(Reading time: 19 - 38 minutes)

நிமிர்ந்து இப்போது அவனைப் பார்த்தாள் அவள்.

“அப்டிதான?....டாக்டர் தான நீங்க?” ரெண்டுக்கும் ஒரே பதிலாக ஆம் என தலையை அசைத்து வைத்தாள்.

ஆட்டிவைக்கும் சுக மின்சாரத்தில் சிக்குண்டவள் போல் அவள் நிலை….. இயல்பாய் எதையும் நினைக்கவோ செய்யவோ ஏன் நிற்கவோ பார்க்கவோ கூட இயலாமல் இவள்….

“இங்க எப்படி வந்தீங்க? கூட யாரும் இல்லையா?” சுற்றி முற்றும் பார்த்தபடி விழுந்து கிடந்த புல்லட்டை தூக்கி நிறுத்தினான்.

“அ…அது என் ஃப்ரெண்ட்ஸ்….. ஃப்ரெண்ட்ஸ் கூட வந்தேன்…..” சொல்ல தொடங்கிய பின்தான் புல்லட்டில் ஃப்ரெண்ட்ஸ் கூட வந்தேன் என்றால் ஆண் நண்பர்கள் ஏன் பாய் ஃப்ரெண்ட் என்று கூட நினைத்து விட முடியுமே என உணர்ந்து அவசர அவசரமாக “ரெண்டு பொண்ணுங்க…..” என சொல்லி வைத்தாள்.

பின் உணர்ந்தவளாய்…..”கீழ விழுந்துட்டோம்….. நாய் மேலயே அவங்க ரெண்டு பேரும் விழவும் அதுங்க துரத்திட்டு …… என் ஃப்ரெண்ட்ஸ் பயந்து ஓடி….” அதுக்கு மேல் அவனிடம் பேச தடுமாறி நிலவினியும் ரெஜினாவும் ஓடிய திசையைப் பார்த்து வைத்தாள்.

“பயப்படாதீங்க…..அவங்களுக்கு ஒன்னும் ஆகி இருக்காது…..மொபைல் வச்சுருக்கீங்களா…..ஒரு கால் பண்ணுங்க…. “

அவனை தொடர்ந்து பேசவிடாமல்…..புல்லட்டின் முன் பவ்ச்சிற்குள் கை விட்டு அந்த மூன்று மொபைல்களையும் வெளியே எடுத்தாள் இவள். கூடவே அவர்களது நகை இருந்த குட்டி பர்ஸையும்….”எல்லாம் இங்க தான் இருக்குது…”

“இங்க பாருங்க…இந்த ரோட்ல கொஞ்சம் முன்னால போனீங்கன்னா….ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கும்…..அங்க போங்க….. நான் பின்னால வர்றேன்….”

அவன் காண்பித்த திசையை திரும்பிப் பார்த்தாள். பின் மீண்டுமாய் அவனைப் பார்த்தாள்…. இவள் ஃப்ரெண்ட்ஸ் இவளை தேட மாட்டாங்களாமா?

அதற்கும் பதில் அவனிடமிருந்தது.

“பாருங்க நாம இதுக்கு மேல இப்டி ரோட்ல நின்னு பேச முடியாது…… அதான் சொல்றேன்….நீங்க முன்னால போங்க……அங்க போய் உங்க ஃப்ரெண்ட்ஸை தேடிக்கலாம்…..சின்ன ஊர்தான் யாரும் தொலஞ்சிடமாட்டாங்க…” அவன் சொல்ல சொல்ல அவள் கால் அவன் சொன்ன திசையை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தாலும் முகம் அவனைப் பார்த்தே நிற்கிறது…..

“நீங்க வருவீங்கதானே…?” எப்படி இப்படி கேட்க முடிந்தது என்று தெரியவில்லை….ஒரு வித தவிப்போடு அவளை மீறி கேட்டேவிட்டிருந்தாள் பவி…..

ஒரு கணம் ஓராயிரம் மின்னல் ……. ஆயிரம் அக்கறை….. அளவிடமுடியா ஆனந்தம்…..அவன் முகத்தில்….அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் ஒரு சிறு குறும்பு அவன் இதழ் வசம்….

