(Reading time: 21 - 42 minutes)

பால்கனியில் நின்றவாறு செல்போனை வைத்து சுற்றிக்கொண்டிருந்தான் விஜய்…

“என்னடா… எப்போ வந்த?....” என கேசவன் குரல் கேட்க, திரும்பி பார்த்தான் விஜய்…

தகப்பனைப் பார்த்ததும், “இப்பதான்…” என்றான் அவன் அமைதியாக…

“ஹ்ம்ம்… முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன?... சொல்லியிருந்தா ஜித்தை வர சொல்லியிருப்பேன்ல…”

“ஓ….” என்றான் மறுபடியும் அவன் ஒரு வார்த்தையில்…

“அவன் உன் அண்ணன்…. நியாபகம் இருக்குல்ல?...”

“இருக்கு….” என்றான் அளவாய் மீண்டும்…

“ஹ்ம்ம்… சாப்பிட்டியா?...”

“ஆமா…”

“இதுக்கும் ஒரு வார்த்தை தானா?...” என அவர் கேட்க, அவன் “ஹ்ம்ம்…” என்றான்…

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

“அவன் தான் உங்க கிட்டயும் எங்கிட்டயும் பேச கூலி கேட்பானே… அவன் கிட்ட ஏன்ப்பா பேசுறீங்க?...” என்றபடி வந்தான் ஜிதேந்தர்…

“ஜித்… அவன் உன் தம்பி… நினைவிருக்கட்டும்…” என்றார் கேசவன் அதட்டலுடன்…

“எல்லாம் எனக்கு நினைவிருக்கு… அவனுக்கு தான் இல்ல….” என்றான் ஜித் கோபத்துடன்…

“ஜித்… வந்ததும் ஆரம்பிச்சிட்டியா?... அவனே இப்பதான் வந்திருக்கான்… விடேண்டா…” என்றபடி காபி கொண்டு வந்தார் வைஜெயந்தி…

“அதானே… உங்களுக்கு அவனை சொன்னா பொறுக்காதே…” என்றபடி தனது கோட்டை கழட்டி எறிந்தான் ஜித்…

“ஜித்… என்ன இது?...” என்று உறுமினார் கேசவன்…

“சும்மா எங்கிட்டயே கத்தாதீங்கப்பா… உங்களுக்கும் சரி, அம்மாவுக்கும் சரி… என்னைவிட அவன் தான் முக்கியம்…”

“ஆமாடா… அதான் ஸ்கூல், காலேஜ், எல்லாம் அவன் இந்த வீட்டிலேயே தங்கி படிச்சான் பாரு…” என்றார் கேசவன் குத்தலாக…

“ஆமா... இதை ஒன்னு சொல்லிடுங்க… அவன் நல்லா படிக்கணும்னு தான அவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வச்சீங்க… அப்புறம் என்ன?...”

“டேய்… வேண்டாம்… என் கோபத்தை கிளறாத…”

“ஆமாப்பா… நான் தான உங்க கோபத்தை கிளறுறேன்… எனக்கு வேற வேலை இல்ல பாருங்க…”

“டேய்… ஏண்டா… நீ இப்படி இருக்குற?...”

“எப்படி இருக்குறேன்…?”

“அவன் உன் தம்பி… வேலை கூட வெளியூரில் தங்கி தான பார்த்துட்டிருந்தான்… இன்னைக்கு தான நம்ம வீட்டுக்கு வந்திருக்கான்… அவங்கிட்ட கொஞ்சம் தன்மையா தான் பேசினா என்ன?...”

“எது… நம்ம வீடா?... அப்படியா?... இது எப்போதிலிருந்து?...”

“என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்குது?...”

“பின்ன நீங்க தான அடிக்கடி இது என் வீடு… என் வீட்டுக்கு நான் விரும்பின ஆளுங்க மட்டும் தான் வரணும்னு சொல்லுவீங்க… அதான் கேட்டேன்…” என்றான் அவன் அவருக்கு உரைக்கும்படி…

“ஜித்… நீ பேசுற அர்த்தம் உனக்கு புரியுதா?...”

“ஏன் புரியாம?... நல்லாவே புரியுது… ருணதியை வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்க… ஏன்னா அவ உங்களுக்கு வேண்டாதவ… இவன் வீட்டுக்கு வர்றதுக்கு தவம் கிடக்குறீங்க… ஏன்னா இவன் உங்க ஆச மகன்… அப்படித்தான?...”

