சுயநலவாதியா பேசறேன்னு தப்பா நினைக்காத செல்வி. நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழணும்னு நான் மனசார அந்த கடவுளை வேண்டிட்டு இருக்கேன்." விசாலம் சொல்ல, புன்னகையுடன் தலை அசைத்தாள் தமிழ்செல்வி.
அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே தமிழின் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு. உள்ளே இருந்த ஒரு ஜன்னலை பற்றியபடி அவளுக்கு முதுகை காட்டி நின்றிருந்தான் ராம். இவள் காலின் கொலுசு சத்தத்தில் திரும்பியவன் கைக்கட்டியபடி அவளை பார்த்து நின்றான். வெண்ணிற பட்டு புடவையில் நிலவே ஒரு பெண்ணானதை போல மெல்ல அடியெடுத்து அவனை நோக்கி வந்தாள். அவன் முன்னால் சென்று குனிந்த தலையுடன் நின்றவள் அவனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போகவே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவள் அவனை நிமிர்ந்து பார்த்த போது அவன் உதட்டில் இருந்த புன்னகையை அவளால் வகைப்படுத்த இயலவில்லை. ஆனால் அது நட்பான அல்லது காதலான புன்னகையாக இருக்கவில்லை. அவளிடம் இருந்து விலகி அங்கிருந்த கட்டிலில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தான் ராம்.
இந்த அமைதி அவளுக்குள் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணாமல் பயத்தை தோற்றுவித்தது. அவள் மனம் ஏதோ ஒன்று வர போகிறது என எச்சரித்தது. அதற்க்கு அவளை தயாராக சொன்னது.
"இந்த உலகில் நான் கண்ட அபூர்வமான பெண்ணுக்கு
இந்த மணவாழ்க்கை மனம் போல அமைய வாழ்த்துக்களுடன்...." என்றும் உன் நண்பன் அசோக். கையில் இருந்த ஒரு பரிசு பொருளை வாசித்தான் ராம்.
"அப்படி என்ன நீ அபூர்வம்? எனக்கொண்ணும் அப்படி தெரியலையே!!! ஒரு வேளை எனக்கு தப்பானதையே பார்த்து தப்பானதையே யோசித்து தப்பான பார்வையா இருக்கும் போல. அதான்" அன்று அவனின் பார்வையில் தவறு என இவள் சுட்டி காட்டியதை அவன் இப்போது குத்தி காட்டினான்.
"அடடா...என்ன இது இப்படி வியர்க்குது உனக்கு? இரு ஏசி போடறேன்" என்று அதன் ரிமோட்டை எடுத்தவன் அதன் வெப்பநிலையை தாறுமாறாக மாற்றி வைக்க, சிலநொடிகளில் தமிழுக்கு குளிர தொடங்கியது.
"ஹ்ம்ம் அப்பறம் தமிழ் செல்வி...செல்வி...தமிழ்....எப்படி கூப்டா உனக்கு பிடிக்கும்??? தமிழ்...தமிழ்னு கூப்டா தான பிடிக்கும்?" அவனின் பேச்சு முழுதும் நக்கலாக இருந்தது. அவள் அருகே வந்து நின்றான்.
"ரெண்டு வாரமா நல்லா கனவு கண்டியா இந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு?