(Reading time: 32 - 64 minutes)

'ல்யாணமா? ஒண்ணான் தேதியா? ஹேய்... நிஜமாதானா? இவ்வளவு சீக்கிரமா? நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.' சுற்றி உள்ள சிலரது பார்வை அவனை உரசி செல்வதை கூட அறியாமல் மகிழ்ச்சியின் உச்சியில் கத்தியே விட்டிருந்தான் விஷ்வா.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்திருந்தாள் அபர்ணா. அவன் எதற்குமே இவ்வளவு மகிழ்ந்து போய் அவள் பார்த்தது இல்லை. எப்படிப்பட்ட உறவிது? வியப்பாக இருந்தது அபர்ணாவுக்கு. ' என் சந்தோஷமே அவன் சுவாசமா?

ஹேய்.... மாப்பிள்ளை பேர்கூட எனக்கு தெரியாது? நீ எனக்கு எதுவுமே சொல்லலை பாரு. அவர் பேர் என்ன அப்பூ?

கொஞ்சம் திடுக்கென்றது அவளுக்கு. என்ன சொல்வது அவனிடம்? எப்படி இருந்தாலும் அவனுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். எப்படி சொல்வது?. சொன்னால் அவன் முகன் வாடிப்போகுமா? உற்சாகம் எல்லாம் வடிந்து போகுமா?

சொல்லுடா... அவர் பேர் என்ன?

பேரு... பேர் பரத்வாஜ்...

யோசிக்கவில்லை விஷ்வா. பரத்தை, கண்ணன் என்றே அழைத்து பழகியதால், இந்த பெயருடன் அவனை இணைத்து பார்க்க தோன்றவில்லை அவனுக்கு.

எனக்கு அவரை பார்க்கணுமே? இப்பவே போலாமா? எங்கேடா இருப்பார்? உன் கூட தான் வேலை பார்கிறாரா?

ம்...  ஆனா இப்போ பார்க்க முடியாதே விஷ்வா என்றாள் தயக்கத்துடன்.

அதற்குள் சர்வர் வர, அவர்களுக்கு வேண்டியதை சொல்லி விட்டு அவள் பக்கம் மறுபடி திரும்பினான் விஷ்வா

எனக்கு அவர்கிட்டே அட்லீஸ்ட் பேசணும்டா.. போன் பண்றியா நான் பேசறேன். குழந்தையாய் கேட்டான் விஷ்வா. என்னை பத்தி அவர்கிட்டே சொல்லி இருக்கியாடா?

ம். அவருக்கு எல்லாம் தெரியும் விஷ்வா.

'அப்போ போன் பண்ணு. நான் பேசணும். ப்ளீஸ் டா. ஒரே நிமிஷம் நான் போய் கை வாஷ் பண்ணிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே நீ போன் பண்ணு.' நகர்ந்தான் விஷ்வா.

அவன் அங்கிருந்து செல்ல பரத்தின் எண்ணை அழுத்தினாள் அபர்ணா. அப்போதுதான் தனது வீட்டுக்கு வந்திருந்தான் பரத்.

சொல்லுடா...கண்ணம்மா

விஷ்வாக்கு உங்க கிட்டே பேசணுமாம்.

என்னது?

இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்க போறவர் கிட்டே பேசணுமாம். அது நீங்கதான்னு அவனுக்கு தெரியாது.

ஏன்? நீ சொல்லலியா?

இல்லை. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை....

அது சரி என்றான் பரத். லூசுடி நீ...

சரி அப்படியே இருந்திட்டு போறேன். இப்போ நீங்க அவன்கிட்டே பேசுவீங்களா?

என்ன பேசணும்.?

தெரியலை. அவன்  ஏதாவது பேசுவான் அதுக்கு நீங்க பதில் சொன்னா போதும்.

என்ன தைரியம்டி உனக்கு? என்னையும் அவனையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குற?

இது தைரியம் இல்லை. நம்பிக்கை. எங்க ப்ரோபசர் மேலே எனக்கு இருக்கிற நம்பிக்கை'

'டயலாக் எல்லாம் நல்லா அடி. ராட்சசி' என்றான் பரத்.

டயலாக் இல்லை கண்ணா. நிஜம்மா தான் சொல்றேன்  என்றபடி அவள் திரும்ப அங்கே வந்தமர்ந்தான் விஷ்வா,

'இதோ வந்திட்டான் பேசுங்க' என்றபடி கைப்பேசியை விஷ்வாவிடம் நீட்டி விட்டிருந்தாள் அபர்ணா.

ஹலோ மிஸ்டர் பரத் உற்சாகமாக ஒலித்தது விஷ்வாவின் குரல். 'ஐ யாம் விஷ்வா.;

அவன் குரல் செவிகளை அடைய, எப்போதும் கொதித்து போகும் ரத்தம் இன்று கொதிக்கவில்லை. 'சொல்லுங்க மிஸ்டர் விஷ்வா' குரலை கொஞ்சம் இதமாக மாற்றிக்கொண்டு சொன்னான் பரத்.

