(Reading time: 29 - 58 minutes)

ழை பெய்யுமா ஹரி. பீச்க்கு போகலாம்னு நினச்சேன்” அடையாரில் இருந்த ஹர்ஷாவின் பங்களாவில் தான் தங்கியிருந்தனர் இருவரும்.

“பீச்சுக்கு தானே போகணும், மழை வருவது பத்தி ஏன் கவலை” சொன்னவன் சீனுவிற்கு போன் செய்தான்.

“சீனு ஒரு பைக் வேணுமே, யார்கிட்டேயாவது கொடுத்து விடறியா” ஹர்ஷா கேட்ட அடுத்த அரை மணி நேரத்தில் அவனே பைக்கோடு வந்தான்.

“பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது சீனு” ஹரிணி கேட்க மிகவும் நன்றாக சென்று கொண்டிருப்பதாக சொன்னான்.

சீனு மோட்டார் மெக்கானிக் படித்ததும் ஹர்ஷா தான் அவனுக்கு கார், பைக் டீலர்ஷிப்பை பெற்றுத் தந்து உதவி செய்திருந்தான். தனது அயராத உழைப்பினால் அதை வெற்றிகரமாக நடத்தி வந்தான் சீனு.

மறுநாள் விழாவிற்கு சீனுவிற்கும் இன்விடேஷனைப் பெற்றுத் தந்திருந்தான் ஹர்ஷா.

“பிரின்ஸ் அண்ணா, உங்களுக்குக் கல்யாணமாமே. அக்கா சொன்னாங்க. அன்னிக்கு உங்க கிராஜுவேஷனல நீங்க ஸ்வாதி அண்ணியோட சேர்ந்து வந்த போதே நான் நினச்சேன் அண்ணா. நல்ல ஜோடி பொருத்தம்ன்னு” சீனு சந்தோஷமாக சொன்னான்.

“பாரேன் ஹரி இந்த சீனுவை, எவ்வளவு ஸ்மார்ட் ஆகிட்டான். நேத்து வரை ஸ்வாதியை அக்கான்னு சொல்லிட்டு இருந்தவன் இப்போ அண்ணின்னு சொல்றதை” ஹரிணி சந்தோஷமாக சிரிக்க,

“பிஸ்னஸ் மேன் ஆச்சே. பின்னே இருக்காதா” சீனுவை தட்டிக் கொடுத்தபடியே உடன் சேர்ந்து சிரித்தான் ஹர்ஷா.

சீனு சென்றதும், இருவருக்கும் ப்ரியமான சிவப்புக் கரையிட்ட அடர்பச்சை நிற புடவையை உடுத்திக் கொண்டு வந்தாள் ஹரிணி.

இருவரும் பைக்கில் கடற்கரை சென்று சிறிது நேரம் காலார நடந்தனர். பின் அங்கே அமைதியான  ஓர் இடத்தில் அமர்ந்தனர்.

“அப்பா நான் சபதத்தில் ஜெயிச்சுட்டேன்” ஹர்ஷா சந்தோஷமாக சொன்னான்.

“ப்ரின்ஸ் ஹர்ஷவர்தன் சிங் ரத்தோர்” ஹரிணி சொல்ல அலைகளும் ஆர்பரித்தன.

“அப்பா நீங்களும் அம்மாவும் கல்யாணம் செய்த அதே கோயிலில் நான் ஸ்வாதியின் கரம் பிடிக்கணும்ன்னு எனக்கு ஆசைப்பா. எல்லோரும் சம்மதிக்க நீங்க தான் ஹெல்ப் செய்யணும்” துள்ளி வந்த அலைகளிடம் கூறிய ஹர்ஷாவை ஆச்சரியமாய் பார்த்தாள் ஹரிணி.

அந்நேரம் மெல்லிய சிறு தூறல் மண்ணைத் தீண்ட, மண்வாசமும் உப்புக் காற்றோடு கலந்து சுவாசத்தை நிறைத்தது.

தனது கரத்தில் மழைத்துளியை ஏந்தியவள் மகிழ்ச்சி பொங்க அவனிடம் காட்டினாள்.

“அப்பா ஆசீர்வாதம் பண்றார் ஹரி” அவ்வளவு உற்சாகமும் துள்ளலும் அவள் குரலில்.

பல வருடங்களுக்குப் பிறகு சந்தோஷமும் பூரிப்பும் உற்சாகமும் போட்டிப் போட்டுக் கொண்டு அவள் முகத்தில் குடியேறிக் கொண்டிருப்பதை நிறைவாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அன்றும் இதே போல் ஒரு தருணம் வந்ததே. அவனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள உடன் ஆர்சி இருந்தானே.

திடீரென ஆர்சியின் நினைவு வரவும், ஹர்ஷாவின் செவிகளில் ‘வைதேகி’ என்ற ஆழ்ந்த குரல் ஒலித்தது.

“சதுண்ணா காற்று போல. ஒரு இடத்தில பிடித்து வைக்க முடியுமா என்ன” முன்பு பூர்வி சொன்னதை ஹர்ஷா நினைத்துப் பார்த்தான்.

ஆம் அவன்  காற்று தான். கட்டுப்பாடுகள் இல்லாதவன் தான். ஆனாலும் இவள் அந்தக் காற்றையும் சுவாசக் குழாய் வழியே நெஞ்சுக் கூட்டில் நிரப்பி அணுக்களுக்குள் உயிராக செலுத்தும் வித்தையில் தேர்ந்தவள் ஆயிற்றே.

மண்வாசத்தை ஆழ உள்ளே இழுத்துக் கொண்டு, துளித்துளியாய் சிந்தும் முத்துக்களையும் அதை ஏந்திக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்ளும் அலைகளையும் ரசித்துக் கொண்டிருந்தவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹரி” அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

“சொல்லுடா”

“ஹரி, நாளைக்கு பங்க்ஷனுக்கு கட்டிட்டுப் போக எனக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுக்கிறாயா” என்றவள் அவன் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

அவளது சொல்லிலும் செயலிலும் சூரியனைக் கண்ட பனித்துளி போல முற்றிலுமாய் கரைந்து நெகிழ்ந்து போனான்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத கணங்களில் கரைந்து கொண்டிருந்தது காலமும்.  

“எனக்கு வாங்கிக் கொடு ஹரி என்று அவளாக என்னிடம் என்று கேட்கிறாளோ அன்று அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன்” பன்னிரண்டு ஆண்டுகள் முன் அவனது அன்னை ஹரிணிக்கு கிப்ட் ஏதும் வாங்கிக் கொடுக்கவில்லையா என்று கேட்ட போது மனதில் எண்ணியிருந்தானே.  

இதோ இப்போது அவள் கேட்டே விட்டாள். அவன் எண்ணியது ஈடேறி விட்டது. இந்த நாளும் அவன் நாள்காட்டியில் வந்தே விட்டது. அவன் மனமோ உணர்ச்சிகளால் ததும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.