். பிரின்ஸ் பீன்ஸ்ன்னு” பதினாறு வருடங்கள் முன் எந்த இடத்தில் சொன்னாளோ அதே இடத்தில் மன்னனாய் அவனுக்கு மகுடம் சூட்டவே.

அன்று பிரின்ஸ் ஹர்ஷவர்தனாய் அவன் வாங்கிக் கொடுத்த ஒரு காபியை நிராகரித்தவள் இன்று ஹரியாய் அவன் வாங்கிக் கொடுக்கும் புடவையை அணிந்து அவனுக்கு அங்கீகாரம் அளிக்கவே.

பதினாறு ஆண்டுகளின் அர்த்தம்  அவள் கேட்ட புடவையில் அடக்கம் என்று அவன் மட்டுமே அறிவான் அல்லவா.

அங்கே அலையின் ஓசை மட்டுமே ஒலித்திருக்க இருவரின் மனதும் நிர்மலமான ஓர் அமைதியில் நிறைந்திருந்தது.

“ஹரி, ஏதாவது பாடேன்"

அவள் கேட்க சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின் மெல்லப் பாடினான்.

“பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு

தோயுமது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா”

அவன் முழுப் பாடலையும் பாட இமை மூடியபடியே அதில் லயித்திருந்தாள். 

“இந்தப் பாட்டு பாரதி அவரோட கண்ணம்மாவுக்காக பாடியது”

‘அவரோட கண்ணம்மா’வில் ஓர் அழுத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவளோடு இணைந்து சிரித்தவன், அவளது தலையை இதமாய் வருடிக் கொடுத்தபடியே அவனின் அவளுக்காகப் பாடினான்.

“ஹனியடி நீ எனக்கு; என்றும் ஹரி நான் உனக்கு”

பின்னுரை

மழை!!!

வானத்து இடியோசை செவிகளில் தாளமாய், நிலத்தின் மண்வாசம் நாசிகளில் சுவாசமாய், சில்லென்ற தென்றலில் தேகம் சிலிர்க்க, அந்தி மாலை கருமையைக் கண்கள் தீட்டிக் கொள்ள வானில் இருந்து துள்ளி குதித்து தாவி வரும் மழையை  இரு கரம் கொண்டு ஆரத் தழுவிடவே, மலரிதழ் முத்தம் ஒன்று பதித்திடவே...

அந்த அரங்கத்தின் வாயிலை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்  அவள்.

உள்ளங்கையை விரித்து வான் நோக்கி அவள் முகம் நிமிர்த்திட சரியாக அக்கணம் முதல் மழைத்துளி அவள் இதழ்களில் ஸ்பரிசம்.

மழையின் தீண்டலில் அவள் மழலையாகி உருகிவிட, மனம் நிறைந்த மகிழ்ச்சியில் கன்னம் குழிய, அந்தக் கார்கால இருளில் வதனம் ஒளிர மெல்லத் திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 

மார்பின் குறுக்கே இருகைகளைக் கட்டியபடி தளர்வாய் தூண் ஒன்றின் மீது சாய்ந்து கொண்டிருந்தவனின் கம்பீர நீண்ட தேகத்தின் தீட்சண்யமான இருவிழிகள் அவளின் பூரிப்பில் கனிந்திட அவன் உதடுகளோ அவள் புன்னகையைப் பிரதிபலிக்கும் வண்ணம் மலர்ந்து மகிழ்ந்தன. சிறிது நேரத்தில் சோவென ஆரவாரமாய் மழை நர்த்தனமாட சற்றே தள்ளி நின்று அணுஅணுவாய் அதன் எழிலை ரசித்து தன் கண்கள் வழியே நினைவுகளில் நிறைத்துக் கொண்டவள்  அழகான புன்னகையைத் தரித்தபடியே அவனை நோக்கி நடந்து வந்தாள்.

அவள் மெல்ல மெல்ல முன்னேற அவன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

அவளை முதன்முதலாக அவன் பார்த்ததும் இதே இடத்தில் தான். அன்றும் இது போலவே மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் போலும்.

அன்றைய நாளில் அவனுக்கு அவள் யாரோ எவரோ! அவன் நினைவுப் படுகைகளில் தெளிவற்ற நீராவியாய்!!!

சில வருடங்களுக்குப் பின் இதே இடத்தில் தான் இது போலவே ஒரு மழை நாளில் தான் பாலைவனத்தில் உயிரூற்றாய் அவன் வாழ்வில் அவள் பிரவாகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.