(Reading time: 19 - 37 minutes)

ரு நாள் முழுவதும் கப்பல் அங்கேயே இருந்தது. வில்லியம்ஸ் கடற்கரை மணலில் படுத்தபடியே உறங்கினான். அவன் சாப்பிடவில்லை. மனதில் பல எண்ணங்கள் கடல் சீற்றத்தை விட அதிக சீற்றத்தோடு நெஞ்சில் மோதி விழுந்து கொண்டிருந்தன.

சரியாக ஏழு மணியளவில் கப்பல் புறப்பட தயாரானது. வில்லியம்ஸ் கப்பலில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று படுக்கையில் படுத்துக்கொண்டான். கப்பல் மெல்ல கடலை கடக்கத் தொடங்கியது  கடுமையான கடல் சீற்றத்திலும் கம்பீரமாக சென்ற கப்பலை, கரையில் நின்றிருந்த ராணுவத்தினர் வியப்போடு பார்த்தனர்.

கப்பல் ஈராக் எல்லையைக் கடக்கும் வரை ராணுவவீரர்கள் எச்சரிக்கையுடனே பயணித்தனர். கட்டுப்பாட்டு அறையில், கேப்டனும் துணை கேப்டனும் வானிலையைப் பற்றி பேசிக்கொண்டே  அங்கிருந்த பல கணினி திரைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.  அவற்றில்  கப்பலின் முக்கிய பகுதிகள் தென்பட்டன. அப்பொழுது, கண்காணிப்பு கேமரா சில இடங்களில் பழுதாகி திரையில் காட்சிகள் தெரியாமல் தடங்கல் ஏற்பட்டது.

"திரும்பவும் இதே பிரச்சனை, கப்பலின் மேல் மாடத்தில் இருக்கும் கேமராக்கள் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பழுதாகின்றன " என்று சலித்த துணை கேப்டன், தொழில்நுட்ப ஊழியரை அழைத்து பழுதை சரிசெய்ய சொன்னார். பழுது சரிசெய்யப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் மீண்டும் அதே கேமராக்கள் பழுதடைந்தன. கேப்டன் நீண்ட பெருமூச்சை விட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்... 

 "சார், கனெக்சன்ல தான் பிரச்சனைனு பழுது  பார்த்த ஊழியர் சொல்றாரு.   இன்னைக்கு மின்னலின் தாக்கம் கொடூரமா இருக்கு. வானிலையும் மோசமா இருக்கு.  நாம எத்தனை தடவை முயற்சி பண்ணாலும் தோல்வி தான் மிஞ்சும். அமெரிக்கா போய் சரி பண்ணிடலாம்" என்றார் துணை கேப்டன். கேப்டனும் சரி என தலையாட்டினார்.

கப்பலுக்குள் இருக்கும் பாதுகாவலர்கள் துப்பாக்கிகளை கீழே வைத்துவிட்டு மதுவை ருசித்தார்கள். இன்னும் சிலர் சீட்டாடி சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சந்தோசக் கூக்குரல்களை கேட்க கேட்க எரிச்சலடைந்தான் வில்லியம்ஸ். படுக்கையிலிருந்து எழுந்த அவன், தனது அறையின் கதவை படாரென சாத்தினான். அந்த சப்தம் பாதுகாவலர்களுக்குள் சில நிமிட மௌனத்தை  ஏற்படுத்தியது.

மீண்டும் படுக்கையில் சாய்ந்த வில்லியம்ஸ் தன் காதலியின் நினைவுக்கூட்டினுள் புகுந்தான். தனது ஜிம்னாஸ்டிக் திறமையைக் கண்டு அதில் மயங்கி காதலை அவள் பகிர்ந்தததும்,  ஒரு மாலை நேரத்தில் .இருவரும் காதலுக்கே உரிய ஆசாபாச வலைக்குள் விழுந்து மீள முடியாத இன்பமான உலகத்துக்குள் நுழைந்து வாழ்ந்தார்கள். அவன் காதலிக்கு பிறந்தநாள் வந்தது.என்ன பரிசு கொடுப்பது என்று குழம்பி பரிசே வாங்காமல் தன் காதலியின் முன் நின்றது நினைவுக்கு வந்தது  அவனையறியாமல் இதழ்கள் புன்னகை பூத்தன.

எனக்கு கொடுக்க எந்த பரிசும் உன்கிட்ட இல்லையா? என்று அவன் காதலி சாரா ஏமாற்றத்தோடு கேட்க, இதோ வந்திடுறேன் என்று கூறி வெகு தூரம் ஓடினான். மீண்டும் வர அரை மணி நேரம் ஆனது.

எங்கே போயிருந்த? 

உனக்கு பரிசு வாங்க மூன்று கிலோமீட்டர் தொலைவு போயிருந்தேன், எங்கேயும் நான் நிக்கல ஒரே சீரா ஓடினேன்.

எங்கே பரிசு?

சாராவை தன் இடது மார்பின் மீது சாய்த்து கொண்டான் வில்லியம்ஸ். வேகமாக அடிக்கும் அவனது இதய துடிப்பை கேட்டாள் சாரா.

"இது தான் பரிசு .இந்த இதயம் எப்போவும் உனக்காகவே துடிச்சிட்டு இருக்கும்" என்று வில்லியம்ஸ் சொல்ல சாரா அவனை கண்ணீரோடு கட்டி கொண்டு அழுதாள்.

நினைவலைகளில் இருந்து மீண்டு வந்த வில்லியம்ஸ் சாராவுக்காக ஓடிய கால்களை கண்டு வேதனை அடைந்தான். அறைக் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான் . காவலர்கள் உணவை புசித்துக்கொண்டிருந்தார்கள்.

வாங்க வில்லியம்ஸ் சாப்பிடுங்க. உங்களுக்கு உணவு கொடுக்க நினைத்தோம். நீங்க ஓய்வுல இருப்பீங்கன்னு நினச்சு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கல.

எனக்கு நிறைய உணவு கொடுங்க. ரொம்ப பசிக்குது.

எவ்வளவு தேவையோ எடுத்துக்கோங்க வில்லியம்ஸ்.

வில்லியம்ஸ் மேஜையில் இருந்த அத்துணை உணவுகளையும் ஒரு பையில் போட்டு எடுத்து கொண்டு சென்றான். எல்லோரும் அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்

இங்கேயே எல்லாத்தையும் சாப்பிட்டா நீங்க பயந்துருவீங்க. அதனால மேல போய் சாப்பிடுறேன்

எல்லோரும் சிரித்தனர். வில்லியம்ஸ் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என பேசிக் கொண்டனர். 

கப்பலின் மேல் மாடத்திற்கு வந்த வில்லியம்ஸ் சுற்றிலும் நோக்கினான். மின்னலின் ஒளிக்கீற்றுகள், கடலின் சீற்றம் என அதிபயங்கரமான காட்சியை கண்டு புன்னகைத்தான். தான் கொண்டு வந்த உணவுப்பையை  தூர வீசி விட்டு ஊன்றுகோலோடு சிறிது தூரம் தத்தி தத்தி நடந்தான். மழை சோவென்று பெய்யத் தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.