“என்ன யோசிக்குற pbs? இவன் இவ்வளவு அடம் பிடிக்குறானேன்னா?”
மனோஜ் சரியாக கேட்கவும், மஞ்சு பதில் சொல்லாமல் அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“உனக்கு என்னை தெரியும் மஞ்சு. நான் யோசிக்காம முடிவு எடுக்குறவன் இல்லை. இந்த வேலைல கண்டின்யூ செய்ய என்னால முடியாது. என் நிலைமைல உன்னை வச்சு யோசிச்சுப் பாரேன், உனக்கு நான் சொல்றது புரியும்.”
“அப்படி யோசிக்காமலே கூட எனக்குப் புரியுது மனோஜ். நீங்க வேற ஜாப் தேடுறது சரி, அதை இப்படி அவசரப் பட்டு செய்யனுமான்னு தான் கேட்குறேன்.”
“ப்ளீஸ் மஞ்சு, இந்த ஒரே ஒரு டைம் என்னை டிஸ்டர்ப் செய்யாதே! நான் முதல்ல இந்த ஜாப்ல இருந்து ஷிஃப்ட் ஆகி வேற வேலைக்கு போறேன். அதுக்கு மேல நாம பேசுவோம்.”
மஞ்சு மேலே ஒன்றும் சொல்லாமல் அவனின் கேசத்தை மெல்ல கோதினாள்.
மனோஜும் அவளை தடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தான்.
அப்படியே ஒரே மூச்சில் தன் ரெஸ்யூமேவை டைப் அடித்து முடித்தான் மனோஜ். அதற்கு பிறகும் கால தாமதம் செய்யாமல், ஆன்லைனில் இருக்கும் ஜாப் போர்டுகளில் தேடி பல வேலைகளுக்கு விண்ணபித்தான்.
அந்த வினாடி முதல், மனோஜ் வேலைத் தேடும் வேலையில் மும்முரமாகிப் போனான்!
முன்பு வேலை, வேலை என்று இருந்தான்! இப்போது வேலை தேடும் வேலையில் ஆழ்ந்துப் போயிருந்தான்! வீட்டில் இருக்கும் நேரங்களில் எப்போதும் ஈமெயிலுக்கு பதில் அனுப்புவது, கன்சல்டன்ட் ஏஜன்சிகளிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்று பேசுவது என்றே அவனின் நேரம் போனது!