(Reading time: 34 - 67 minutes)

ன்னை வயித்துல சுமந்த அம்மாவே வெறுத்துட்டாங்க... இத்தனை வருஷம் மனசுல சுமந்து இருக்கீங்களே…. ஐ அம் சோ லக்கி நிரு... உங்க லவ் பிடிச்சிருக்கு”, சொல்லும் பொழுதே நெஞ்செல்லாம் மகிழ்ச்சியில் நிறைந்து உடல் சிலிர்க்க கண்ணீர் பொங்கியது….

அவன் மனதில் சுமந்த காதலை பிரசவித்த தாயானான்..... அவள் அந்த  காதலில் மீண்டும் ஜனித்து முதல் சுவாசத்தை பெற அழும் குழந்தையாய்   குமுறி அழுதாள். தன்னவளை வாஞ்சையுடன் உச்சி நுகர்ந்து முத்தமிட்டு, அவள் முகத்தை தன் உள்ளங்கைகளுக்குள் அடக்கி கட்டை விரலால் கண்ணீரைத் துடைத்தான்.

தன்னை பற்றியிருந்த அவன் கைகளின் மீது தன் கைகளை வைத்து அழுத்திய மது அவனைப் பார்த்து,

“நிரு....என்னால...என்னால...உங்க கூட வாழ முடியுமான்னு தெரியலை..... எனக்கு ஏதோ பயம் மனசை அழுத்துது”, உடைந்த குரலில் சொல்லிக்  கொண்டே மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தாள்... நெஞ்சுக்குள் தஞ்சமானவளை கட்டி அணைத்த நிரு,

“மதுக்கு பேயம் போகுது, ஆப்புராம் நாம் வேளுது ...சரியா? இப்போ அல்லா துள்ள ?” என்றான் மென்மையாக.

அவன் சொல்வதை கேட்டு சற்று இறுக்கம் தளர்ந்து, அவன் மார்பிற்குள் புதைந்து கிடந்தவள் நிமிர்ந்து, “எதுக்கு அல்லா வை கூப்பிடுறீங்க நிரு?”, என கண்ணீரோடு அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவள் சிரிப்பில் திளைத்தவன்,

“மது ஸ்மைல் பண்ணுதே! அல்லாக்கு தேங்க்ஸ்! ” என்று சொல்லிக் கொண்டே ஆசையில் அவள் கன்னத்தில் அழுத்தமான முத்தத்தை பதித்தான். முத்தம் பெற்றதும்  கன்னங்கள் சிவக்க வெட்கத்தில் மீண்டும் அவன் மார்பிலே புதைந்தாள்….  இதற்காகவே காத்திருந்த நண்பர்கள் கூட்டம் அவர்களை சுற்று வளைத்து,

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா

குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா

தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா

இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

என கும்பலாக பாட,  இருவரும் வெட்கத்தில் நெளிந்தனர்…

“ஹே... ஹாலிவுட் ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்.. பாரதி ராஜா படமாக்கி விட்டீங்களே”, என்று  அவர்களைப் பார்த்து அலுத்துக் கொண்ட சந்தியா, மதுவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“கொல்காப்பியா…..எப்படியோ தப்பு தப்பா தமிழ் பேசியே கரக்ட் பண்ணிட்ட…” என்றான் சிவா நிரஞ்சனை பார்த்து லேசான பொறாமையுடன்…

“உனக்கு ஏன்டா பொறாமை? அவன் எட்டு வருசமா ஒருத்தியை லவ் பண்ணியிருக்கான்...நீ ஒரு வருஷத்துக்கு எட்டு பேரை ரூட் விடுற” என்று கிண்டலாக சொல்லி விட்டு நிருவை நெருங்கிய கார்த்திக் அவன் தோளைத் தட்டி கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தான்..… பின் மதுவை பார்த்து,

“மொட்டை... அழுது அழுது அவன் சட்டையிலே மூக்கை துடைத்தியா? இப்பவாவது கொஞ்சம் விட்டு வைக்கிறது?” என கிண்டலடிக்க,

வெட்கத்தில் கன்னம் சிவந்து புன்னகையுடன் சற்று நகன்று உட்கார்ந்தாள்… அனைவர் கண்ணும் இந்த ஜோடி புறாக்கள் மீதிருக்க, சிவாவோ,

“டேய் கொல்காப்பியா...அந்த கிளியை அம்போன்னு விட்டுட்டு நீங்க இங்க கொஞ்சிகிட்டு இருக்கீங்க…” என்று சொல்லிக் கொண்டே அறையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கிளியை கைகளில் தூக்கி வந்து அவன் தோளில் வைத்துக் கொண்டு,

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

என பாடினான் சிவா.

