(Reading time: 34 - 67 minutes)

ஜூன் 2, சனிக்கிழமை

பாண்டியனை போனில் அழைத்தாள் வடிவு. “யையா உடம்பு எப்படி இருக்கு?” பாசத்தை குழைத்து நலம் விசாரித்தவளுக்கு பதிலளித்த பாண்டியனிடம்,

“நம்ம பக்கத்து சமீன் வீட்டு ஆளுக பொண்ணு சாதகத்தை அனுப்பி இருக்காக. நெருக்கி வாராக. இருநூறு சவரன்... தோப்பு தொறவு என்ன... வாய்க்கா வரப்பு என்ன... கனவுல கூட நினைக்கல ராசா உனக்கு இம்முட்டு பெரிய இடத்துல சம்மந்தம் வரும்னு.. எனக்கு கையும் ஓடலை... காலும் ஓடலை...” என பேசிக் கொண்டே போன வடிவின் பேச்சில் இடைபுகுந்த பாண்டியன்,

“என்ன ஆத்தா...முதல்ல அந்த தன்ராசையும் அவ மவளையும் ஒரு வழி பண்ணிட்டு தான் வேற வேலை பாக்கப் போறேன். உன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்ல” என்றான் கடுப்பாக.

“அட... அவன் கெடக்குதான் பொட்டைப்பய. அவனை தேன் வாக்கு சுத்தமில்லாத பயன்னு ஊரே பேசுதே! இனி இந்தப் பக்கம் தல வச்சு கூட படுக்க மாட்டான்... காத்துள்ள போதே தூத்துத்துக்கணும் சொலவடை சொல்லுவாக. நல்ல சம்மந்தம்... ராசா மாதிரி வாழுறதை விட்டுபுட்டு கண்ட நாயை பாத்துகிட்டு கெடக்காதா... அந்த சிரிக்கி அழகா இருக்குதோம்னு ஆட்டம் போடுதால.... அவ இந்த சமீன் பொண்ணு கால் தூசிக்கு பெற மாட்டா.  பொண்ணு அப்படியே பட்டு ரோசாவாட்டும் இருக்குதா! .. சுண்டுனா ரத்தம் வரும்.. என்ன நெறம்... என்ன அழகு.. இவள மட்டும் நீ கட்டிகிட்டா ஊருக்குள்ள அத்தனை பயலும் வாயை பொளப்பான்” என்றாள் வடிவு பெருமிதமாக.

பணம் பத்தும் செய்யுமாம் அது வடிவிற்கு மிகப் பொருந்தும்... மகனை கரைத்த கரைப்பில் அவனுக்கே லேசாக ஆர்வம் வர, “நீ சொல்றது எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா, என்னை நாலு பேரு அசிங்கமா பாக்க வைத்தவளை சும்மா விட சொல்லுறியா?”

“அதான் காளியாத்தாக்கு காசு வெட்டி போட்டுருக்கேன்னுல்ல. அவளுங்களுக்காக வீட்டுக்கு வர்ற சீதேவியை எதுக்கு முடக்கி போடணும்  தேன்? எல்லாத்தையும் மூட்டை கட்டி தூரப் போட்டு கண்ணாலம் கட்டி வாழுத பொழப்பை பாரு! கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் நஞ்சை... நினைச்சாலே புல்லரிக்குது ராசா... உனக்கு போன்ல அந்த மவராசி போட்டாவை  அனுப்பி விட சொல்லுதேன்” என வடிவு சொல்லிக்  கொண்டிருக்கும் பொழுதே வீட்டின் அழைப்பு மணி அடிக்கப் பட அவசரமாக அவளிடம் விடை பெற்று கதவை திறந்தான் பாண்டியன். அங்கே நின்றது பச்சை.

உள்ளே வந்தவனிடம் வடிவு சொன்ன விசயத்தை கூறி, “கொஞ்ச கொழப்பம்... ஆத்தா ஊரில பொண்ணு பாத்து வைச்சிருக்கு! இந்த நேரம் வம்பு வழக்குன்னு போகவான்னு இருக்கு! அதுக்காக இந்த சிவப்பி செய்ததை சகிச்சுகிட்டு போவ முடியலை!...” என்றான் பாண்டியன், இரு தலை கொல்லியாக...

