(Reading time: 36 - 72 minutes)

"ரெண்டுப்பேரும் கொஞ்சம் வாக்குவாதத்தை நிறுத்திறீங்களா..?? அம்மா இந்த பிரச்சனைக்கு அப்பா ஒரு முடிவை கொண்டு வந்துட்டாரு... அதை பிருத்வியும் ஏத்துக்கிட்டாரு... அதோட விட்றுங்க...

ஆனா அப்பா உங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும்... இதுவரைக்கும் உங்கக்கிட்ட நான் இதைப்பத்திப் பேசினதில்லை... பிருத்வி மேல இருந்த அன்பு எந்த வயசுல காதலா மாறுச்சுன்னு எனக்கு தெரியல... ஆனா நான் பிருத்வியை காதலிக்கிறேன் எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்கன்னு சொல்ற வயசு எனக்கு அப்போ இல்ல... அதுமட்டுமில்லாம பிருத்வியும் என்னை லவ் பண்றாரான்னு தெரியாம என் மனசுல இருப்பதை யார்க்கிட்டேயும் சொல்ல விரும்புல... ஆனா இப்போ என்னால சொல்ல முடியும்ப்பா...

நான் பிருத்வியை ரொம்ப காதலிக்கிறேன்ப்பா... எனக்கு அவர் கூட இருப்பதே சந்தோஷம் தான்... அதே போல பிருத்விக்கும் என்னை பிடிக்கனும்... ஆனா பிருத்விக்கு என்கூட வாழறது பிடிக்கலையோன்னு தான் அன்னைக்கு வீட்டை விட்டுப் போனதும்... இன்னைக்கு நியூயார்க் போக நினைக்கறதும்... ஆனா நீங்க என்னவோ அவரால என்னோட சந்தோஷம் போய்ட்ட மாதிரி பேசிட்டு வந்திருக்கீங்க... ஆனா என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால தான் அவர் சந்தோஷத்தை இழந்துட்டதா நான் நினைக்கிறேன்... நீங்க இப்படி பிருத்விக்கிட்ட பேசிட்டு வந்திருக்க கூடாதுப்பா..."

"அப்பா தப்பு பண்ணிட்டேனாம்மா... நான் வேணா பிருத்விக்கிட்ட திரும்பி பேசவா... இப்படி பேசினதுக்கு மன்னிப்பு கேட்கவா..??"

"வேண்டாம்ப்பா... அவரை ஆளாளுக்கு ஒன்னு சொல்லி குழப்ப வேண்டாம்னு தான் கொஞ்ச நாள் நியூயார்க் போக முடிவெடுத்தேன்... அவர் யோசிச்சு எந்த முடிவெடுத்தாலும் ஏத்துக்கறதா தான் இருந்தேன்... ஆனா இப்போ நீங்க பிருத்விக்கிட்ட கேட்டதுக்கு அவர் ஒரு முடிவெடுத்திட்டாரு இல்ல... அதோட விட்டிடுங்க....இதுக்கப்புறம் அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும்பா... எனக்காக அவர் விலகினாதாகவே இருக்கட்டும்... இதுக்கு மேல இதப்பத்தி பேசாம நாம நியூயார்க் போனா நல்லா இருக்கும்... அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.." என்று சொல்லிவிட்டு யுக்தா அவள் அறைக்குப் போய்விட்டாள்...

"அதான் ரெண்டுப்பேரும் ஒரு முடிவெடுத்துட்டீங்களே... போங்க போய் சீக்கிரம் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணுங்க..." என்று கோபமாக சொல்லிவிட்டு சுஜாதா அந்த இடத்தை விட்டுப் போக... சாவித்திரியும் அவளுடன் சென்றுவிட்டாள்.

