அவள் உச் கொட்டினாள், அந்த உச் சத்தம் கேட்டு வியந்தான் கொம்பன்.
அதற்குள் கணக்குபிள்ளை கொம்பனிடம் வந்து ரகசியம் பேசினான்
”ஏம்பா கொம்பா உனக்கு இப்பேர்ப்பட்ட பேரழகி முறைப்பொண்ணா இருக்கற விசயம் என்கிட்ட சொல்லவேயில்லையே, இது நியாயமா நாம ரெண்டு பேரும் உயிர் நண்பர்கள் ஆச்சே என்னை நீ மறக்கலாமாப்பா”
”அதுசரி இப்படி ஒருத்தி இருக்காள்ங்கறதையே நான் இப்பதானே பார்த்தேன், என் அத்தை அடிக்கடி என்னை தேடி வந்து என் பொண்ணை கட்டிக்க, என் பொண்ணை கட்டிக்கன்னு தொல்லை கொடுக்கும், ஒருநாள் நான் முடிவா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கையிலயே பிடித்தம் இல்லை, அதனால சந்நியாசியா ஆகலாம்னு இருக்கேன், உன் பொண்ணை நான் கட்டிக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டேன், அன்னிக்கு அத்தை அழுதுக்கிட்டே போனாங்க, அதுக்கு அப்புறம் அவங்க இறந்து போயிட்டாங்க, என்னாலதான்னு எல்லாரும் காரணம் காட்டினாங்க, அதை நான் உதாசீனப்படுத்திட்டேன்”
”அது இருக்கட்டும் இப்ப என்ன திடுதிப்புன்னு அத்தை பொண்ணு வந்து நிக்குது, இவள் ஏன் வந்தாள்ன்னு தெரியலையே, கையில அருவா வேற இருக்கே, என்ன உத்தேசத்தோட வந்திருக்காள்ன்னு தெரியலையே”
”எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு, நான் வளர்க்கற நாய்களை தாண்டி எப்படி இவளால இவ்ளோ தூரம் வர முடிஞ்சது”
”அதானே ஆச்சர்யமா இருக்கே புது ஆளுங்க வந்தா எகிறி பாஞ்சி கழுத்தை கடிக்கும்ங்க, ஏன் இவளை கடிக்கலை”
”போ போய் நாய்களை கேட்டு தெரிஞ்சிக்க”
”யாரு நானா, இத்தனை வருஷம் உன்கூடவே இருக்கேன் என்னை பார்த்தாலே சீறிகிட்டு வரும் நான் போகலைப்பா”