“இதே போல எத்தனை பார்த்திருப்போம். உனக்கு எந்த பிரிச்சனையும் வராது பங்காளி. அப்படியே வந்தாலும் உனக்காக நான் செயிலுக்கு போறேன்”, என்ற  பச்சையின்  பேச்சு ஆறுதல் அளிக்க,  சற்று நிம்மதியாகி தங்கள் திட்டத்தை செயல் படுத்த ஆயத்தமானான்.

விடிந்து பல மணி நேரமான பொழுதும், தூக்க மாத்திரையின் தாக்கத்தில் வெகு நேரம் தூங்கிய மதுவின் காதருகில்,

“ஜீரா…..... ஜீரா”, என்று சில நிமிடங்களுக்கு ஒரு முறை யாரோ அழைப்பது போல கேட்க, கண்களை திறக்க முடியாமல் திறந்தாள்...

யாரும் கண் முன் தென்படாததால் மீண்டும் கண்களை மூடப் போன பொழுது  மீண்டும் “ஜீரா” என்ற அழைப்பைக் கேட்டு விழித்து, குரல் வந்த திசையை பார்த்தவள் அதிசயத்து போனாள்…

அங்கே மனித குரலில் பேசும் பஞ்சவர்ண கிளி… ”ஐய்ய்ய்…”, என மகிழ்ச்சி பொங்க குதித்து எழுந்தாள்….

சற்று தள்ளி நின்ற கிளி, ”ஜீரா” என மீண்டும் அழைக்க, அது யாரை அழைக்கிறது என மது குழம்பிய நேரம்,

“உன்னே தான் சொல்லுது” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் நிரஞ்சன். தரையோடு விரிக்கப் பட்ட மெத்தை மேல் அமர்ந்திருந்த மதுவை நோக்கி வந்தவனின் சோர்ந்த குரலும்  சிவந்து வீங்கிய கண்களும் மனதை பிசைய அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள் மது.  அவள் அருகில் வந்து அமர்ந்து அவளது கரத்தை  பற்றிக் கொண்டு,

“நான் நாசம் செய்யுது ஜீரா நீ தான்” என்றான் கரகரத்த குரலில்…

அவன் சொல்வது முதலில் புரியாமல்  பின் கிரகித்துக் கொண்ட மது, என்ன சொல்வதென்று தெரியாமல் நெஞ்சம் பட படக்க, படக்கென்று கையை அவனிடம் விலக்கி பார்வையை தாழ்த்தி,

“நாசம் இல்ல...நேசம்…",  என மெல்லிய குரலில் திருத்தினாள்… அவள் கோபப்படவில்லை... அதே நேரம் அவன் சிறு பிழை செய்தாலும் வழக்கமாக முகத்தில் தோன்றும் சிரிப்பும் அவளிடத்தில்  இல்லை… நாம் செய்ததற்கு சிரிப்பாள் எதிர்பார்ப்பது பேராசை என எண்ணிக் கொண்டவன்,

“ஸாரி... நான் நேசம் செய்யுது  ஜீரா நீ தான்…” என்று  சற்று தெம்பான குரலில் திருத்தி சொன்னான். மீண்டும் இதே போல பிழையாக பேசுவதை தவிர்க்க எண்ணி  ஆங்கிலத்திலே தொடர்ந்தான்...

“கல்லாரிக்கு வந்து சேர்ந்த முதல் நாளே எனக்கு கார்த்திக்கின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒரே அறையை பகிர்ந்தோம். அந்த அறைக்கு நீ போனில் அழைத்த பொழுது உன் குரலை  முதல் முறையா கேட்டேன். போனை எடுத்தவுடன் பேசுவது கார்த்திக் என  நினைத்து ஐ மிஸ் யு காதின்னு அழுதது இன்னும் நினைவு இருக்கு… ஏதோ மனதை பிசைந்தது…. அப்போ இருந்தே உன்னை பத்தி தெரிந்து கொள்ளனும்னு  ஆர்வம் இருக்கும். உன்னுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறப்போ எல்லாம் தவறாம பேசிடுவேன்…”