அவனையும் அறியாமல், அது யாருடையது என்றே தெரியாமலே  அந்த குரல் விஷ்வாவை  கொஞ்சம் வருடத்தான் செய்தது.

கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் தோழியின் மீது அவன் கண்கள் பதிய ஏனோ சட்டென கொஞ்சம் நெகிழ்ந்து போய் ஒலித்தது விஷ்வாவின் குரல்,

'எங்க அப்பூவை பத்திரமா பார்த்துக்கோங்க சார்' என்றான் கெஞ்சலாக. நீங்க நல்லா கண்ணுக்குளே வெச்சு பார்த்துப்பீங்க எனக்கு தெரியும், இருந்தாலும் சொன்னேன்.....

'ஷுயர்' மிஸ்டர் விஷ்வா என்றான் பரத் நிதானமாக

'அதுக்கு ஒண்ணுமே தெரியாது சார். ஸ்கூட்டி எடுத்திட்டு இங்கேயும் அங்கேயும் போக தெரியும் அவ்வளவுதான். அது லவ் பண்ணிச்சான்னு நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு சார் எங்க அப்பூ. தப்பு எதுவும் பண்ணாது சார் அது. அப்படியே சின்ன சின்ன தப்பு பண்ணா நீங்க சட்டுன்னு மன்னிச்சு விட்டுடுங்க சார். இந்த உலகத்திலே இருக்கிற எல்லா சந்தோஷமும் அவளுக்கு கிடைக்கணும் அவ கண்ணிலே தண்ணி வராம பார்த்துக்கோங்க சார் அது போதும் எனக்கு பேசிக்கொண்டே போனான் விஷ்வா.

ஒரு மணப்பெண்ணின் தாய்க்கு இருக்கும் தவிப்பும் தந்தையின் அன்பும், அண்ணனின் அக்கறையும், எல்லாம் சேர்ந்த கலவையாக ஒலித்தது விஷ்வாவின் குரல். அவன் பேச பேச எதிர் முனையில் வியப்பில் மூழ்கிய மௌனம்.

இத்தனை அழகான நண்பனா இவன்.? பெண்களை பார்த்த மாத்திரத்தில் 'இந்த பிகர் எப்படி மச்சி ' என வர்ணிக்கும் ஆண்களின் மத்தியில் இப்படி ஒரு கல்மிஷமில்லாத அன்பா?

விஷ்வாவின் மீது நிறையவே மரியாதை பிறந்தது பரத்துக்கு.

என்ன மிஸ்டர் பரத் சைலென்ட் ஆகிட்டீங்க? கேட்டான் விஷ்வா.

'யூ ஆர் எ கிரேட் friend மிஸ்டர் விஷ்வா.' வாய்விட்டே சொல்லி விட்டிருந்தான் பரத்.

'நோ.நோ. மிஸ்டர் பரத். எங்க அப்பூ தான் சார் கிரேட் friend. நான் உடைஞ்சு போன நேரத்திலே எல்லாம் என் கூடவே இருந்து என்னை தூக்கி விட்டவ அவ. எங்க அப்பா என்னை விட்டு போனப்போ யாருமே இல்லாம தனியா நின்னேன் சார். அவ இல்லைனா நான் என்ன வாகியிருப்பேன்னு தெரியலை. என்னை பொருத்தவரைக்கும் அவ எங்க அம்மாவை விட ஒரு படி மேலேதான் சார்' அவன் குரல் கொஞ்சம் நெகிழ, இமைக்கவில்லை அபர்ணா. அவள் கண்களில் நீர் கோடுகள்.

வார்த்தைகள் வரவில்லை பரத்திற்கு. சில நொடிகள் கனத்த மௌனம். விஷ்வாவுக்காக இளகிப்போயிருந்தது அவன் உள்ளம்.

மிஸ்டர் பரத். ??? லைன்லே இருக்கீங்களா?

ஆங்... ஆங்... இருக்கேன்...... என்றான் பரத்.

'எனக்கு உங்ககிட்டே பேசினது ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் பரத். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்' மனதார சொன்னான் விஷ்வா.

மனம் நிறைந்த உணர்வு  பரத்திற்கு. தான் யார் என்று சொல்லிவிடலாமா? என்று கூட ஒரு நொடி நினைத்தான் அவன். சொன்னால்???? அவன் உற்சாகம் மொத்தமாக வடிந்து போகுமோ? ஏனோ அதை குலைக்க தோன்றவில்லை அவனுக்கு. தெரியட்டும். தெரியும் போது தெரியட்டும்.

'எல்லா முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு சட்டு சட்டுன்னு எடுக்கற குணம் அவனுக்கு. மத்தபடி அவன் நல்லவன்டா' தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது பரத்துக்கு. தனது முதல் திருமணம் நின்றதுக்கும் விஷ்வாவின் அந்த குணம் தான் காரணமோ?  மனம் எங்கெங்கோ சென்று திரும்ப,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.