தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 07 - சசிரேகா
ஓட்டல் அறையில் தன்னை கை ஓங்கி அடிக்க வந்த அர்ஜூனை தடுத்து நிறுத்த போராடிய ரிஷியின் மீது பாய்ந்தான் அர்ஜூன். நந்தினி ஓரமாக சென்று நின்றுக்கொள்ள அர்ஜூனும் ரிஷியும் உருண்டு புரண்டு சண்டையிட்டு கடைசியில் ரிஷியே அந்த சின்ன சண்டையில் ஜெயித்தான். அவன் அர்ஜூனை மடக்கி கட்டிலில் தள்ளிவிட்டு மூச்சு வாங்க நின்றான். ஆனால் அர்ஜூனோ இன்னும் கோபாவேசத்துடன் இருப்பதைப்பார்த்தவன் மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அர்ஜூனிடம்
”ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா எதுக்கு இப்படி சண்டைபோடற அதுவும் என்கூடயா சண்டை போடுவ” என கத்தினான் ரிஷி
“என்ன செய்றீங்க இங்க”
“உனக்கெதுக்கு நீ போ வெளிய”
“உள்ள இருக்கறது என் தங்கச்சி” என சொன்னவன் நந்தினியிடம் கோபமாக பேசினான்
”என்னம்மா இதெல்லாம் ஓட்டல் வரைக்குமா வர்றது. நீ நல்லபொண்ணுதானே இப்படியா செய்வ உன் மேல நான் எவ்ளோ நம்பிக்கை வைச்சேன். என் நம்பிக்கையை இப்படி கெடுக்கலாமா சொல்லு இப்படி நீ வர்றதை யாராவது பார்த்தா தப்பா நினைக்கமாட்டாங்களா சொல்லு” என கத்தவும் அவளுக்கு அழுகை வர அழுதுக்கொண்டே அர்ஜூனிடம் ஒட்டிக்கொண்டாள். அதைப்பார்த்த ரிஷி
”டேய் நீ எதுக்கு இப்ப அவளை அழவைச்ச” என கோபத்தில் கத்தினான். அதற்கு அர்ஜூனும் அதே கோபத்துடன்
“அண்ணா உங்களுக்கு அறிவிருக்கா நேத்து மகாபலிபுரம் இன்னிக்கு ஓட்டலா என்ன நினைச்சிட்டு இப்படி செய்றீங்க அவள் என் தங்கச்சி அதை மறந்துடாதீங்க”
“இப்ப என்னாச்சி நான் எதையுமே செய்யலை வேணா அவளைப்பாரு”