(Reading time: 36 - 72 minutes)

தோளில் சாய்ந்திருந்தவளை ஆதரவாக அணைத்து... " எல்லாம் முடிஞ்ச மாதிரி ஏன் சங்கு பேசற... நீ தானே பிருத்விக்கு யுக்தா மேல காதல் இருக்குன்னு சொன்ன... இப்போ மாமா பேசிட்டு வந்ததால எல்லாம் முடிஞ்சிடாது... உண்மையான காதல் கண்டிப்பா தோத்துப் போகாது... ரெண்டுப்பேரும் காதலிக்கிறப்போ அவங்களால ரொம்ப நாள் பிரிஞ்சிருக்க முடியாது... கவலைப்படாம இரு.." என்று தேற்றியவன்... மனதிலோ இப்போது இவள் சொன்னது யுக்தாவிற்காக மட்டுமல்ல இவளுக்கும் அது பொருந்தும் என்று நினைத்தான்...   ஒருவேளை யுக்தா மட்டும் இவளின் காதலை பற்றி சொல்லாமல் இருந்திருந்தாள் தனக்கு தெரியாமலே போயிருக்கும்... அப்போது யுக்தா படும் வேதனையை இவளும் அனுபவித்திருப்பாள்... சீக்கிரம் இவளிடம் காதலை சொல்ல வேண்டும்... இல்லை யுக்தாவிற்காக உருகுபவள் தன் நிலையும் நினைத்து வேதனைப்படுவாள் என்று நினைத்தான்...

அவன் பேசியதில் கொஞ்சம் தெளிந்தவள் அப்போது தான்... தான் இருக்கும் நிலையை உணர்ந்து அவனிடம் இருந்து விலகினாள்.

சாப்பிட பிடிக்கவில்லையென்றாலும்... பேருக்கு சாப்பிட்டுவிட்டு... தன்னை கேள்வியோடு பார்க்கும் மூவரின் பார்வையிலுருந்து விடுபட்டு தன் அறைக்கு சீக்கிரம் வந்துவிட்டான் பிருத்வி.

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவனுக்கு புரிகிறது அவர்கள் கேள்வியின் பார்வை... யுக்தாவை விட்டு விலக முடிவெடுக்கும் அளவுக்கா அவளை வெறுக்கிறாய் என்பது தான் அவர்கள் பார்வைக்கு அர்த்தம்... அப்படி ஒரேடியாய் அவளை விட்டு விலகும் அளவிற்கு அவள் என்ன செய்தாள் என்பது தான் அவர்கள் கேட்க நினைப்பது... நான் யுக்தாவை ரொம்ப காதலிக்கிறேன்... அவ என்னோட மனசு முழுக்க நிறைஞ்சிருக்கா... அப்படின்னு கத்தி அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று தான் மனது நினைக்கிறது...

ஆனால் மாதவன் மாமா சொன்னது எவ்வளவு உண்மை... சின்ன வயசுல இருந்து என் ஞாபகத்தோட இருந்து... என்னையே காதலிச்சு... என்னையே கல்யாணம் செஞ்சுக்க வந்தாளே... அவளுக்கு நான் கொடுத்தது என்ன...?? சுடு சொல்லும், கண்ணீரும் தானே... அவளை போலவே நானும் அவளை தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... அது காதல் என்று உணராமல் அவளை கஷ்டப்படுத்தி... அவளை சந்தேகப்பட்டு... அவளை அத்தனை பேர் முன்னாடி இழிவுப் படுத்திவிட்டு... இன்று அதற்காக மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கு இருக்கிறதா...??

வரூன், தேவாவோடு இருந்தபோது அவள் சிரித்து சந்தோஷமாக இருந்தாளே... அவள் மேல் அன்பு வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நான் அவளை வேதனைப்படுத்தி தானே பார்த்திருக்கிறேன்... இவ்வளவு நாள் அவளிடம் காதலை சொல்லாத நான் இப்போது அவள் தப்பு செய்யவில்லை என்று அறிந்த பின் என் காதலை சொன்னால்... அவள் எப்படி என் காதல் நிஜம் என்று நினைப்பாள்... அவள் மேல் தப்பு இல்லை என்று தெரிந்த பின் அவளை காதலிப்பதாக நினைத்துக் கொள்ளமாட்டாளா..??

அப்படியே அவள் நினைக்கவில்லை என்றாலும் அது தானே உண்மை... அவளை பற்றி தெரிந்ததும் தானே அவளிடம் காதலை சொல்ல துடித்தேன்... ஆரம்பத்தில் தான் அவள் காதலை புரிந்துக் கொள்ளவில்லை இப்போதும் அதை புரிந்துக் கொள்ளாமல் அவளை வேதனைப்படுத்தியது தான் அவளுக்கு நான் கொடுத்தது... அவள் காதலுக்கு நான் ஏற்றவனே இல்லை... அவளோடு சேர்ந்து வாழும் தகுதியே எனக்கு இல்லை... நான் செய்ததுக்கு மன்னிப்பு கேட்கும் அறுகதையை கூட நான் இழந்துவிட்டேன்... அதனால் மாதவன் மாமா சொல்வது போல் அவளை விட்டு விலகுவது தான் சரியான முடிவு... அதுதான் அவளுக்கு நல்லது... என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்... ஆனால் அது தான் முடிவு என்று தீர்மானித்தப் பின் அவனையும் மீறி அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது...

அன்று யுக்தா அலுவலகத்திற்கு வந்த போது தன் அப்பா தன்னிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது... உன்னோட கோபத்தால உனக்கு பிடிச்சதையோ, உனக்கு பிடிச்ச நபரையோ இழக்கப் போற.. அப்போது தான் உனக்கு அதிக கோபம் நல்லதில்ல என்று புரிய வரும்னு சொன்னாரே அது எவ்வளவு உண்மை... இன்று அவனை தேடி வந்த பொக்கிஷத்தை தொலைத்த பின் தான் எதிலும் நிதானம் வேண்டும் என்றே தெரிகிறது...

அன்று பிரணதி சொன்னாளே... காதலை சொல்லாமலே இருப்பதாலும், நேரம் தவறி சொல்வதாலும் ஒரு பயனும் இல்லண்ணா என்றாளே... அப்போது என் காதலை நான் உணர்ந்து தானே இருந்தேன்... அப்போதே அதை அவளிடம் சொன்னேனா...?? இப்போதோ என்னோட காதல் சொல்லாமலேயே எனக்குள்ளேயே சமாதியாகப் போகிறதே என்று மருகினான்... அவ்வளவு தான் முடிந்துவிட்டது... என் காதலை சொல்லாமலேயே யுக்தாவோடான என் வாழ்க்கை முடிந்துவிட்டது... அவள் என்னை விட்டுப் போக போகிறாள்... அவளைப் போலவே நானும் அவளையே நினைத்து உருகி கொண்டிருந்தது அவளுக்கு தெரியாமலே போய்விடும் என்று நினைக்கும் போதே கண்ணீர் நிற்காமல் அவன் கண்களிலிருந்து வந்துக் கொண்டிருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.