”எப்படியிருக்கீங்க தருண்” என்றாள் ஹரிணி மென்மையாக, அதற்கு தருணோ துக்க பெருமூச்சு விட்டு
”ஏதோ இருக்கேன் என் அப்பா அம்மாவுக்காக நான் வாழறேன் அவ்ளோதான்”
”உங்களுக்காவது வாழறதுக்கு அப்பா அம்மாங்கற உறவு இருக்கு, எனக்கு அது கூட இல்லை, ஏன் வாழறேன் எதுக்கு வாழறேன்னு தெரியலை, தற்கொலை செய்ற அளவுக்கு முட்டாளும் இல்லை வாழறவரைக்கும் வாழலாம்னு என் வாழ்க்கையை அது போக்குல விட்டுட்டேன்” என சொல்லி நீண்ட பெருமூச்சு விட்டாள் ஹரிணி. அவளின் இந்தப் பேச்சு தருணிற்கு பிடித்திருந்தது
”அப்பா அம்மா இருக்காங்களேன்னுதான் வாழனும்ங்கற கட்டாயத்தில நான் வாழ ஆரம்பிச்சேன், ஒருவேளை எனக்கு அப்பா அம்மா இல்லைன்னா முட்டாள்தனமா நான் தற்கொலை செய்துக்கிட்டு இருப்பேனே தவிர உன்னை போல சாரி சாரி உங்களை போல தைரியமா இந்த உலகத்தில வாழ்ந்திருக்க மாட்டேன்”
”ப்ச் என்ன செய்றது நாம வாங்கி வந்த வரம் அப்படி, ஓகே இப்ப விசயத்துக்கு வரலாம் எதுக்காக இங்க வேலைக்கு வந்தீங்க, முன்ன நீங்க வேலை பார்த்த கம்பெனியில ஏதாவது பிரச்சனையா”
”ஆமாம் நான் முன்னாடி வேலை பார்த்த கம்பெனி எனக்கு பிடிக்கலை”
”காரணம்”
”அங்க நானும் பவானியும் ஒண்ணா வேலை பார்த்தோம், அவள் இல்லாத கம்பெனியில வேலை செய்ய எனக்கு பிடிக்கலை, ஒரு மாதிரியா இருந்தது, நிம்மதியா வேலை செய்ய முடியாம போகவும், நானே வேலையை விட்டுட்டு வந்துட்டேன்”
”அந்த கம்பெனியில நீங்க என்ன வேலை பார்த்தீங்க”