(Reading time: 36 - 72 minutes)

ம்ம் நாம இப்படி பிருத்வி, யுக்தாக்காகவே பார்த்தா... நான் எப்போ என்னோட காதலை சொல்லி கல்யாணம் வரைக்கும் போறதுன்னு தெரியலையே..." என்று மனசுக்குள்ளேயே தேவா பேசிக் கொண்டிருக்க... அவன் திடிரென்று அமைதியாக இருக்கவும்... "என்னாச்சு தேவா.." என்று கவி கேட்க...

"ஒன்னுமில்ல சங்கு... ஒருநாள் யுக்தாக் கூட பேசினதுலேயே இவ்வளவு மேட்டரை கேதர் பண்ணி... இனி என்ன செஞ்சா என்ன நடக்கும்னு அடுக்கிக்கிட்டே போறீயே... நீ இஞ்சினியரீங் படிச்சதுக்கு பதிலா.. ஐ.பி.எஸ் ஆயிருக்கலாம்னு யோசிச்சேன்..." என்று அவன் சொன்னதற்கு கவி அவனை முறைத்தாள்.

உடனே பார்க்க வேண்டும் என்று சப்னா சொன்னதால் அவளுக்காக பார்க்கில் காத்திருந்தான் பிருத்வி... அவள் கூப்பிட்டப் போது வர வேண்டாம் என்று தான் நினைத்தான்... அவன் இருந்த மனநிலையில் அவளை பார்ப்பது அவசியம் இல்லை என்று தான் தோன்றியது...

ஆனால் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று தான் இப்போது வந்திருந்தான்... இனி ஒருவரையொருவர் பார்ப்பது நல்லதில்லை என்று சொன்னப் பிறகும் இவனை சந்திப்பதும்... யுக்தாவிடம் விவாகரத்தை பற்றி பேசியதும்.... பிரணதியை சீண்டியதும்... இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இப்போது அவளை பார்க்க வந்தான்...

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் சப்னா அங்கு வந்து சேர்ந்தாள்... வரும் போதே பதட்டத்தோடு வந்தவள்.... அவனிடம் விஷயத்தை சொன்னாள்.

"பிருத்வி... உங்களை நான் அவசரமா பார்க்க வந்ததுக்கு காரணமே... அப்பாவும் அம்மாவும் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... வந்தவங்க சும்மா வராம... எனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க... மாப்பிள்ளை மும்பைல ஏதோ பிஸினஸ் பண்றானாம்... மாப்பிள்ளை தமிழாம்... அப்பாக்கு தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைச்சதுல சந்தோஷம்... அம்மாக்கும் மாப்பிள்ளை வீடு எங்க ஸ்டேடஸ்ல இருப்பதால ஒத்துக்கிட்டாங்க பிருத்வி...

இப்போ இங்க அவங்க வந்ததே தாத்தா பாட்டிக்கிட்ட நேரா விஷயத்தை சொல்லி என்னை கையோடு கூட்டிட்டுப் போகத்தான்... எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியல பிருத்வி... " என்று அவள் சொன்னதும்... இவன் வந்த வேலை சுலபமாகிவிடும் என்று பிருத்வி நிம்மதியடைந்தான்...

"என்ன பிருத்வி அமைதியா இருக்கீங்க..."

"இங்கப் பாரு சப்னா... இப்போ உங்க அம்மா, அப்பா உனக்கு வரன் பார்த்திருக்கறதும் நல்லதுக்கு தான்... நீ இப்படியே இருக்க முடியாது சப்னா... உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்... அதனால நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க..."

"என்ன பிருத்வி பேசறீங்க... உங்களை விட்டுட்டு என்னால இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சுக்க முடியாது... என்னைக்குமே நீங்க தான் என்னோட புருஷனா வர முடியும் பிருத்வி..."

"சும்மா உளராத சப்னா... நான் பேச வந்ததே இதைப்பத்தி தான்... எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... நீ என்னை மறந்துட்டு உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கிறது தான் புத்திசாலித்தனம்... அதைவிட்டுட்டு இப்படி பைத்தியக்காரத்தனமா எதையாவது நினைச்சிக்கிட்டு உன்னோட லைஃப நீயே ஸ்பாயில் பண்ணிக்காத சப்னா..."

"என்ன சொல்றீங்க பிருத்வி... நாம ரெண்டுப்பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிச்சோம்... அதையெல்லாம் எப்படி மறக்க முடியும் பிருத்வி... ஏதோ அந்த யுக்தா நடுவுல வந்தா... அவளை கல்யாணமும் செஞ்சுக்கிட்டீங்க... இப்போ அவளா உங்களை விட்டு விலக முடிவெடுத்துட்டாளே... அவ டைவர்ஸ்க்கு கூட ஒத்துக்கிட்டா... அதைப்பத்தி நானே உங்கக்கிட்ட நிதானாமா பேசலாம்னு இருந்தேன்...

ஆனா அதுக்குள்ள என்னோட அப்பா, அம்மா இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்றாங்க... இப்போ நிதானாமால்லாம் பேச முடியாது பிருத்வி... ப்ளீஸ் பிருத்வி அந்த யுக்தாவை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணீக்கீங்க...."

"என்ன சப்னா... உனக்கு யுக்தாக்கெல்லாம் கல்யாணம்னா ஈசியா போயிடுச்சா... ஆதி மனிதனா மிருகம் மாதிரி வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருந்த நாம... நமக்கு இருக்குற ஆறாவது அறிவை வச்சு நெறிமுறைகளை வகுத்து... இப்படி வாழ்வது தான் ஒழுக்கம்னு கல்யாணம், குடும்பம்னு உருவாக்கி வச்சிருக்கோம்... இப்போ புதுமை, காலம் மாறிடுச்சுன்ன்னு சொல்லிக்கிட்டு மனுஷங்க திரும்பவும் ஆதிகாலத்துக்கே போய்ட்ருக்கோம்...

இப்படி வாழறதெல்லாம் வாழ்க்கையில்லை சப்னா... ஒருத்தனுக்கு ஒருத்தி அதான் நம்ம பண்பாடு..."

"அப்போ கணவன், மனைவியை இழந்தவங்கெல்லாம் வேற கல்யாணமே செஞ்சுக்க கூடாதுன்னு சொல்றீங்களா பிருத்வி..."

"அது அவசியம் ஏற்படும் போது இன்னொருத்தரை திருமணம் செஞ்சுக்கிறது தப்பில்ல... ஆனா கணவனோ மனைவியோ இருக்கும் போதே அவங்கக்கிட்ட குறையை மட்டுமே தேடி பிரிவை ஏற்படுத்திக்கிட்டு இன்னொருத்தர் கூட வாழ்க்கை நல்லா இருக்கும்னு தப்பான முடிவெடுத்து நிறைய பேர் இப்போ வாழ்க்கையை அழிச்சிக்கிறாங்க... அது சரியில்லை, அது தேவையும் இல்லைன்னு தான் நான் சொல்றேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.