(Reading time: 42 - 84 minutes)

திகாலை வெளிச்சம் அறையினுள் பரவியது… மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தவன், அவள் கிடைத்துவிட்டதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்… எனினும் அவளது கோலம் அவனை வதைத்தது… தூங்காமல் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தவன், உடல் அசதியால் விடிகாலையில் மெல்ல கண் அயர்ந்துவிட்டான்…

விழிப்பு சட்டென்று வர, விழித்தவனின் எதிரே, தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள் ரிகா… அவள் உடல் அழுகையில் குலுங்கியது… அதைப் பார்த்தவனுக்கு மனம் வலித்தது…

முதலில் உன்னை தான் பார்க்கணும், ரசிப்பது பூக்களாக தான் இருக்கணும், பட்டாம்பூச்சியாக பறக்கணும் என்று சொன்னவள் இப்படி ஓய்ந்து போய் இருக்கின்றாளே… சாப்பிட்டாளோ, இல்லையோ என்று நினைத்தவன், வேகமாக தயார் செய்து அவளிடத்தில் கொண்டு வந்தான்…

“ரிகா… சாப்பிடுடா…”

“……………”

“ரிகா… ப்ளீஸ்டாம்மா… சாப்பிடு…”

“…………….”

“இங்க பாருடா… என்னை… பாரு…”

“……………”

“ரிகா…. “ என்று பல முறை அழைத்துப்பார்த்தும் அவள் நிமிரவில்லை…

“சரி… கிளம்பு… அம்மா.. அப்பாவை பார்த்துவிட்டு வரலாம்…”

“எங்கே… சொர்க்கத்திலேயா?...” என்ற குரல் கேட்க , அவளைப் பார்த்தவன் திகைத்தான்…

அழுத விழிகளும், கலைந்த கூந்தலும், வாடிய முகமும், அவனை பதற செய்தது… அவளது எதிரே அமர்ந்தவன்,

“என்னடா…. சொல்லுற?...”

“அவங்க இப்போ உயிரோட இல்லை…”

“வாட்!!!!!!!!!!!!!!.... யார் சொன்னா உனக்கு?...”

“சொன்னாங்க… எல்லாம் தெரியவும் செய்தது…” என்று கசப்பான புன்னகை சிந்தினாள்…

“யாருடா அவங்க… உனக்கு தெரிஞ்சவங்களா?... அப்படின்னா, என்னிடம் சொல்லிவிட்டு நீ அவர்களுடன் சென்றிருக்கலாமே…”

“…………….”

“உன்னை காணாது நான்… நான்… நான்….” என்று பேச வார்த்தை இல்லாது தவித்தவனை இயலாமையோடு ஏறிட்டாள் அவள்…

இவனுக்கு நான் என்ன செய்தேன்… என்னை ஏன் இப்படி தாங்குகிறாய் நீ?... வேண்டாம்…. என் மேல் பாசம் கொள்ளாதே… பாவம் செய்தவள் நான்… உன்னை விட்டு விலகுவதே உத்தமம்…

“நான் கிளம்புகிறேன்….” என்று எழுந்தவளை அவனது குரல் இடைமறித்தது…

“எங்கே…”

“………..”

“சொல்லு… எங்கே போகிறாய்…”

“கண்டிப்பாக சாக இல்லை…”

“அபத்தமாக உளராதே…. சொல்லு…”

“……………”

“கேட்கிறேனே… சொல்லு…”

“தெரியாது எங்கே என…”

“பின்னர் ஏனிந்த முடிவு?...”

“இதுதான் எல்லோருக்கும் நல்லது…”

“நிச்சயம் எனக்கில்லை…”

“………………….”

“என்ன நடந்தது என்று நான் உன்னை கேட்க மாட்டேன்.. நீயாக சொல்லும் வரை… ஆனால் அதே சமயம்… என்னை விட்டு செல்லவும் உன்னை நான் அனுமதிக்க மாட்டேன்… அது உறுதி…” என்று அழுத்தி சொன்னான்…

“நான் மறுத்தால்?...”

“மாட்டாய்…..”

“மறுத்தால்?...”

“நான் சாவேன்….”

“அண்ணா….!!!!!!!!!!!!!!!!!”