“கண்டிப்பா….” என்றவன்…. தன் பர்சிலிருந்து தன் கார்டை எடுத்துக் கொடுத்தபடி “என் பேர் அபயன்….இப்ப ஓகே தானே…..” என்க

எதையும் யோசிக்க கூட விரும்பாமல் கை நீட்டி அதை வாங்கியே விட்டாள் இவள்…. “என் பேர் பவிஷ்யா” என்றபடி அவன் சொன்ன திசையைப் பார்த்து நடக்கவும் தொடங்கினாள்.

சிறிது தொலைவிலேயே அவன் சொன்ன அந்த மருத்துவமனை கண்ணில் படுகிறதுதான்…. ரொம்பவும் பெரிது என்று சொல்ல முடியாவிட்டாலும் ‘இந்த ஊர்ல இவ்ளவு பெரிய ஹாஸ்பிட்டலா?’ என்று இவள் நினைக்கும் வண்ணம் இருக்கிறது அது.

இவள் உள்ளே நுழையவும் அபயன் அங்கு வரவும் சரியாக இருந்தது.

வந்தவன் அங்கிருந்த ஒரு நர்ஸை கூப்பிட்டு “இவங்களும் டாக்டர் தான்… நேரே ட்ரஸிங் கூப்டுட்டு போங்க” என்று பணித்தான்….

அவனை திரும்பிப் பார்க்க தோன்றிய எண்ணத்தை தவிர்த்து அந்த நர்ஸ் பின்னால் சென்றாள் இவள்.

காயத்தை கழுவி மருந்திட்டு டி டி போட்டு இவள் வெளியே வரும் போது…..

“வாங்க டாக்டர்…ஹாஸ்பிட்டலை காண்பிக்கிறேன் “ என்றபடி இவளுடன் நடக்க தொடங்கினான் அவன்.

“யேய் இவங்கதான் அடுத்த புது டாக்டர் போல…” யாரோ யாரிடமோ கிசுகிசுப்பது இவளுக்கும் கேட்கிறது….. ஆக இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது பிறர் கண்ணுக்கு உறுத்தாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடா? அப்படியானால் இந்த ஹாஸ்பிட்டல் இவனோடதா?

“இப்ப சொல்லுங்க பவிஷ்யா….என்ன இந்த பக்கம்?”

“அது…..” என்னவென்று சொல்வாள்…. நிலு இப்டி மாட்டிவிடுறியே

அவன் இவள் முகத்தையே இன்னும் பார்த்திருக்க

“அது என் ஃப்ரெண்டுக்கு இ..இந்த ஊர்ல மேரேஜ் ஃபிக்‌ஸாகி இருக்குது….…அதான் ஊரைப்…..அந்த அண்ணாவ பார்க்கனும்னு…..” இழுத்தாள் இவள்…..என்ன நினைப்பானோ???

“ஓ…சூப்பர்….மாப்ள பார்க்க வந்தீங்களா? குட் குட்….பேர் சொல்லுங்க…..நான் ஹெல்ப் பண்றேன்….” அவனோ படு குஷியாகிவிட்டான்… தப்பாக எடுத்துக் கொண்டதுபோல் எதுவும் இல்லை….

அவன் அதை எடுத்துக் கொண்ட விதம் பிடிக்கிறதுதான்….. ஆனாலும் இதையெல்லாம் எப்படி சொல்லவாம்?? இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்….சொன்னாள்…

“மில்காரங்க குடும்பம்னு சொல்வாங்களாம்….அந்த அண்ணா பேரு யவ்வன்…. யவி ன்னு கூப்டுவாங்க போல…”

அவன் ஒரு கணம் அசந்து போய் அவளைப் பார்த்தவன்…அடுத்த நொடி படு சீரியஸாக….. “யவி ஒன்னும் உனக்கு அண்ணா இல்லை….” என்றான். குரலில் நிச்சயம் கடுமை இருந்தது.

பின் ஒரு குறும்புடன் “அவன் எனக்குத்தான் அண்ணன்…..உனக்கு பெரிய மச்சான் இல்லைனா பெரிய அத்தான்…. உனக்கு பிடிச்சபடி சொல்லிக்கோ “ என்று முடித்தான்.

தொடரும்!

Episode # 07

Episode # 09

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.