தனது வாழ்வின் முக்கிய தருணங்களுக்கு எல்லாம் விடுமுறை அளித்துவிட்டு, தனது வரலாற்றிலே முதன்மையான ஓர் பங்கினைத் தனதாக்கித் தாயின் ஜென்மப்பூமியில் காலடி எடுத்து வைத்தான் அசோக். பார்க்கும் இடம் யாவும் பூஞ்சோலைகள் மட்டுமே நிரம்பி இருந்தன. தேகத்திற்கு மட்டுமன்றி மனதிற்கும் வலிமையினை சேர்த்தன காணும் காட்சிகள் யாவும்! இந்திரன் ஆளும் சொர்க்கமோ, சந்திரன் ஆளும் மண்டலமோ அதுவாகவும் இருக்கலாம்! அது ஓர் அற்புத ஸ்தலம்! அவனது வாழ்வில் தர்ம சாஸ்திரங்களைப் போதித்து வளர்த்தவள் ஜெனித்த மண் அல்லவா!
"நாம பேசாம இங்கேயே இருந்துவிடலாமா கலெக்ட்ரே?" என்றவளை கேள்வியாக நோக்கினான் அசோக். அவன் மனம் எதையும் இரசனைக்கு உட்படுத்தும் எண்ணத்தில் இல்லை. அவன் மனதில் ஓடியதெல்லாம் இவ்விடம் தானே தாயையும், தன்னையும் அழிக்க எண்ணியது என்பது மட்டுமே! இறுகிய பாறையாய் இருந்த அவன் முகத்தினைக் கொண்டு மனதினை ஊகித்தவள், சற்று நேரம் மௌனம் சாதிப்பது மட்டுந்தான் எவ்வித குழப்பத்திற்கும் வழி வகுக்காது என மௌனம் காத்தாள். நவீன்குமார் கூறிய வழிகளின் படி வாகனத்தினைச் செலுத்தி இல்லத்தில் நிறுத்தினான் அசோக். அவன் வாகனத்தின் ஓசை கேட்டதும், வெளியே எட்டி நோக்கினார் நவீன் குமார்.
"! தம்பி வந்துட்டான் பாரு!" என்று சப்தமாய் அவர் கூவினார் யாரிடத்திலோ! சற்றே தயக்கத்துடன் இறங்கியவர்களைக் கண்டு அவர் மனதார புன்னகைப் பூத்து நிற்க, உள்ளிருந்து முகம் முழுதும் புன்சிரிப்போடு ஓர் நடுத்தர வயது பெண்மணி கையில் ஆரத்தியுடன் வெளிவந்தார். புன்முறுவலோடு இருவருக்கும் ஆரத்தி எடுத்தவர், அவ்வீட்டு வாரிசையும், மருமகளையும் இன்முகத்துடன் வரவேற்றார். மிக பிரம்மாண்டமாய் இருந்த அவ்வில்லத்தில் ஆட்கள் நடமாட்டம் என்பது கூறும்படியாக இல்லை. உள்ளே நுழைந்த மாத்திரமே, அவன் மனதில் எழுந்ததெல்லாம்,
"இவ்விடம் தானே தன் தாயார் அவமதிக்கப்பட்டார்!" என்பதே! கண்கள் ஓர் நொடி கலங்கிப் போக, அதனைக் கட்டுப்படுத்த முயன்றவனைக் கணடவள், அவனது கரத்தினைப் பற்றி நிகழ்காலம் அழைத்து வர,சிவன்யாவின் உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்துக் கொண்டான் அசோக்.
"ரொம்ப நேரம் டிராவல் பண்ணிருப்பீங்க! போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க, எல்லாத்தையும் அப்பறம் பேசிக்கலாம்!" என்றார் புன்னகையுடன்!
"மாமா! பெரிய மாமா எங்கே?" மனதில் எழுந்த சந்தேகத்தினைக் கேட்டே விட்டாள் சிவன்யா. சில நொடிகள் மௌனம் சாதித்தவர், அசோக்கின் முகத்தினை ஓரிரு நொடிகள் கூர்ந்தவராய்,