“அப்படி நீ எண்ணுவதாய் இருந்தால், நான் சொல்வதை கேள்…. நீ எங்கும் செல்ல கூடாது என் அனுமதியின்றி…. உன்னையும் இழக்க நான் தயாரில்லை ரிகா… புரிந்து கொள்… நான் இழந்த வரை போதும்…. என்னால்… இதற்கு மேலும் இழப்பை தாங்க இயலாது…” என்று கூறி அங்கிருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்தான்…

வனின் சொற்கள் அவளுக்கு வேதனையை அளித்தது… அவள் நன்றாக இருக்கவேண்டுமென்று நினைத்தவனின் வாழ்வில் இழப்பா?... அதை அவளும் கண்டுக்காமல் இருப்பதா?...

“யாரிந்த பெண்?...”

“ரிகா… தாரிகா…”

அவன் அன்று ஏன் தனது பெயரை கேட்டதும் அதிர்ச்சியடைந்தான் என இன்று அவளுக்கு விளங்கிற்று…

“இவங்க…”

“என் தங்கை…” என்று அவளைப் பார்த்துகொண்டே கூறினான்…

என் சிறு வயதிலே நான் தாயை இழந்தவன், தகப்பன் பணத்தை தேடி ஓடினாரே தவிர, என்னை பற்றி எண்ண அவருக்கு நேரமில்லை… ஊட்டியில் படித்தேன்… அங்கே தான் பிறந்தேன்… என் நண்பனின் அம்மா தான் என்னைப் பார்த்து கொண்டார்கள்… என் நண்பர்களும் தான்… ஆனாலும் அவர்கள் வீட்டிற்கு நான் சென்றது இல்லை… அங்கே சென்றால், எனக்கு அந்த குடும்பத்தை விட்டு வர மனமிருக்காது… என் மனம் ஏக்கத்திற்கு உள்ளாகும் என்று அஞ்சியே என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன் அந்த சிறுவயது முதல்…

என் தாயின் ஆசைப்படி, மருத்துவம் படித்து முடித்து வெளி வந்த போது, என் தந்தை இந்த மருத்துமனையை என்னிடம் ஒப்படைத்தார்… முடியாது என்று மறுத்தபோது, இது என் தாயின் ஆசை என்று அவர் கூறினார்… என்னைப் பெற்றவளுக்காக இன்று வரை இந்த மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்…. இரண்டு மாதத்திற்கு முன் தான், எனக்கு ஒரு தங்கை இருக்கின்றாள் என்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது… என் தந்தைக்கு இங்கே ஒரு குடும்பம் இருக்கின்றது போலும்… அந்த பெண்ணிடம் இவன் தான் உன் அண்ணன் என்று என் புகைப்படத்தை காட்டி காட்டி வளர்த்திருக்கிறார்கள்… என்னுடைய ஒரு ஃபோட்டோ கலெக்ஷனே அவளிடம் இருந்தது…

அவளை முதன் முதலில் பார்த்த போது, என் அம்மாவை நேரில் பார்த்து போல் உணர்ந்தேன்... அவளுக்கு என் அம்மா சாயல் அப்படியே இருந்தது… பார்த்ததும் எனக்கு அவள் மேல் பாசம் உண்டானது… அவளும் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்…… இன்றும் எனக்கு அது நினைவிருக்கிறது… பிறகு எங்களின் பந்த பாச பிணைப்பு தொடர்ந்தது… சரியாக பதிமூன்றாம் நாள் இரவு, அவள் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னாள்… அவளை இரண்டு வருடங்களாக ஒருவன் தொந்தரவு செய்வதாக… கேட்டதும் எனக்குள் கோபம் உண்டானது… மறுநாள் அவன் யாராக இருக்கும் என்று கூடவே சென்று என் தங்கையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, யோசனை செய்து கொண்டிருந்தேன்… நேரம் ஆனது தெரிந்தது… அவள் வரவில்லை… ஸ்பெஷல் கிளாஸ் எதுவும் வைத்திருப்பார்களோ என்று பள்ளிக்கு சென்று விசாரித்த பொழுது, அப்படி எதுவும் இல்லாதது தெரிந்தது… எங்கெல்லாமோ தேடினேன்… அவள் இல்லை… மூன்று நாட்களுக்குப் பிறகு, அவளை இந்த வீட்டின் வாசலில் கண்டேன்… உன்னை கோவிலில் நான் பார்த்த மாதிரியே…

அவளைத் தூக்கி வந்து இந்த அறையில் தான் படுக்க வைத்தேன்… கசக்கி எறியப்பட்ட மலராய் என் தங்கை இருந்தாள் முகம் உடல் முழுவதும் இரத்தம்… அன்று மருத்துவமனையில் உன்னை நான் கண்டேனே வாடிய பூவாய்… அப்படிதான் தாரிகாவும் இருந்தாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.