(Reading time: 32 - 64 minutes)

ஷோக்குடனும் கைகுலுக்கி விட்டு, அவன் தனது மனைவியை அறிமுகப்படுத்தி வைக்க அவரிடம் புன்னகை சிந்திவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தவனின் கண்கள்  அத்தையிடம் தஞ்சமானது.

அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் நிறைவும் அவனுக்கு கொஞ்சம் வியப்பைக்கூட தந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அத்தை அதை எப்படி எதிர்கொள்வார்.? தனது மகளையே அவர் நிறுத்தி பார்த்த இடத்தில் இன்னொரு பெண்ணை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று அவன் அடி மனதில் பல நாட்களாக உறுத்திக்கொண்டிருந்த கேள்வி காணமல் போனது போலே இருந்தது.

எதற்காம் இந்த ஏற்பாடுகள்? ஏன் அவசரமாம்? கண்ணில் பல கேள்விகளுடன் அவன் அத்தையை பார்க்க, அவன் மனதை படித்தது போல் அஸ்வினியிடமிருந்து வந்தது பதில் 'இதை ஆரம்பிச்சது நான்தான். இவங்களை வரச்சொன்னது தாத்தா. அம்மாவுக்கு இன்னைக்கு காலையிலேதான் எல்லா விஷயமும் தெரியும்'

இரண்டு நாட்களுக்கு முன் அஸ்வினியின் எண்ணிலிருந்து தாத்தா அழைத்து தனது தந்தையின் எண்ணை வாங்கியதற்கான காரணம் இப்போதுதான் புரிந்தது அபர்ணாவுக்கு.

பரத்தின் பார்வை தாத்தாவிடம் சென்றது 'என்னடா அப்படி பார்க்கிறே. வீடு வெறிச்சோடி போயிருக்கு. அப்படின்னு சொன்னே இல்ல. இந்த மாசத்துக்குள்ளே அபர்ணாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம். வீடு பழையபடி ஆயிடும்.'

அதுக்கில்லை தாத்தா இந்து கல்யாணம் நடக்கட்டுமே முதல்லே...... என்றான் பரத்.

'நடக்கும்டா. உங்க கல்யாணம் முடிஞ்சிட்டாலே அந்த கல்யாணம் தன்னாலே நடக்கும்' என்ன அபர்ணா நான் சொல்றது சரிதானே? என்றார் தாத்தா அபர்ணாவை பார்த்தபடியே.

தனக்கும் அபர்ணாவுக்கும் இருக்கும் நட்பை பற்றி விஷ்வா தன்னிடம் சொல்லி இருந்ததை எல்லாம் தாத்தாவிடம் நேற்று ஒப்பித்து விட்டிருந்தாள் அஸ்வினி. விஷ்வா - பரத் இடையே இருக்கும் விரிசலை சரி செய்ய இதுதான் வழி  என்று தோன்றியது தாத்தாவுக்கு.

விஷ்வாவின் திருமணம் முடியாமல் தனது திருமணம் நடப்பது சரிதானா? என்ற குழப்பத்தில் நின்றிருந்த அபர்ணாவுக்கு சட்டென ஒரு நம்பிக்கை பிறந்தது. தாத்தா சொல்வதும் சரிதானே என்று தோன்றியது. அவளுக்கு. அந்த வீட்டுக்கு மருமகளாகி விட்டால் உரிமையுடன் இந்து விஷ்வா வின் திருமணத்தை நடத்தி விட முடியாதா என்ன?

சின்ன புன்னகையுடன் அவள் தலையசைத்து விட்டு பரத்தின் பக்கம் திரும்ப அவன் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. என்ன நினைக்கிறான் என்று புரியவே இல்லை அபர்ணாவுக்கு.

அபர்ணா கல்யாணத்தை சீக்கிரம் நடத்திடனும்னு நானும் கொஞ்ச நாளா யோசிச்சிட்டே இருக்கேன்பா பரத்தை பார்த்து சொன்னார் அபர்ணாவின் அப்பா. 'இப்போதான் அவளுக்கு கல்யாணத்துக்கு சரியான நேரமாம். இந்த ரெண்டு மாசத்துக்குள்ளே நடக்கலைன்னா அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க. அதனாலே தான் பெரியவர் சொன்னதும் நான் உடனே கிளம்பி வந்திட்டேன் என்றார் அவர்.

அவர் சொல்லி முடிக்க பரத்தின் புருவங்கள் யோசனையுடன் ஏறி இறங்கின.

என்னப்பா? என்றார் தாத்தா பரத்தை பார்த்து. உனக்கு ஒகேயா?

இரண்டு நொடி சிந்தனை. பின்னர் சட்டென புன்னகையுடன் வந்தது பதில் 'ஓகே தாத்தா'

அபர்ணாவின் தோள் அணைத்து புன்னகையுடன் கேட்டாள் அஸ்வினி 'அப்பூ டார்லிங். உங்களுக்கும் ஓகேயா?

'நீ வேறம்மா.' என்றார் அவள் அப்பா. 'அவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி அவ மிஸஸ் பரத்வாஜா மாறி  ரொம்ப நாள் ஆச்சு. இதெல்லாம் சும்மா நம்ம திருப்திக்குதான். உண்டா இல்லையான்னு அவளையே கேளு'.

'அச்சோ.... அதெல்லாம் இல்லைப்பா' அவள் அழகாய் வெட்கி சிரிக்க, எல்லார் முகத்திலும் புன்னகை பரவ, அந்த மகிழ்ச்சியுடனே தாம்பூல தட்டுக்கள் மாற்றிக்கொள்ளப்பட்டன. 

