தொடர்கதை - சின்ன மருமகள் - 14 - சசிரேகா
மயக்கத்தில் இருந்தவளுக்கு பாஸ்கரனே வைத்தியம் பார்த்தான், ஆம் பாஸ்கரன் ஒரு எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், தக்க சமயத்தில் அவளுக்கு வைத்தியம் செய்ததில் கண்விழித்துப் பார்த்தாள் மஹதி, மகேந்திரன் சாந்தி இருவரும் கவலையாக இருந்தார்கள்.
பாஸ்கரனின் பெற்றோர்களோ குழப்பமாக இருந்தார்கள், மஹதியோ இருப்பவர்களை பற்றி கண்டுக்கொள்ளாமல் மற்றவர்களை தேடினாள், கண்களால் சுழலவிட்டாள் அவள் தேடியவர்கள் இல்லை, அதனால் எழுந்து அமர்ந்துப் பார்த்தாள், அப்போதும் அவர்கள் இல்லை அதில் அவளுக்கு ஆயாசமே பிறந்தது.
சோர்வாக இருந்தவளைக்கண்ட பாஸ்கரனோ
”மஹதி ரொம்ப வீக்கா இருக்கீங்க, சரியான சாப்பாடு இல்லையா” என சாந்தியைப் பார்த்து கேட்க அவருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை மகேந்திரனோ
”அதெல்லாம் இல்லை கல்யாணம்ங்கறதால கொஞ்சம் டயட்ல இருந்தா” என சொல்ல பாஸ்கரன் கலகலவென சிரித்தான்
”டயட்டா எதுக்கு? மஹதி சிற்பம் போல இருக்காளே, இதுக்கு மேல டயட்ல இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு டாக்டரா இல்லை அவளுக்கு வரப்போற ஹஸ்பெண்டா சொல்றேன், மஹதிக்கு டயட்டிங் அவசியம் இல்லை, அவள் எப்படியிருக்காளோ அப்படியே அவளை ஏத்துக்கறேன்” என சொல்ல மகேந்திரனுக்கு சிரிப்பதா வெறுப்பதா என்றே தெரியவில்லை.
”நல்ல நாள்ல இப்படி அபசகுணமா நடந்துடுச்சி, அதனால அடுத்த முறை வேணா நீங்க வாங்களேன்” என சாந்தி சொல்ல பாஸ்கரனோ
”இதுல அபசகுணத்துக்கு என்ன இருக்கு, எனக்கு அந்த பார்மாலிடீஸ் மேல நம்பிக்கையில்லை எனக்கு மஹதியை பிடிச்சிருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கா கேட்டு சொல்லுங்க அவங்களும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா அடுத்து கல்யாண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கலாம், கல்யாணம் ஆனதும் லண்டனுக்கு அவங்களை கூட்டிக்கிட்டுப் போயிடறேன்” என சொல்ல மஹதிக்கு திக்கென்றது