(Reading time: 29 - 58 minutes)

தே நேரம் அந்த மழையிலும் ஹர்ஷவர்தன் ஹைவேயில் காரை சற்று அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“ஷாஸா, மெதுவா ஓட்டுங்க, விதுக்கா கிட்ட சொல்லிடுவேன்” ஸ்வாதி ஹரிணியின் பெயரைச் சொல்லி மிரட்டவும் வேகத்தைக் குறைத்தான். 

ஏர்போர்ட்டில் தனது அன்னையையும் ஸ்வாதியையும் எதிர்ப்பார்த்து நின்றவன் யாரோ தன் கண்களை பின்னாலிருந்து எம்பி பொத்த ஆனந்தத்தில் திரும்பினான்.

“பூரி மசாலா” பூர்வியை அன்போடு அணைத்துக் கொண்டான்.

“என்ன அண்ணா அவனைப் போலவே நீங்களும் என்னை பூரி மசாலான்னு கூப்பிடறீங்க” செல்லமாய் சிணுங்கினாள்.

“நீ எப்படி இங்க, கூட்டணி இல்லமா சிங்கிளா வந்திருக்க”

“அப்பாவும் பிள்ளையும் என்னை டீல்ல விட்டுட்டு ஊர் சுத்த போயாச்சு, நான் ஜெய்பூர் போயிட்டு  சாரதாம்மா ஸ்வாதி கூட தான் வந்தேன். உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் சொல்லலை. அவங்க லக்கேஜ் எடுத்துட்டு இருக்காங்க. அதோ”  

இவளுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது என்றால் யாரும் நம்புவார்களா என்று நினைத்துக் கொண்டே ஹர்ஷா முன்னேறி  செல்ல ஸ்வாதிகா ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவள் அப்படி திடீரென ஓடி வந்து அணைக்கவும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றாலும் தன்னியல்பாய் அவளை தன்னோடு சேர்த்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“ஷாஸா பாபாவும் பூபாஸாவும் பழசை எல்லாம் மறந்து ஒன்னா  சேர்ந்துட்டாங்க. நம்ம ஷாதீக்கு (திருமணத்திற்கு) சீக்கிரமே தேதி குறிக்க போறாங்க” அவன் மார்பில் புதைந்தவாறே சந்தோஷக் கண்ணீரோடு சொன்னாள் ஸ்வாதி.  

அவள் சொல்ல சொல்ல ஹர்ஷாவின் கரம் ஸ்வாதியை இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

“ஹும் ஹூம். பப்ளிக் பப்ளிக்” பூர்வி குரல் கொடுக்க ஸ்வாதி மெல்ல விலகினாள்.

ஸ்வாதியின் கரம் பற்றிய ஹர்ஷா அவளோடு சேர்ந்து சாரதாவின் பாதம் பணிந்தான். இருவரையும் அன்போடு அணைத்துக் கொண்டார் சாரதா.

“எல்லாம் பூர்வியோட சாமர்த்தியம் தான் ஹரி, பூர்வி தான் பேசி இருவரையும் சமாதானம் செய்து வைத்தாள்” சாரதா சொல்லவும்

“இந்த பூரி மசாலா இவ்வளவு செஞ்சிருக்காளா. தி கிரேட் சைக்காலஜிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்ட டா பூரி” பூர்வியின் தலையை செல்லமாக வருடிக் கொடுத்தான் ஹர்ஷா.

“உங்க பெரியாப்பாவும் மாமனாரும் பார்க்கணுமே, ஒரே எமோஷன்ஸ் தான். ஒரே பீலிங்க்ஸ் தான். மாமன் மச்சான் சென்டிமன்ட்டோட சம்பந்தி சென்டிமன்ட்டும் சேர்ந்திடுச்சா.. அப்பபப்பா...நீங்க மிஸ் செய்துடீங்க அண்ணா” பூர்வி ஏற்ற இறக்கங்களோடு சொல்ல, “என் பாபாவையும் பூபாஸாவையும் கிண்டலா செய்யுற” என ஸ்வாதி அதட்ட ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்வுகளை இருவரும்  மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தனர்.

“ஆமா நீங்க இன்னும் ஸ்வாதிகிட்ட ஐ லவ் யூ கூட சொல்லலைன்னு கேள்விப்பட்டேன்” என சற்று கேலியாக பூர்வி கேட்க காரை ஓட்டிக் கொண்டிருந்த ஹர்ஷா பக்கவாட்டில் அம்ர்ந்திருந்த ஸ்வாதியைப் பார்த்து புருவம் உயர்த்த அவளோ பின்னால் திரும்பி பூர்வியை முறைத்தாள்.

“அதெல்லாம் ஷாஸா வாய் வார்த்தையால சொல்லணும்ன்னு அவசியம் இல்ல, நாங்க மனசுக்குள்ளேயே சொல்லிப்போம்” என்றவள், ‘சரி தானே’ என ஹர்ஷாவைப் பார்த்து கண்ணசைவில் கேட்க அவனும் இமை மூடி  புன்னகைத்தான்.

இவை அனைத்தையும் கவனித்த சாரதாவின் மனம் பூரிப்பில் நிறைந்தது. பெரியவர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டு அதற்காக பாடுபட்டு பொறுமையுடன் இத்தனை வருடங்கள் காத்திருந்த இருவரையும் எண்ணிப் பெருமை கொண்டார்.

“பங்க்ஷனுக்கு சதுண்ணா வராங்களா இல்லையா ஹர்ஷாண்ணா” பூர்வி கேட்க

“தெரியல, திரிச்சூர்ல போட் ரேஸ் போயிட்டு இருப்பான். ஹாஸ்பிடல் திறக்கும் போது தான் வரலை. ஆல்ப்ஸ்ல பனியில் சறுக்கிக்கிட்டு இருக்கேன்ன்னு சொன்னான். இன்னிக்காவது வருவான்னு பார்த்தேன்”

“சதுண்ணா காற்று போல. ஒரு இடத்தில  பிடிச்சு வைக்க முடியுமா என்ன” பூர்வி வக்காளத்து வாங்கினாள்.

“சரி வீடு வந்திருச்சு இறங்குங்க, அம்மா ஹரிணி கேம்ப்ல இருக்கா போய் கூட்டிட்டு வந்திடறேன்” சாரதாவிடம் சொல்லிவிட்டு கேம்ப் நடக்கும் இடம் நோக்கி காரை செலுத்தினான்.

ங்கே கேம்ப்பில் கதவருகே நீர் சொட்ட நின்றிருந்தவனை நோக்கி “ரகு” என்று கேள்வியாய் ஹரிணி அழைக்க அவனது விழிகள் விரிந்தன. அவன் ‘ஆம்’ என்று தலையாட்டவும்

“உங்களைத் தான் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கேன்” என்று தமிழில் சொன்னவள், “ம்ம்ப்ச்” என்று தலையில் தட்டியபடியே அங்குள்ள வட்டார மொழியில் அதையே திரும்பச் சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.