தகவல் வந்தது.
“அசம்ப்ஷன் தீவுகளை நோக்கி சமுத்திர முத்தைப் பயணியுங்கள். அங்கே வந்து சேர்ந்து விடுவோம்” என்று அவன் குறிப்பிட்டிருக்க அதன் படியே கேப்டன் செல்வா சமுத்திர முத்தின் பயணத்தைத் தொடர்ந்தார்.
“அக்கா அவங்க இரவுக்குள் அசம்ப்ஷன் தீவுகள் வந்திருவாங்க” ஆதி சொல்ல தேன்மொழி ஆதியின் முதுகில் தட்டிக் கொடுத்து கடலுக்குள் செல்வதாக சைகை செய்தாள்.
“அக்கா இப்போ வேண்டாம். காலையில் பார்த்துக் கொள்ளலாம். நாம இன்னும் பத்தே நிமிஷத்தில் அசம்ப்ஷன் போய்டுவோம்” என்று அவன் கூற மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக வந்தாள் தேன்மொழி.
அன்று முழு நிலவு. அசம்ப்ஷன் தீவுகள் அருகே அலைகள் மிக உயரே எழும்பிக் கொண்டிருந்தன.
வானில் நிலவு ஒய்யாரமாக உலா வர அலைகள் நிலவை எட்டிப் பிடிக்க ஆர்பரித்தன.
தாங்கள் தீவிற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்று ஆதி தகவல் அளிக்க கேப்டன் செல்வா நிம்மதி அடைந்தார்.
அப்போது தான் சமுத்திர முத்தும் அசம்ப்ஷன் தீவுகள் வந்து சேர்ந்திருந்தாள்.
கடலுக்குள் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அவருக்குத் தகவல் கிடைக்க பயணிகள் மற்றும் க்ரூ அனைவரும் கரைக்குச் சென்று விட ஆணை பிறப்பித்தார்.
ஆதி கடல் புறாவை சமுத்திர முத்தில் ஏற்றி விட்டு கரைக்குத் திரும்பியிருந்தான்.
நள்ளிரவின் நிசப்தத்தை உடைத்து விட கங்கணம் கட்டிக் கொண்டு அலைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன.
ஆள் அரவமற்ற அந்தக் கரையில் முழு டைவ் சூட் அணிந்தவாறே நடை பயின்று கொண்டிருந்தாள் தேன்மொழி.
“வா வா. எங்களிடம் வா. அங்கேயே ஏன் நின்று கொண்டிருக்கிறாய். நீ கடலின் மகளல்லவா. உன் செந்தமிழை நீ காண வேண்டாமா” அலைகள் அவள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன.
அவைகளின் இழுப்பிற்கு சென்றவள் சிறிது நேரத்தில் எல்லாம் அலைகளில் மிதந்து அமைதியான கடலின் மடியில் மிதந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் மிதந்தவள் ஒரே மூச்சாக கடலின் ஆழத்திற்கு டைவ் அடித்துச் சென்றாள். அந்த வித்தையை செந்தமிழ் தான் அவளுக்கு கற்பித்திருந்தான்.
கடலுக்குள் சென்ற தேன்மொழி கடந்து செல்லும் மீன்கள் மற்றும் கடல் வாழ்