மஞ்சு இவை அனைத்தையும் ஊமை பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தாள்!
மனோஜ் வேலை தேட ஆரம்பித்த ஐந்தே நாட்களில், இந்தியாவை தலைமை இடமாக கொண்ட இன்னுமொரு பெரிய நிறுவனத்திடம் இருந்து அவனுக்கு இன்டர்வியூ அழைப்பு வந்தது!
மனோஜ் சந்தோஷப்பட்டான் என்றால் மஞ்சுவிற்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டது!
மனோஜை இப்படி பார்க்க அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! அவனுக்கு பிடித்ததுப் போல புது வேலை கிடைத்து, அவன் மீண்டும் பழைய மனோஜாக மாறினால் போதும் என்று அவள் எண்ணத் தொடங்கி இருந்தாள்.
அடுத்து வந்த இரு வாரங்களில், மொத்தம் நான்கு ரவுன்ட் இன்டர்வியூக்கள் நடைப்பெற்றது! ஒவ்வொரு நிலையிலும் சிறப்பாக பதிலளித்து தேர்வானான் மனோஜ்! இறுதியாக ஹெச்.ஆர் டிஸ்கஷன் என்று தெரிய வரவும், மனோஜ், மஞ்சு இருவருமே வேலை கிடைத்து விட்டதாகவே நினைத்து மகிழ்ந்தார்கள்.
ஹெச். ஆர் இன்டர்வியூவில் அனைத்தும் சிறப்பாகவே சென்றது. மனோஜின் தற்போதைய சம்பளம், எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறான் என்றுத் தொடங்கி பொதுவான கேள்விகளுக்கு பிறகு, மனோஜின் விசா பற்றிய கேள்விகள் வந்தது.
“உங்க விசா இன்னும் எவ்வளவு நாள் வேலிட்?”
“நெக்ஸ்ட் இயர் என்ட் வரைக்கும் வேலிடிட்டி இருக்கு!” என்றான் மனோஜ்.
“நெக்ஸ்ட் இயரா? இன்னும் ஒன் இயர் தான் இருக்கா?”
கேள்வி கேட்டவரின் குரலில் இருந்த மாற்றம் மனோஜிற்கு புரிந்தது.