(Reading time: 19 - 37 minutes)

துப்பாக்கியோடு வீரர்கள் அங்கும் இங்கும் ஓடினர். பத்து பதினைந்து ஜீப்புகள் விருட்டென்று வேகமாக சென்றன . அவை செல்லவும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களைத் தாங்கி வந்த வண்டிகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வருத்தத்தோடு அமர்ந்திருந்த ராணுவ வீரர்கள் எழுந்து நின்றனர். வண்டியில் இருந்து உடல்கள் ஒவ்வொன்றாக கீழே இறக்கி வைக்கப்பட்டன. அவற்றை எல்லாம் கர்னல் ஜார்ஜ் இறுக்கமான முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் . ஒவ்வொரு  முகத்தையும் பார்த்து வந்தவருக்கு ஒரு முகத்தைக் கண்டு  தலையில் இடி இறங்கியதை போல் உணர்ந்தார் . அமேலியாவை காப்பாற்றி தன் உயிரை விட்ட அவன் வேறு யாருமல்ல, கர்னல் ஜார்ஜின் மகன்.

மெதுவாக கீழே குனிந்து இறந்த தன் மகனின் முகத்தை கண்ணீர் ததும்பும் விழிகளோடு நோக்கி கன்னத்தை மெதுவாக வருடினார்.

"சாரி கர்னல் சண்டைல உங்க மகனும் இறந்துவிட்டார்".

சோகத்தின் பிடியில் இருந்து சட்டென மீண்ட ஜார்ஜ் .தன் மகனின் முகத்தை பார்த்தவாறு, "ராணுவ வாழ்க்கைல உயிர் இழப்புகளை தாங்கித் தான் வாழ பழகிக்கணும். இவன் மனைவியை நினைச்சா தான் பரிதாபமா இருக்கு. இவன் வந்ததும் தான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை சொல்ல சொன்னாள்".

அங்கே சில நிமிடங்கள் மௌனம் குடிகொண்டது

"அடுத்து நாம என்ன பண்ண போறோம் கர்னல்?"

"சேதமடைஞ்ச பீரங்கிகள், வண்டிகள் எல்லாத்தையும் கப்பல்ல ஏத்துங்க. இறந்து போன உடல்களையும்  அந்த கப்பலிலேயே அனுப்பி வைக்கலாம். நான் கப்பல் கேப்டனுக்கு தகவல் கொடுத்திடுறேன்" என்று அவர்களை அனுப்பி வைத்தார் ஜார்ஜ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

மெரிக்கா செல்லப்போகும் சந்தோசத்தில் வில்லியம்ஸ் தன் உடமைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் . நீண்ட  நாட்கள் கழித்து அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தார் டாக்டர்.

தன் பின்னால் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்த டாக்டரை பார்த்த வில்லியம்ஸ்,."இனி உங்களுக்கு தொந்தரவு கொடுக்க நான் இருக்கமாட்டேன்ற சந்தோஷத்துல இருக்கீங்களா டாக்டர்?"  என்று கேட்டான்.

டாக்டர் சிரித்தார்

இது தொந்தரவு இல்ல மிஸ்டர் வில்லியம்ஸ், இது ஒரு மகத்தான சேவை. சாகும் தருவாயில் இருக்கிற ஒருத்தர பிழைக்க வைக்குற சந்தோசத்திற்கு ஈடு இணையே இல்லை.

"நிச்சயமா டாக்டர். ஆனா, சில பேர் ஏண்டா பிழைச்சோம்னு வருத்தப்படுவாங்களே  அவங்க பாவம் உங்களை சும்மா விடாது"  என்று தன் நிலையை வேடிக்கையோடு சொல்லி சிரித்தான் வில்லியம்ஸ்.

அப்படி ஒருத்தர் எனக்கு சாபம் கொடுக்கணும்னா, அது வில்லியம்ஸ்ன்ற ஒருத்தர் மட்டும் தான் கொடுக்கமுடியும்.

வில்லியம்ஸ் சிரித்தபடி ஆமோதித்தான்.

இதோ பாருங்க வில்லியம்ஸ். படுகாயங்களோடு உங்களை தூக்கிட்டு வந்து மருத்துவமனையில சேர்த்தாங்க. நீங்க பிழைப்பீங்கன்னு நான் நம்பலை. ஆனா நீங்க இப்போ உயிரோடு இருக்கீங்க, என் கூட பேசிட்டு இருக்கீங்க. கடவுள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்காரு. அதை சரியா பயன்படுத்துங்க.

"தேங்க்யூ டாக்டர்" என வில்லியம்ஸ் அவரை கட்டியணைத்து விடைபெற்று கிளம்பினான். அவனது உடமைகளை மருத்துவமனை தாதிகள் சுமந்து கொண்டு வந்தனர் . செயற்கைக் காலோடு நடக்க பழகிவிட்ட வில்லியம்ஸ் ஊன்றுகோலை பிடித்து வேகமாகவே நடந்தான்.

கர்னல் ஜார்ஜ் விரக்தியோடு தேனீரை அருந்திக்கொண்டிருந்தார். அவர் பின்னே சென்று "கர்னல்" என்று அழைத்தான் வில்லியம்ஸ். தேனீரை அருந்தியபடியே திரும்பிய கர்னல் வில்லியம்சை கண்டு புன்முறுவல் செய்தார். "வில்லியம்ஸ் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி"

வில்லியம்ஸ் துண்டான தன் கால்களையும், கை, மார்பு பகுதியில் இருக்கும் காயங்களையும் பார்த்து, "உங்க பார்வைக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே கர்னல்"

வாய் விட்டு சிரித்த கர்னல், "உன்னுடைய சேட்டைக்கு அளவே இல்ல வில்லியம்ஸ். சீக்கிரமாவே நீ மீண்டு வந்திருக்க. அதை சொன்னேன்".

மனசளவுல இன்னும் மீளவே முடியாத துயரத்துல தான் இருக்கேன் கர்னல்.

உன்னுடைய வருத்தம் எனக்கு புரியுது. மாத்தமுடியாத ஒரு விஷயத்துக்கு வருத்தப்படுறது ப்ரயோஜனம் இல்லையே.

வில்லியம்ஸ் ஆமோதிப்பதை போல் தலையாட்டினான்.

இனி உன் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கணும்னு திட்டமிட்டிருக்கியா?

இருக்கு கர்னல். முதல் வேலையா ஒரு புரட்சி செய்யபோறேன்.

"புரட்சியா?" என்றபடி தன் புருவத்தை மேலே உயர்த்தினார் கர்னல்

ஆமாம் கர்னல். உலகத்துல இனி போரே நடக்கக்கூடாது .உலகம் முழுக்க அமைதியை பரப்ப போறேன்.

கர்னல் சிரித்தபடி "அப்புறம்" என்றார்

அந்த அமைதிக்குள்ள நான் அடஞ்சிக்குவேன். ஆழ்ந்த நிசப்தத்துக்குள்ள என் கனவுகள் இருக்கும். அது பலிக்குமான்னு தெரியாது  அந்த கனவுக்குள்ள ஒரு வாழ்க்கையை தொடங்குவேன். அந்த உலகத்துல நான் மட்டும் தான் அரசன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.