தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 01 - ராசு
"முன்னவனே யானை முகத்தவனே!
முத்திநலம் சொன்னவனே!
தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே!
ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே!
நற்பரனே நின்தாள் சரண்!"
விநாயகர் துதி பாடலை மனமுருக கூறியவாறே சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தித்தான் அவன்.
கண்களைத் திறந்தவன் கற்பூர ஆரத்தி காட்டி மீண்டும் வணங்கிவிட்டுத் திரும்பினான்.
அவன் திரும்புவதற்கென்றே காத்திருந்தவன் போன்று அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து தான் இருப்பதைக் காட்டிக் கொண்டான் அந்த இளைஞன்.
"என்ன சார் நான் கேட்டது ரெடியாச்சா?"
"வாங்க தம்பி. உட்காருங்க. நான் அப்பவே அதற்கு அவசியம் இருக்காதுன்னு சொன்னேனே."
"நான்தான் எனக்கு வேணும்னு சொன்னேனே."
"அதுதான் நானும் தயார் செய்து வைத்துவிட்டேன்."
"வளவளன்னு பேசிக்கிட்டு இருக்காம சீக்கிரம் தாங்க." என்றான் கடுகடுவென்ற குரலில்.
"தம்பி இந்த மாதிரி வேலை எல்லாம் நான் செய்யறது இல்லை. ஏதோ நீங்க காதல்னு சொன்னீங்க. அப்புறம் பொருத்தமும் சரியா இருந்துச்சா. அதுதான் ..."
"சரி சரி எவ்வளவுன்னு சொல்லுங்க." பொறுமையற்று படபடத்தான்.
பணம் எவ்வளவு என்று கூறியவன் ஒரு பையை நீட்டினான். வந்தவன் திறந்து பார்த்தான். அதில் ஒரு ஜாதக நகலும், ஜாதகமும் இருந்தன.
"உங்களுக்கு ஜாதகம் இல்லைன்னு சொன்னீங்க. இத்தனை வயசு வரைக்கும் ஏன் ஜாதகம் எழுதலை?"
அவன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான். வந்தவனோ அவன் கேட்டதை கண்டு கொள்ளாமல் பணத்தை எடுத்து நீட்டிவிட்டு நடையைக் கட்டிவிட்டான்.
இதை மாதிரி ஒரு ஆளைப் பார்த்ததேயில்லை என்று நொந்து கொண்டவாறே தன் கைப்பேசியை எடுத்தான்.
"அண்ணே. நீங்க ஒரு ஜாதகம் அனுப்பி அந்த ஜாதகத்துக்குப் பொருத்தமான வரன் இருந்தா கேட்டீங்கள்ல. என்கிட்ட அதுக்கு பொருத்தமா ஒரு வரன் வந்திருக்குண்ணே."
மறுமுனையில் பேசுவதை கவனமுடன் செவிமடுத்தான்.