(Reading time: 36 - 72 minutes)

"ங்கப் பாரு பிருத்வி... உங்க விருப்பம் இல்லாம... உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது தப்பு தான்... அதுக்காக கட்டாயமா வாழனும்னு இல்ல... இந்த வாழ்க்கை பிடிக்கலைன்னா... மாதவன் சொன்னதுப் போல ஒரு நல்ல முடிவா எடு..." என்று செந்திலும் மாதவனுக்கு தகுந்தாற்போல் பேசினார்.

"சரி மாமா... நீங்க சொன்னது போல நான் யுக்தாவை விட்டு விலகுகிறேன்... அவ நியூயார்க் போனாலும் அவளை எந்த விதத்திலும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகாததால... அப்புறமா விவாகரத்துக்கும் முயற்சிக்கிறேன்... இப்போ உங்களுக்கு சந்தோஷமா..?? என்று கேட்டப்போது அந்த முடிவை எதிர்பார்த்து தான் மாதவன் வந்தார்... ஆனால் மனம் தான் சந்தோஷப்படவில்லை...

இப்போது கூட யுக்தா கூட சேர்ந்து வாழறேன்னு பிருத்வி வாயில் இருந்து வரலையே... என்று செந்தில், மதி, பிரணதி மூவரின் மனமும் வருந்தியது...

என்னப் பிரச்சனையா இருந்தாலும்... இதுவரைக்கும் தன்னோட நட்பை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சுஜாதாவும், வளர்மதியும்... இப்போதும் இந்த மாதவன் வந்து பேசிவிட்டுப் போனதையும் வருத்ததோடு மதி சுஜாதாவிடம் கூற அவள் அதிர்ச்சியானாள்.. மாதவன் வீடு வரும் முன்னரே தேவா உட்பட எல்லோருக்கும் மாதவன் பேசியதும்... அதற்கு பிருத்வி சொன்ன பதிலும் தெரிய வந்தது...

வெண்ணை திரண்டு வர நேரத்துல தாழி உடைந்தது போல்... எல்லாம் சரியாகற நேரத்துல இந்த சித்தப்பா இப்படி செஞ்சுட்டு வந்திருக்காறே என்று தன்னையே நொந்துக் கொண்டாள் கவி... மாதவன் மாமா இப்படி போய் பேசிட்டு வந்திருக்கிறாரே என்று தேவாவும் கவலைப்பட்டான்.... அதிர்ச்சியும் கோபமும் கலந்த கலவையாக சாவித்திரியும் சுஜாதாவும் இருந்தனர். ஆனால் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள் யுக்தா.

"என்னங்க என்ன காரியம்ங்க செஞ்சுட்டு வந்திருக்கீங்க...?? ஒரேடியா பொண்ணோட வாழ்க்கையை இப்படி முடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே..." என்று மாதவன் வீட்டிற்குள் நுழைந்ததும் கேள்வி கேட்டாள் சுஜாதா.. அவரோ அமைதியாக நின்றிருந்தார்.

தேவா, கவி, யுக்தா மூவரும் அமைதியாக அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன தம்பி... நீங்க இப்படி செய்யலாமா..?? பொண்ணை வாழ வைக்க தான் எல்லோரும் பேசுவாங்க... நீங்க இப்படி முடிச்சு வைப்பதற்கு போய் பேசிட்டு வந்திருக்கீங்களே..." சாவித்திரி கேட்டாள்.

"அதுக்கு தான்க்கா... அவக்கிட்ட நாம பேசறப்போல்லாம் அமைதியா இரு... அமைதியா இருன்னு தடுத்தார் போல... ஏதாவது பேசுறாரா பாருங்க...." என்று சுஜாதா சொன்னதும்...

"என்னை என்ன சுஜா பண்ண சொல்ற... தினம் தினம் என் பொண்ணு இப்படி இருக்கறதை பார்க்க முடியல... அவளுக்கு எவ்வளவு வேதனை இருந்தா வீட்டை விட்டு யாருக்கும் சொல்லாம போயிருப்பா... அதை சாதாரணமா எடுத்துக்கிட்டு என்னோட பொண்ணை வாழ வைப்பா பிருத்வின்னு அவன்கிட்ட கேக்கச் சொல்றியா..?? எத்தனை நாளாச்சு இவ கிடைச்சு... இதுவரைக்கும்  அவன் வந்து இனியாவது நாங்க சந்தோஷமா வாழறோம்... யுக்தாவை வீட்டுக்கு அனுப்புங்கன்னு கூப்பிட்டானா..??"

"சித்தப்பா ஒருநாள் எல்லோரும் வெளிய போயிருந்தப்ப பிருத்வி வீட்டுக்கு வந்தாரு... நம்ம சம்யூவை வீட்டுக்கு கூப்பிட்டாரு.."

"ஏன் அவ போகலம்மா..??" என்று கேட்டதற்கு கவியால் பதில் சொல்ல முடியவில்லை...

"இன்னும் அவங்களுக்குள்ள எதுவும் சரியாகல அதனால தானே அவ போகல... அவளை திரும்பவும் அந்த வீட்ல விட்டுட்டு என்னால நியூயார்க் போய் நிம்மதியா இருக்க முடியாது... அதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்.."

"ஏங்க மதியும் செந்தில் அண்ணாவும் அந்த வீட்ல இருக்கிறாங்க... அப்புறம் என்னங்க..??"

"அவங்க இருந்தப்ப தானே இவ வீட்டை விட்டு போனா... ஏதோ தேவாக்கிட்ட போனும்னு இவளுக்கு தோனுச்சு... அதனால எந்த கஷ்டமும் இல்ல... இதுவே அப்போ இருந்த மனநிலைக்கு இவ வேறெதாவது முடிவெடுத்திருந்தா..?? இவ்வளவு பேசிறியே சுஜா.. நான் போய் கேட்டப்ப அதுக்கு பிருத்வி ஒத்துக்கிட்டானே... அப்பக்கூட ஏன் மாமா இவ்வளவு பெரிய முடிவெடுக்கிறீங்க... நான் யுக்தா கூட சேர்ந்து வாழறேன்னு சொல்லலியே... அதுக்கப்புறம் இதை பேசி எந்த ப்ரயோஜனமுமில்லை..."

"என்னங்க பேசறீங்க... நம்ம பொண்ணு நம்ம பொண்ணா திரும்பி வரலங்க... பிருத்வியோட பொண்டாட்டியா கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு வந்திருக்கா... அதப்பத்தியெல்லாம் நீங்க யோசிச்சுப் பார்க்கலையா...?? அவன் இவக்கூட ஒரேடியா வாழ மாட்டேன்னு சொல்லி ஒதுக்கி வச்ச மாதிரி பேசறீங்க... பிருத்வியோட பேசி இதை சரிப் பண்ணலாங்க... அதை விட்டுட்டு இப்படி பெரிய முடிவெல்லாம் எடுக்காதீங்க..."

"வெறும் ஒன்னா சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கை நடத்தறது பெரிய விஷயமில்ல சுஜா... பொண்டாட்டிய கண் கலங்காம சந்தோஷமா வச்சிக்கனும்..."

"என்னங்க எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்க முடியாதுங்க... விரும்பி கல்யாணம் செஞ்சுக்கறவங்களே அடிக்கடி சண்டை போட்டுகிறாங்க... இவங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு தெரியுமில்ல...  அதனால நாம பொறுமையா இருக்கனும்ங்க..."

சுஜாதாவும், மாதவனும் வாதாடிக் கொண்டிருக்க... அதற்குமேல் பொறுமை இழந்த யுக்தா பேச ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.