“தேவை இல்லாம அவளைப் பத்தி பேசி எங்கிட்ட அடி வாங்காத… அப்புறம் பெத்த பிள்ளைன்னு கூட பார்க்கமாட்டேன்… சொல்லிட்டேன்… அவ இந்த வீட்டுக்கு சம்மந்தம் இல்லாதவ…”

“யாரு சம்மந்தம் இல்லாதவ… அவளா?... அவ எனக்குப் பிடிச்சவ...  அதை முதலில் தெரிஞ்சிக்கோங்க…”

“உனக்கு பிடிச்சிருந்தா… அது உன்னோட பிரச்சினை… எனக்கு பிடிக்கலை… அவ்வளவுதான்…”

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாப்பா?... எதுக்கு இப்படி என்னை சாகடிக்கிறீங்க?... வாழவே விடாம?...”

“எனக்கு மனசாட்சி இருக்கப்போய்த்தான் உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்… அதை முதலில் நீ தெரிஞ்சிக்கோ…”

“எனக்கு ருணதி தான்… வேற யாரையும் நான் திரும்பி கூட பார்க்கமாட்டேன்…”

“அப்படின்னா, இந்த சொத்தையும் திரும்பி கூட பார்க்காத…”

“அப்பா?...”

“என்னடா அப்பா?... என்ன அப்பா?... உனக்கு சொத்தும் வேணும்… அந்த கேடுகெட்டவ அவளும் வேணும்… அதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்…” என அவர் ருணதியை பற்றி அவதூறாக பேசவும், அதுவரை அமைதியாக இருந்த வைஜெயந்தி வாய் திறந்தார்…

“உங்களுக்கு திட்டணும்னா உங்க மகனை திட்டுங்க… என்னை திட்டுங்க… அவளைப் பத்தி பேசவே கூடாதுன்னு எங்களுக்கு கட்டளை போட்டுட்டு இப்போ எதுக்கு அவளை அதும் உங்க நியாயப்படி இங்க வீட்டுக்கு சம்மந்தமே இல்லாத ருணதியைப் பத்தி தப்பா பேசுறீங்க?...”

“என்னையே எதிர்த்து பேசுற அளவு வந்துட்டியா நீ?...”

“நீங்க என்னையோ, நம்ம பசங்களையோ பேசியிருந்தா நான் வாய் மூடிட்டு இருந்திருப்பேன்… ஆனா நீங்க பேசினது ருணதியை… அவளைப் பத்தி பேச நான் சம்மதிக்க மாட்டேன்…”

“உனக்கு அவ்வளவு திமிராடி?... என்னை விட அவ உனக்கு உசத்தியா போயிட்டாளா?...”

“ஆமா எனக்கு உங்க அகராதி படி திமிருன்னே வச்சிக்கோங்க…” என்று வைஜெயந்தி சொன்னதும்,

“என்னடி சொன்ன?...” என்றபடி வைஜெயந்தியை அடிக்க கை ஓங்கினார் கேசவன்…

வைஜெயந்தியோ இறுக கண் மூடிக்கொள்ள, ஜித், கோபத்துடன் திரும்பி கொள்ள..

வைஜெயந்தி மெல்ல இமைகளை திறந்த போது, கேசவனின் கையை விஜய் தடுத்து பிடித்திருந்தான் தனது தாயின் மேல் படாதபடி…

“என் கையை பிடிக்குற அளவுக்கு வளர்ந்துட்டியாடா?...” என கேசவன் கத்தியதும் தான் ஜித்திற்கே நடப்பது புரிந்தது…

“அவனை தூக்கி வச்சு கொண்டாடினீங்கல்ல, அதுக்குதான் இப்படி உங்களுக்கு பரிசு கொடுக்குறான்… இன்னைக்கு கையை பிடிச்சான்… நாளைக்கு கழுத்தையும் பிடிப்பான்… பார்த்துட்டே இருங்க…” என்றான் ஜித் நக்கலாக..