“மூன்றாவது ஆண்டு இறுதி விடுமுறைக்கு  கார்த்திக்குடன்  உங்க வீட்டுக்கு வந்தேன். அப்பொழுது தான் உன்னை நேரில் பார்த்தேன். ஸ்கூல் படிக்கும் சின்ன பொண்ணா... அழகா இருந்த…. கள்ளங்கபடமில்லாம நீ பழகும் விதம் பிடித்து இருந்தது….. நான் திரும்பி ஊருக்கு கிளம்பும் பொழுது என்னோட வாட்சை விட்டுட்டு வந்துட்டேன்னு பாட்டியுடன் ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து குடுத்துட்டு போன… அந்த ரயில் பயணம் முழுக்க முழுக்க உன் நினைவு தான் வந்துகிட்டே இருந்தது! இனி அடுத்து எப்ப பார்க்க போறோம்னு பரிதவித்தேன்… இது வெறும் ஈர்ப்பு தான் என்னை நானே தேற்றிக் கொண்டேன்..”

“ஆனா, நாட்கள் செல்ல செல்ல உன் நினைவு அதிகமாக தான் செய்தது… பின்பு தான் உணர்ந்தேன், உங்க வீட்டில் விட்டு விட்டு வந்த பொருள்... என் மனது... அதை நான் உணர்ந்தப்போ உனக்கு வயது கம்மி. அதோடு உங்க வீட்டில் வெளி மாநிலத்தவனுக்கு கண்டிப்பா பெண் கொடுக்க மாட்டாங்க. ஒரே வழி, காதல் திருமணம் புரிவது. அதற்கு என் காதலை புரிந்து ஏற்று கொள்ளும் முதிர்ச்சி உனக்கு இல்லை.... என் காதல் நிறைவேறாதுன்னு வேலையிலும், தொழிலிலும் என்னை ஈடுபடுத்தி உன்னை மறக்க முயன்றேன்... முடியவில்லை.. நாள் முழுதும் வேலையில் கவனம் செலுத்தி விட்டு, இரவில் படுக்கையில் கண்களை மூடிய மறு நொடி கண் முன்  வந்து நிற்பாய்... இப்படியே பல வருஷம் ஓடி விட்டது. நீயும் ஆழமா நெஞ்சில் பதிந்து விட்டாய். எங்க காலிகட் காளிகிட்ட நான் செய்த வேண்டுதலின் பலனா... என்னன்னு தெரியலை... கார்த்திக் என் காதலை தெரிந்து கொண்டு உங்க வீட்டில் பேசினான். ஆனா, மன அழுத்தத்தில் தற்கொலை வரை சென்ற உன்னை யாராலும் எந்த விதத்திலும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த முடியாது… கட்டாயபடுத்துவதை நான் விரும்பலை. என் மேல விருப்பம் உனக்காக  வர வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்தேன்… சந்தியாவும் கார்த்திக்கும் என் மனதை உன்னிடம் வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தார்கள். ஆனா, நான் நேற்று  நடந்த விதத்தில் என்னோட  காத்திருப்பு, அவங்க உதவி எல்லாம் வீணாகி போனது! என்னை மன்னித்து விடு மது” என வருத்ததுடன் முடித்தான்...

அவன் சொல்வதை கேட்க கேட்க மதுவின் உள்ளம், “இந்த அளவிற்கு நேசித்து இருக்கானா?” என துள்ளியது... ஆனால் அந்த மகிழ்ச்சியை தூக்கி சாப்பிட்டது மனதில் எழுந்த இனம் புரியாத  பயம்… அது அவள் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது!

அதைக் கண்டதும் திடுக்கிட்ட நிரு அவளை நெருங்கி கண்ணீரை துடைத்த படி,

“உன் அழுகையை  என்னால் பார்க்க முடியாது! கல்யாணம் செய்துக்கோன்னு கட்டாயபடுத்த மாட்டேன்.. என் வாழ்க்கை உன் சிரிப்பில் தான் மது” என்றான் ஆங்கிலத்தில் வேதனையுடன்…

அதில் கரைந்தவள் அவன் தோளில் சாய்ந்தாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.