தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 25 - சகி
காரில் ஏதோ வாழ்வினையே தொலைத்தவனாய் அமர்ந்துக் கொண்டு வந்தான் அதர்வ். அழகிய எழில் பொங்கும் அக்கிராமத்தின் சூழல் அவனுள் எவ்வித மாற்றத்தினையுமே புனையவில்லை. அவன் ஏதோ பிரமை பிடித்தவனாய் அமர்ந்திருப்பதனைக் கண்டவருக்கு ஏனோ அச்சூழல் சங்கடமாய் போனது. ஏதோ ஓர் சோகத்திடலுக்கு வருவதனைப் போன்ற மாயையே அங்கு நிலவியிருந்தது. பொறுமையிழந்தவராய் காரை நிறுத்தியவர், அதனைவிட்டு கீழே இறங்கினார். நட்டநடு காட்டில் அவர் காரை நிறுத்தியதன் காரணம் விளங்காமல் குழம்பிப் போய் அவரை நோக்கினான் அதர்வ். அவன் பக்கக் கதவினைத் திறந்தவர்,
"கீழே இறங்கு!" என்றுக் கூற, என்னத்தான் செய்ய வருகிறார் என்று சிந்தித்தவண்ணமே அவனும் இறங்கினான்.
"இங்கிருந்து அரை மணி நேரம் தான் நடந்தே போகலாம் வா!" என்று சூர்ய நாராயணன் ஈரடி எடுத்து வைக்க, அவனோ திடுக்கிட்டான்.
"ரோடு நல்லா தானே இருக்கு! காரை எடுக்கலாம்ல!" என்று அவன் கூறிய விதம், 'குபீர்' என்ற சிரிப்பினை ஏற்படுத்த, சிரமப்பட்டு அதனை தனது இறுகிய முகத்திற்குள் கட்டுப்படுத்தியவராய்,
"ஏன் துரை கொஞ்சம் தூரம் நடக்க மாட்டீங்களோ? நட டா டேய்!" என்று காரின் சாவியோடு முன்னேறி நடந்தார் அவர். அவனோ திக்கற்று ஏதும் விளங்காமல் காரினையும், தந்தையும் மாறி மாறி நோக்கினான்.
"சாவியை கொடு! நானே காரை ஓட்டிக்கிறேன்." என்று அவர் நடந்த வேகத்தினை ஈடுக்கட்ட ஓடி வந்தான் அதர்வ்.
"உன் வயசுல இரண்டு மடங்குக்கு மேலே இருக்கும்டா எனக்கு! நானே நல்லா நடக்குறேன் உனக்கு என்னக் கேடு? நட!" என்று வசனம் பாட வேறு உபாயமே இல்லாதவன், விதியே என்று நடக்கலானான். ஓர் ஐந்து நிமிடம் சென்றிருக்கும்,
"ஆமா! காலேஜ் முடிக்க இன்னும் எத்தனை வருடம் இருக்கு?" என்றார் சூர்ய நாராயணன்.
"நான் காலேஜ் முடித்தே ஒரு வருடம் மேலே ஆகுது!" என்றான் சற்றே வெறுப்பாக! அதற்கு இதழ் சுழித்து புருவம் உயர்த்தியவரின் மனதில்,
"அப்பான்னு மதித்து இதெல்லாம் சொன்னாத் தானே தெரியறதுக்கு!" என்ற எண்ணமே தவழ்ந்தது.
"லவ்வு எதாவது?" என்றவரை விசித்ரமாக நோக்கினான் அவன்.
"எனக்கு ஒண்ணும் அவ்வளவு வயசாகலை! பிக்-அப்பு, டிராப்பு அவ்வளவுத்தான்!" எதார்த்தமாக அவன் கூற, அவரோ நீயெல்லாம் மனிதனா என்பதாய் அவனை நோக்கினான். அவனோ நான் என்னத் தவறிழைத்தேன் என்பதாய் ஒரு முகப்பாவத்தினை வைத்திருந்தான்.
"எத்தனை பொண்ணுங்க இதுவரைக்கும்?" சற்றே வெறுப்போடு வினவினான் அவன்.