“அக்கா சதுண்ணாவை பாரு என் மேலே எல்லாம் சேற்றை அப்பி விட்டுடாங்க” பூர்வி புகார் வாசிக்க.
“விதுக்கா இந்த ஆர்சியை திட்டுக்கா” ஸ்வாதியும் சேர்ந்து கொண்டாள்
“போய் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்” ஹரிணி சொல்லவும், மறுபேச்சு பேசாமல் ஹர்ஷாவிடம் சாவி வாங்கிக் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றான் ஆர்சி.
“நாங்களும் போய் குளிக்கணும்” புலம்பியபடியே ஸ்வாதியும் பூர்வியும் செல்ல ஹர்ஷாவைப் பார்த்து மெல்ல சிரித்தாள் ஹரிணி.
அவனோ ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தான்.
“என்ன யோசனை ஹரி”
“ஒண்ணுமில்லை” என்று தலையை சிலுப்பியவன், “ஆங், உன்கிட்ட சொல்ல மறந்தே போனான் பாரு. ஒரு சர்ப்ரைஸ், என்னன்னு கண்டுபிடி” என்று சொல்லவும் சிரிப்பை அடக்க வெகுபாடு பட்டு தோற்றாள் ஹரிணி.
“உனக்கு ஏற்கனவே தெரியுமா” முறைத்தான் அவன்.
“சரி சரி முறைக்காதே. ரெண்டு நாள் முன்னாடியே எனக்கு தெரியும். உன்கிட்ட நேர்ல சொல்லணும்னு ஸ்வாதி ஆசைப்பட்டா” அவனை சமாதானம் செய்யவும் சிரித்தவன் தானும் குளித்து விட்டு வருவதாக சொல்லிச் சென்றான்.
மாலையில் சாரதா கட்டிடங்களை திறந்து வைக்க விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அங்கே பலர் ஆர்சியை நலம் விசாரித்து அவனோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
எல்லோரிடமும் கலகலப்பாய் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.
“ரகுவை இங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு ஹரி. எவ்வளவு ஜாலியா எல்லோரிடமும் பேசிட்டு இருக்கார். நீங்க எல்லாம் அவரைப் பத்தி சொன்னது சரி தான்” ஹர்ஷாவிடம் சொன்னாள்.
அவள் இயல்பாய் ரகு எனக் கூறியதையும், வயதில் இளையவன் என்பதால் முன்பெல்லாம் அவன் இவன் என்று அவர்களுக்குள் உரையாடும் போது சொன்னவள் இன்று மரியாதையாக குறிப்பிட்டதையும் ஹர்ஷா கவனிக்கவே செய்தான்.
விழா முடிந்ததும் வீடு திரும்பியவர்கள் உடை கூட மாற்றாமலேயே அரட்டை அடித்துக் கொண்டிருக்க,
“நீங்க ரெஸ்ட் எடுங்க சாரும்மா” என்று சாரதாவிற்கு அறையை தயார் செய்து கொடுத்து இரவு உணவிற்கு ஆயத்தம் செய்ய சென்றாள் ஹரிணி.
“அக்கா கூட போய் கிச்சன்ல ஹெல்ப் செய்யாம இங்க என்ன அரட்டை. கல்யாணம் ஆகப் போகுதே பொறுப்பு வேண்டாம்” ஸ்வாதியை அதட்டினாள் பூர்வி.
“ஹும்கும் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சே உனக்கு ரொம்ப பொறுப்பு இருக்கிற மாதிரி தான். ரஞ்சனுக்கு போன் போடவா பூரி மசாலா” ஸ்வாதி அவள் காலை வார ‘பூரி மசாலா’ என்ற அவளது அழைப்பில் கணேஷ் ராமை நினைத்துக் கொண்டாள் பூர்வி.
“கரம் மசாலா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல ஹர்ஷா அண்ணா. ஆனாலும் வர்ஷினி ப்ரக்னன்ட் ஆனதில் இருந்து என்னைப் படுத்தி எடுக்கறான். கர்ப்பமானால் எல்லோருக்கும் உடல் உபாதை வரும் தானே. பூரி உனக்கும் இப்படித் தான் இருந்ததா, நார்மல் தானான்னு அவன் அலம்பல் தாங்க முடியல” கணேஷை மிஸ் செய்த பூர்வி அவனை தாளிக்கவும் செய்தாள்.
“வர்ஷினி அம்மாக்கு நடந்த டெலிவரி காம்ப்ளிகேஷன்ஸ் அவனுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுக்குது. நீ தான் தைரியம் சொல்லணும்” ஹர்ஷா பூர்வியிடம் எடுத்துச் சொன்னான்.
“என் பேச்சை என்னிக்கு கேட்டிருக்கான். அக்கா சொன்னா தான் கேட்பான்” பூர்வி சொல்லிக் கொண்டிருக்க ஆர்சி எழுந்து கிச்சன் நோக்கி சென்றான்.
“ஏதாவது ஹெல்ப் செய்யட்டுமா” ஹரிணியிடம் சென்று கேட்டான்.
குரல் கேட்டு திடுக்கிட்டு ஹரிணி திரும்ப, அவன் பின்னோடு வந்த பூர்வி,
“என் வீட்டுக்கு எத்தனை தடவை வந்திருக்கீங்க சதுண்ணா. என்னிக்காச்சும் என்கிட்டே இப்படி கேட்டிருக்கீங்களா. வெங்காயத்தை கட் செய்ன்னு குடுக்கா” என்று சொல்ல
“உன் வீட்ல கிச்சன் எங்க இருக்குன்னு மொதல்ல உனக்கு தெரியுமா” அவள் தலையில் தட்டினான் ஆர்சி.
“விதுக்கா நான் ஹெல்ப் பண்ணவா” ஸ்வாதியும் சேர்ந்து கொள்ள
“நான் பார்த்துக்கிறேன். எல்லோரும் பேசிட்டு இருங்க. இப்போ முடிஞ்சிரும்” ஹரிணி அனைவரையும் அனுப்பி வைத்தாள்.
ஆர்சி தனது அனுபவங்களைப் பற்றி சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்த போது சமையல் வேலைகளை முடித்து ஹர்ஷாவின் அருகில் வந்தமர்ந்தாள் ஹரிணி.
“நமக்கு ஒருத்தர் எத்தனையோ நன்மைகளை செய்திருப்பாங்க. ஆனா அவங்க செய்த ஒரு தீமையை மட்டும் பிடிச்சு வச்சுட்டு இருப்போம். எத்தனையோ இனிமையான தருணங்கள் இருந்திருக்கும். ஆனாலும் காயப்பட்டது மட்டும் நினைவில் ஆழமா இருக்கும். எப்போ ரெண்டையும் நாம சரிசமமா ஏற்றுக் கொள்கிறோமோ அப்போ யூ பீல் டோட்டலி ப்ரீ”