(Reading time: 18 - 35 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

தேன்மொழியை அப்படி ஒரு நிலையில் பார்த்த ஆதி உடைந்து அழுதான்.

“ஆதி உன்னால தான் உன்னோட அக்காவை மீட்க முடியும்” தாத்தா அவனிடம் கூறினார்.

நெருப்பு மீன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருப்பது செந்தமிழ் தான் என ஆதியும் அறிந்திருந்தான்.

அதன் பின் அவன் கடல்புறாவை எடுத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாக செந்தமிழை சந்திக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று தேடிப்பார்த்தான். ‘

ஆனால் செந்தமிழ் அவன் கண்களுக்குத் தென்படவே இல்லை.

தேன்மொழியின் அருகில் அமர்ந்த ஆதி அவள் காதில் மெல்ல கூறினான்.

“அக்கா தினம் கடல் புறாவை எடுத்துப் போய் எல்லா இடத்திலும் தேடிட்டேன். அவனுக்கு என்னாச்சுன்னு தெரியல. ஒரு வேளை அவன் மேலும் குண்டு பாய்ந்து இருக்குமோ” ஆதி மெல்ல மெல்ல கூற தேன்மொழியின் விழிகள் கண்ணீர் சுரந்தன.

அவள் கைகள் நடுக்கம் கொண்டன. அவள் உடல் அதிர்ச்சியில் தூக்கிப் போட்டது.

ஆதியின் கரத்தை தேன்மொழியின் கை இறுகப் பற்றிக் கொண்டது.

மருத்துவர்களும் அவள் குடும்பத்தினரும் வந்து விட பரிசோதனைகள் எல்லாம் சரியாக இருக்க தேன்மொழியின் விழிகளில் நீர் வழிவது மட்டும் நிற்கவே இல்லை.

“அழாத அக்கா. அப்படி எல்லாம் எதுவும் ஆகியிருக்காது. நீ சீக்கிரமா எழுந்து வந்து நாம அவனை தேடி போய் பார்க்கலாம்” ஆதி மீண்டும் மீண்டும் கூறியதற்கு பலன் கிட்டியது.

தேன்மொழி கண் திறந்தாள்.

மொத்தக் குடும்பமுமே ஆதிக்கு நன்றி தெரிவித்தனர். சிறிது நேரமே இமைகளைப் பிரித்து அனைவரையும் உற்று நோக்கியவள் மீண்டும் நித்திரைக்குள் சென்றாள்.

தேன்மொழி முழுக்க கோமாவில் இருந்து விடுபட்டு எழ இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன.

அவ்வாறு அவள் கோமாவில் இருந்து வெளிவந்ததும் மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். தேன்மொழியால் பேச இயலவில்லை.

“டாக்டர், ஏன் அவளால் பேச முடியல. அந்த மயக்க மருந்து குண்டு துளைத்ததால் ஏற்பட்டதா. அவளுக்கு பேச்சு வர ட்ரீட்மன்ட் செய்யுங்க டாக்டர்” என்று முத்துக்குமரன் மருத்துவர்களிடம் கெஞ்சிக் கேட்டார்.

எதனால் தேன்மொழியின் பேசும் சக்தி பறிபோனது என்று மருத்துவர்களுக்கும் புரியாத புதிராக தான் விளங்கியது.

அதற்கென இருக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் தேன்மொழியை பரிசோதனை செய்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.