(Reading time: 29 - 58 minutes)

“சோ என்ன சிம்ப்டம்ஸ்” ஹர்ஷா நிமிரவும்

“டிஸ்னியா ( மூச்சு வாங்குதல்), டேகி ( இதயத் துடிப்பு அதிகரித்தல்) ஹாஸ்பிடல் வரச் சொல்லி ஹோல்டர் வேணும்னா பார்த்திடலாம்” என்றாள்.

“லைட் போட்டு விடு ஹரி” என்று ஹர்ஷாவிடம் சொல்லிவிட்டு

“நேரா படுத்துக்கோங்க ரகு” என்றவள் அவன் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்த ஜெல்லியை மிருதுவாக துடைத்து விட்டாள்.

“ரொம்ப ஜெல்லி யூஸ் செய்ய வேண்டியதா போச்சு, குளிச்சா போய்டும், எழுந்துக்கோங்க” என்றவள் எகோ கருவிகளை சுத்தம் செய்ய எழவும் திரைச்சீலையை விலக்கியபடியே அங்கே வந்தான் ஹர்ஷா.

“ஆர்சி நீ என்ன செய்கிறாய் இங்கே” அவன் ஆச்சரிய திகைப்போடு சொல்ல வேகமாய் திரும்பினாள் ஹரிணி.

“ஆர்சியா இவனா” அவள் விழிகளில் திகைப்பு அப்பட்டமாய்.

“ஹரி என்ன சொல்ற” ஹர்ஷாவின் சட்டையைப் பிடித்துக் கொண்டது அவள் கரம்.

அவளது திகைப்பையும் அவள் சிறு குழந்தை போல ஹர்ஷாவின் சட்டையைப் பிடித்துக் கொண்டு விழித்துக் கொண்டு நின்றதையும் அணுஅணுவாய் ரசித்தான் ஆர்சி.

“ப்ரின்ஸ் உங்க போன் எங்க, எத்தனை தடவை கால் செய்வது. உங்க வீடு பூட்டியிருந்தது. ஹாஸ்பிடலில் கேம்ப்ல இருப்பதாக சொன்னாங்க. அதான் இங்க வந்தேன்” தனது சட்டையை அணிந்து கொண்டே தமிழில் பேசிக் கொண்டிருந்தான்.

ஹர்ஷா சேறு படிந்த அவன் சட்டையைப் பார்க்கவும்,

“வரும் வழியில் ஒரு ட்ராக்டர் சகதியில் சிக்கிருச்சு. ஹெல்ப் செய்தேன். அதான் ஷர்ட் எல்லாம் இப்படி” விளக்கம் சொன்னான்.

“சாரி போன் வீட்டிலேயே மறந்து வச்சுட்டேன். ஏர்போர்ட்க்கு ஹனியோட போனை எடுத்துட்டுப் போயிருந்தேன்”

இவர்கள் உரையாட ஹரிணியின் முகத்திலோ பல வண்ணக் கலவைகள்.

“ஹனி நீ என்ன இவனுக்கு எகோ எல்லாம் செய்துட்டு... பேஷன்ட்ன்னு சொன்னியே” ஹர்ஷா கேட்க

“அது நான் அந்த பேஷன்ட் ரகுன்னு நினைச்சு.... தப்பா...” சங்கோஜத்துடன் ஹர்ஷாவை ஏறிட்டவள் ஓரக்கண்ணால் ஆர்சியைப் பார்த்து லேசாக தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

இதற்கு முன் அவள் முகத்தில் இப்படி ஒரு பாவனையை ஹர்ஷா கண்டதே இல்லை.

“ஆர்சி, அவ தான் தப்பா நினைச்சுட்டா நீ சொல்ல வேண்டியது தானே” ஹர்ஷா கேட்கவும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான் அவன்.

என்ன சொல்லுவான்.  

‘சாப்பிட்டியா ஹரி” அவன் மனதில் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்த குரலுக்குச் சொந்தக்காரி. ஹனி, ஹரிணிக்கா, விதுக்கா என்று எல்லோரும் கொண்டாடிய வைதேகி. அது வரை அவள் முகத்தைப் பார்த்ததே இல்லை அவன். முதன் முறையாக நேரில் சந்திக்கும் போது “ரகு, உங்களைத் தான் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கேன்” என்று அவள் சொல்லவும் அவன் கற்ற அத்தனை மொழிகளும் மௌனத்திடம் சரணடைந்து போயின என்று எப்படிச் சொல்லுவான்.

“இல்ல ஹரி, அவர் சொல்ல தான் ட்ரை செய்தார், நான் தான் அவரைப் பேச விடாம...” ஆர்சிக்காக பரிந்து பேசியவள், “ஐ ஆம் சாரி ரகு... ம்ம்ப்ச் ஆர்சி” என ஆர்சியிடம் கூறினாள்.  

“இவனையும் ஒருவர் பேச விடாமல் செய்ய முடியுமா என்ன. இவனாவது வாயை மூடிக் கொண்டு இருப்பதாவது” ஹர்ஷா ஆர்சியைப் பார்த்தபடியே மனதில் நினைத்துக் கொண்டிருக்க ஆர்சி ஹரிணியின் முன் வந்து நின்று ஆங்கிலேயே பாணியில் இடை வரை குனிந்தான்.

“ராகவ் சைதன்யா. எல்லோரும் ஆர்சின்னு சொல்வாங்க. நீங்க ஷார்ட்டா ரகுன்னே கூப்பிடலாம். அப்புறம் சாரி எல்லாம் எதுக்கு, நீங்க என் ஹார்ட்டை செக் செய்தது என்னோட பாக்கியம்” என்றான் புன்னகையுடன்.

எப்போதும் ஆர்சியின் பேச்சில் குடிகொண்டிருக்கும் குறும்பின் சாயல் அறவே இன்றி அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையும் உறுதியும் இருந்ததை ஹர்ஷா கவனித்தான். 

“ஆர்சியா இது” வியந்து நின்ற ஹர்ஷாவைப் பார்த்து புன்னகைத்தான் அவன்.

அந்தப் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்ததை உணர்ந்த ஹர்ஷா புருவம் உயர்த்த ஹர்ஷாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான் ஆர்சி.

இவர்களின் சத்தமில்லா சம்பாஷணைகளை அறியாத ஹரிணி, “அந்த பேஷன்ட் வரலை போல, கிளம்பலாமா ஹரி” என்று ஹர்ஷாவைப் பார்த்துக் கேட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் பூர்வியும் ஸ்வாதியும் ஓடி வந்து ஹரிணியைக் கட்டிக் கொண்டனர். வெளியே ஆர்சியின் குரல் கேட்டதும் இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர்.

சாரதாவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த ஹரிணி “விதுக்கா, ஹரிணிக்கா” என்று சத்தமாய் குரல் கேட்கவும் வாசலுக்கு விரைந்தாள்.

அங்கே ஆர்சி, பூர்வி, ஸ்வாதி மூவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, காரின் மீது சாய்ந்தபடியே ஹர்ஷா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மழை விட்டிருந்த போதும் மரக்கிளைகளிலும், இலைநுனிகளிலும் ஒட்டிக் கொண்டிருந்த துளிகளோடு காற்றும் சண்டைப் பிடித்துக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.