“ஜித்… போதும்… நீயும் ஏண்டா இப்படி இருக்குற?... அவன் உன் தம்பி… விரோதி இல்ல… அவனை உன் அப்பாகிட்ட சண்டைக்காரனா ஆக்கிட்டு நீ என்னடா சாதிக்கப்போற?...” என வைஜெயந்தி ஜித்தின் சட்டையைப் பிடித்து கேட்க, அவன் அமைதியானான்…

“கையை விடு… விஜய்… அவ என் மனைவி… அவளை அடிக்க எனக்கு உரிமை இருக்கு…” என்று மீண்டும் கேசவன் உறும,

“எதுப்பா உரிமை?... கட்டின பொண்டாட்டியை தோளுக்கு மேல வளர்ந்த பசங்க முன்னாடி வச்சு அடிக்கிறது உரிமையா?... அம்மாவ நீங்க காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டீங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லி சந்தோஷப்பட்டிருக்காங்க எங்ககிட்ட… ஆனா அதை இன்னைக்கு ஒரு செகண்ட்ல… சே…” என அவரின் கையை வேகமாக விலக்கியவன்,

“இத்தனை நாள் நான் இங்க வராம இருந்ததுக்கு காரணம் ஜித் தான்… அவனுக்கு என்னை சின்ன வயசில இருந்தே பிடிக்கலை… அவனுக்கு எதுக்கு கஷ்டத்தை கொடுக்கணும்னு தான் சின்ன வயசிலேயே ஹாஸ்டலில் தங்கி படிக்குறேன்னு சொல்லி அம்மாவ விட்டும் உங்களை விட்டும் பிரிஞ்சி போனேன்… காலேஜ் படிக்கும்போதாவது ஜித் மாறி இருப்பான்னு நினைச்சேன்.. அப்பவும் அவன் மாறலை… அதனால தான் எல்லாமே வெளியூரிலேயே படிச்சு வேலைக்கும் அங்கேயே சேர்ந்தேன்… அம்மா தான் வருத்தப்பட்டு அழுவாங்க… நீ எங்கூட இல்லையேடான்னு…. அவங்க வேண்டுதலோ என்னவோ எனக்கு வேலை இங்க டிரான்ஸ்பர் ஆகியிருக்கு… வந்து முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகலை… அதுக்குள்ள ஜித்துக்கு என் மேல கோபம்… எனக்கு நினைவு தெரிஞ்ச வரை அம்மாகிட்ட நீங்க அதிர்ந்து பேசி கூட நான் பார்த்தது இல்லை… நீங்களாப்பா இப்படி அம்மாவ திட்டி பேசி அடிக்க கை நீட்டுறீங்க?... என்னால நம்ப முடியலைப்பா… ஜித் கல்யாண விஷயத்துல உங்களுக்கு அம்மா மேல கொஞ்சம் வருத்தம்னு எனக்கு தெரியும்… ஆனா இப்படி வெறுப்பு இருக்குன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சது… நான் வளர்ந்து கல்யாணம் பண்ணுறப்போ என் அப்பா மாதிரி என் மனைவிக்கு நான் நல்ல கணவனா இருக்கணும்னு ஆசப்பட்டு உங்களைப் பார்த்து வளர்ந்தேன் தூரத்துல இருந்தாலும்… ஆனா இன்னைக்கு வெட்கமா இருக்குப்பா… என் ஆசையை நினைச்சு எனக்கே… சே…” என அவன் ஒருவித வலியோடு சொல்ல, கேசவன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை…

“என்னடா… அப்பாவையே எதிர்த்து பேசுறீயா?...” என்றான் ஜித் அவனிடம்…

“இவ்வளவு நேரம் நீ அதை தான் செஞ்சேன்னு நினைக்கிறேன்…” என்றான் விஜய் அவனின் முகம் பார்த்து பட்டென்று…

அவ்வளவுதான்… ஜித் முகத்தில் ஈயாடவில்லை…

தாயின் தோள் மேல் கை வைத்து அழைத்து சென்ற விஜய், சில அடி நடந்துவிட்டு,

“உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னா சொல்லிடுங்க… என் அம்மாவ நான் பார்த்துப்பேன்… இதே ஊரில் வேற வீடு நாங்க பார்த்துக்கறோம்…” என தகப்பனின் முகத்தை பார்த்துக்கூட சொல்லாது முகம் திருப்பிக்கொண்டு சொல்லிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டான் தாயுடன்…

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.