வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும், அதில் மனோஜிற்கு துணையாக இருக்க அவளுக்கு தயக்கம் இல்லை. மனோஜின் கைப் பற்றி அவனோடு உடன் சென்று அந்த எதிர்மறை நாட்களை எதிர்கொள்ள அவள் தயாராக தான் இருந்தாள்! ஆனால் மனோஜ் நடந்துக் கொண்ட விதம்...
யோசனையுடனே, சமையலறையில் இருந்து வெளி வந்து மனோஜ் அமர்ந்து இருந்த இடத்தை எட்டிப் பார்த்தாள் மஞ்சு!
அவன் மீட்டிங்கில் போன் வழியாக மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான்.
ஆண்மை நிறைந்த அவனின் குரலும், அதில் இருந்த கம்பீரமும் அவளுள் இப்போதும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது!
அதே இடத்தில் நின்று கணவனை பார்வையால் அளந்தாள்!
இதனை வருடங்களில், மனோஜின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே மனோஜாக தான் அவளின் கண்களுக்கு தெரிந்தான்!
கண்களை இமைக்காமல் கணவனை பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு பழைய நாட்களை நினைத்து இப்போது சிரிப்பு வந்தது!
இப்போதெல்லாம் அவர்களுக்குள் எப்போது சிறியதாக சண்டை வந்தாலும் கூட, அந்த சில நாட்களை சொல்லி மனோஜை மிரட்டுவதே அவளுக்கு வாடிக்கையாகி விட்டது!
அதைப் பற்றி சொன்னாலே மனோஜின் முகம் மாறிப் போகும்!
மஞ்சுவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது!
மனோஜ் அவள் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி அவள் என்றுமே கேள்வி எழுப்பியதில்லை.