தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 09 - சசிரேகா
அடுத்த ஒரு வாரம் தருணும் ஹரிணியும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள். அவனுக்கு அச்சம், அவளுக்கு பயம், மறுபடியும் அவனிடம் சிக்கிக் கொள்ளக்கூடாதென அவனை தவிர்க்கத் தொடங்கினாள். அவனுக்கோ ஹரிணியை விட்டுவிட மனதில்லாமல் அவளின் கோபம் தணியட்டும் என காத்திருந்தான்.
இதில் பவானியின் நினைவு நாள் வந்தது. அன்று மட்டும் அவளிடம் வாய் திறந்து பேசினான்
”இன்னிக்கு பவானியோட நினைவு நாள்” என தயங்கி தயங்கி சொல்ல அதைக்கேட்டு அவளின் மனம் சற்று தடுமாறியது.
”அதுக்கு” என்றாள் மெதுவாக
”இல்லை பவானியோட முதல் நினைவு நாள் அதனால”
“அதனால” என்றாள் குழப்பமாக
”படைக்கனும் அதுக்கு” என இழுக்க
”சொல்ல வந்ததை சொல்லித் தொலைங்க“ என எரிந்துவிழவும் அவன் திடுக்கிட்டான்
”சாரி ஹரிணி எனக்குத் தெரியும், பவானி பேச்சை எடுத்தாலே உனக்கு பிடிக்காதுன்னு இருந்தாலும் பவானி என் முன்னாள் மனைவி, அவள் இறந்தாலும் அவளுக்கு செய்ய வேண்டியது செய்றது என் கடமை”
”ஓ கடமை” என்றாள் இளப்பமாக அவளின் பேச்சில் ஒரு நக்கல் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். எப்போதும் பவானி பற்றி தான் பேசும் போதெல்லாம் இப்படித்தான் ஹரிணி இளப்பமாக சிரிப்பது, இளப்பமாக பேசுவது என இருக்கவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
”எதுக்கு இப்படி பேசற இளங்கோவோட நினைவு நாள் வந்தா நீ படைக்க மாட்டியா” என கேட்க அவளோ அவனை ஆச்சர்யமாக பார்த்து தலையை ஆம் என்பது போல் ஆட்டிவைக்க