அதையே  நிரு,

“பிச்சே   கில்லி கல் தேள் ஆடு

பட்டு  குய்யாளா மடி யாடு

பல்லா கும் ஆனந்த் இல்லே…

இந்தே பாமிக்கு  கன்னி சந்தா இல்லே”

என்று பாட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க,

அதை பெருமையாக  நினைத்து “நான் எப்படி பாடுது?” என சிவாவிடம் கேட்டான் நிரு.

“ம்ம்...நல்லா பாடுதே...அடுத்த தடவையாது தமிழ்ல பாடு….ஆனா ஒன்னு, இனி உன் முன்னாடி பாட்டே பாட மாட்டேன்டா சாமி” என அங்கே சிரிப்பலை...

அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க இளையவர்களுடன் சம வயதினரைப் போல தங்களை இணைத்துக் கொண்டனர் சுலோ பாட்டியும், சின்னா தாத்தாவும்…. அனைத்தையும் புகைப்படம் எடுக்க தனது காமிராவை எடுக்க வேறு அறைக்கு சென்ற கார்த்திக்கை  பின் தொடர்ந்தாள் சந்தியா.

காமிராவை எடுத்து கழுத்தில் மாட்டிய கார்த்திக்கின் முகம் பிரகாசமாக ஜொலிப்பதை கண்டு அவனருகில் சென்ற சந்தியா,

“பழனியப்பன் ஏக குஷில இருக்காப்பல”, என்றாள் சிரித்துக் கொண்டே…

“இன்றைய நாளை குறித்து வைக்கணும்...நிஜமாவே மகிழ்ச்சியா இருக்கேன்...எல்லாத்துக்கும் இந்த லக்கி சார்ம் தான் காரணம்” என்றான் அவள் மூக்கை பிடித்து ஆட்டிய படி…

“ஸ்...ஆ வலிக்குது”, கத்தினாள் சந்தியா.

“சப்பை மூக்கி” , என்று கிண்டலடித்தான் கார்த்திக்…

“ஹே...எனக்கு கத்தி மூக்கு ”, என்றாள் சிலிர்த்துக் கொண்டு.

“கத்தி மூக்குன்னா இப்படி இருக்கணும்” என அவன் மூக்கை தொட்டு காண்பித்தான்…

“ம்ம்...எனக்கு மொட்டை கத்தி... உங்களுக்கு கொஞ்சம் கூர்மையான கத்தி... அதான் சும்மா சும்மா மூக்கு மேல கோபம் வருதோ?”, இடுப்பில் கையை வைத்து சளைக்காமல் வாதாடினாள்...

அவளை ஏறிட்டு பார்த்தவன், “ஹூம்... சும்மா கோபம் வருமா? தப்பு செய்கிறப்போ தான்  கோபம் வரும்” என்றான்  சாவகாசமாக.

“ஹாஸ்பிட்டல் போறது தப்பா….தியேட்டர் போறது தப்பா...இதுக்கெல்லாம் புஸ் புஸ்ன்னு கோபம் வந்ததே உங்களுக்கு?”, கேட்டாள் சந்தியா.

“எங்கிட்ட சொல்லாம போனா கோபம் வரும். ஏதாவது ஒண்ணு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா எங்க போய் தேடுவோம்? இதுல உங்க வீட்டில் கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு சினிமாக்கு போயிருக்க! ”, என்றான் சற்று கோபமாக.

“ஆமா, உண்மை சொன்னா விட மாட்டாங்க. அதான்” என்றாள் தோளை குலுக்கிக் கொண்டு அலட்சியமாக. அவளது கையை பற்றி தன்னருகில் இழுத்தவன் “better safe than sorry சந்தியா. எங்க போனாலும் சொல்லிட்டு போ...உனக்காக வேண்டாம்…. எனக்காகவாவது...”, என தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை ரசித்தவள், அவன் சட்டை காலரை சரி  செய்த படியே,

“அப்போ லஞ்சம் கொடுக்கணும்” என்று புதிர் போட்டாள். அதற்கு அவன் கேள்வியுடன் அவளையே பார்க்க, அவளோ குறும்பாக,

“முத்தம் இந்த மாதிரி ஏதாவது லஞ்சம்”, என்றாள் விழிகளை உருட்டி...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.