பிப்ரவரி ஒன்றாம் தேதி திருமணதிற்கு நாள் குறிக்கப்பட்டது.

வீடு முழுக்க மகிழ்ச்சி பரவி இருக்க, இரண்டு மோதிரங்களுடன் வந்தாள் அஸ்வினி.

'இது உங்க ரெண்டு பேருக்காக நான் வாங்கிட்டு வந்தது' என்றவள் அப்புவுக்கு போட்டு விடுவீங்களா பரத்வாஜ் சார் என்றாள்.

மெல்ல எழுந்தான் பரத். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து விட, இருவர் கைகளையும்  சேர்த்து பிடித்துக்கொண்டாள் அஸ்வினி. 'நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்' என்றாள் அஸ்வினி.

'அங்கிள்' என்றபடியே அபர்ணாவின் அப்பாவை நோக்கி திரும்பியவள். அந்த திருமண மண்டபத்தின் பெயரை சொல்லி அங்கேயே கல்யாணத்தை நடத்த முடியுமா? என்றாள்,

மண்டபம் அந்த டேட்லே ப்ரீயா இருந்தா பிக்ஸ் பண்ணிடுவோம். ஏம்மா அது ஏதாவது செண்டிமெண்டா? என்றார்.

பார்வையை நிமிர்த்தினான் பரத். அவன் திருமணம் நின்று போன அதே மண்டபம். ஆமாம் அங்கிள் கொஞ்சம் செண்டிமெண்ட்தான் என்றாள் அஸ்வினி. 'அவன் தோற்றுபோன இடத்திலயே மறுபடி ஜெயிக்க வேண்டுமென்று ஒரு ஆசை அவளுக்கு.'

மற்றவர்கள் எல்லாரும் சாப்பிட்டு கிளம்ப, அபர்ணாவின் காதோரத்தில் சொன்னாள் அஸ்வினி 'நீங்க கொஞ்ச நேரம் இருப்பீங்களா. நான் உங்க கிட்டேயும், பரத்வாஜ் சார் கிட்டேயும் கொஞ்சம் பேசணும்.

அவர்கள் எல்லாரையும் வழி  அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் உள்ளே வர அவர்கள் அருகில் வந்த அஸ்வினி, பரத்தின் கையை பிடித்துக்கொண்டு கேட்டாள் 'இப்போ சந்தோஷமா இருக்கீங்களா பரத்வாஜ் சார்.'

ம். என்றான் பரத்

'அப்படியே இதே சந்தோஷத்தோட எங்க பரத்வாஜ் சார் என்னை மனசார மன்னிச்சிடணும்' அவன் கண்களுக்குள் பார்த்து சொன்னாள் அஸ்வினி.

பதில் பேசவில்லை பரத்.

அப்பூ டார்லிங் என்றாள் அஸ்வினி உங்களுக்கு தெரியுமா? எங்க பரத்வாஜ் சார் மட்டும் இல்லேன்னா நான் எப்பவோ மண்ணோட மண்ணா போயிருப்பேன்.

வாழ்க்கையிலே என்னாலே எதுவுமே முடியாதுன்னு நினைச்சு கீழே விழுந்த என்னை கை கொடுத்து தூக்கி விட்டு, நான் படிச்ச காலேஜ்லே எனக்காகவே வேலை பார்த்து எனக்கு, படிப்பு தன்னம்பிக்கை ரெண்டும் கத்து கொடுத்து வாழ்க்கையிலே நிமிர்ந்து நிக்க வெச்சது எங்க பரத்வாஜ் சார்.

அவளை விட்டு அகலவில்லை அபர்ணாவின் பார்வை.

அவரை ஒரு தோழனா, வழிக்காட்டியா, குருவா பார்த்திட்டு இருந்தேன். இந்த உலகத்திலே இருக்கிற எல்லா உறவுகளையும் தாண்டி ஒரு மேலான இடத்திலே தான் நான் அவரை வெச்சிருந்தேன். ஆனால்  திடீர்னு ஒரு நாள் அவரை புருஷனா பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்னு நான் நினைக்கவே இல்லை.

அவர்கூட பேசும் போது பலமுறை நான் எங்கப்பாவோட பேசற மாதிரியே உணர்ந்திருக்கேன்  அவரோட பைக்கிலே போகும் போது எங்க அண்ணனோட போறா மாதிரியே இருக்கும். இப்படி எல்லாம் நினைச்சு அவரோட பழகிட்டு திடீர்னு அவரை புருஷனா பாரு சொன்னா என்னாலே எப்படி முடியும்.? மாமா பையன் - அத்தை பொண்ணுனா காதலிச்சு தான் ஆகணுமா என்ன?

அஸ்வினியின் மன ஆழம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய இமைக்க மறந்திருந்தான் பரத்.

அவர் எனக்கு நிறைய பாடம் சொல்லிக்கொடுத்திருக்கார். ஆனா அவர் எனக்கு கத்துக்கொடுத்த முதல் பாடம் 'எந்த பிரச்னைனாலும் மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு இருக்கிறது ரொம்ப தப்பு. பக்கத்திலே இருக்கிறவங்க கிட்டே, பெரியவங்ககிட்டே சொல்லணும்' அப்படிங்கிறது

ஆனால் அந்த ஒரு பாடத்தை மட்டும் வாழ்க்கையிலே உபயோக படுத்துற தைரியம் எனக்கு வரவே இல்லை. அதுதான் மிகப்பெரிய தப்பு. அதனாலேதான் எல்லா பிரச்னையும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.