அதிக கோபம் புத்தியை மறைப்பது போல்... சில சமயம் அதிக பாசமும் புத்தியை மழுங்க செய்துவிடும்... இப்போது மாதவன் நிலைமையும் அப்படித்தான்... தன் மகள் மேல் இருந்த பாசம் அவரை இப்படி செய்ய சொல்லிவிட்டது... தான் செய்த தப்பு இப்போது அவருக்கு புரிந்தது... அதை நினைத்தப்படியே சோர்வாக உட்கார்ந்தார்.

இங்கு நடந்ததையெல்லாம் ஒன்றும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவாவோ பக்கத்தில் நின்றிருந்த கவியை பார்த்தான்... ஆனால் அவளோ பக்கத்தில் இல்லை... எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போதே அங்கிருந்து சென்றுவிட்டாள்.. அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்று தேடிப் போனான் தேவா...

அவளோ வீட்டின் வெளியே போர்டிகோவில் இருந்து கேட்டிற்கு இறங்கி போக நான்கு படி அமைக்கப்பட்டிருக்கும்.. அந்த படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள்... அவளின் அருகே போய் தேவா உட்கார்ந்தான்... அவன் தான் என்பதை அறிந்தவள் திரும்பி அவனை பார்க்காமலேயே அவனிடம் பேசினாள்...

"எங்க வீட்ல எல்லாருக்கும் சம்யூ தான் செல்லம்... சித்தப்பா சித்திக்கு ஒரே பொண்ணு, என்னோட அப்பா அம்மாக்கு செல்ல வளர்ப்பு பொண்ணுன்னு எல்லோருக்கும் அவ செல்லம்... அதைப் பார்த்து நான் பொறாமை பட்டதில்ல... அவளை விட நான் 3 மாசம் தான் பெரியவ... ஆனா நான் அவளுக்கு அக்கா... சித்தப்பா, சித்திய விட்டு தனியா எங்கக் கூட இருப்பவள நான் தான் பத்திரமா பார்த்துக்கனும்னு அவளுக்கு அக்காவை போலவே நடந்துப்பேன்... இப்படி எல்லோருக்கும் செல்லம்னு சொல்றோம் ஆனா யாருமே அவளை சரியா புரிஞ்சு வச்சுக்கல... அவ மனசுல என்ன இருக்குன்னே தெரியாம இருந்துட்டோம்...

அது தான் நான் அன்னைக்கு அவகிட்ட கோச்சுக்கிட்டு போனதுக்கும் காரணம்... இன்னைக்கு சித்தப்பா பிருத்விக்கிட்ட பேசியதுக்கும் காரணம்... கூட இருந்த எங்களுக்கே புரியாதப்போ... பிருத்விக்கு மட்டும் எப்படி புரியும்... ஆனா எங்க யாருக்கும் அவ மனசு புரியாம இருந்திருக்கலாம்... ஆனா அந்த கடவுளுக்கு தெரிஞ்சிருக்குமே... அப்புறம் ஏன் தேவா கடவுள் அவளுக்கு இப்படி கஷ்டத்தை கொடுக்கிறார்..." என்று பேசியவள் பக்கத்தில் இருந்த அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்...

அதை எதிர்பார்க்காத தேவாவே அவளை திரும்பி பார்த்ததை கூட அவள் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினாள்... "அவ யாருக்கு என்ன கெடுதல் செஞ்சா... என்ன தப்பு செஞ்சா... பிருத்வியோடு கூட நேர் வழியில தானே சேரனும்னு நினைக்கிறா... சின்ன வயசுல இருந்து பிருத்வி மேல அன்பு வச்சு அவரோடவே வாழனும்னு ஆசைப்பட்டது ஒரு தப்பா...?? அதுக்கா கடவுள் அவளை இப்படி சோதிக்கிறாரு... அவ ஆசைப்படி வாழ ஏன் கடவுள் அருள்புரியல..." என்று அவள் வருத்தமாக கேட்டப்போது தேவாவுக்கே என்ன சொல்வதென்று தெரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.