(Reading time: 21 - 42 minutes)

07. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

மானகவசனிடமே தீர்வை கேட்பது என தீர்மானிக்கவும் ருயம்மாவின் நெஞ்சத்தில் நிம்மதி உதித்தது. அவ்வெண்ணத்தை அக்கணமே செயல்படுத்தவும் அவள் விளைந்தாள். ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதில் சில தடைகள் இருந்தன..

மந்திராலோசனை சபையில் பாண்டிய வரதுங்கனையும் இவர்களது கோட்டை தலைவர் சைலபத்திரனையும்  அருகில் அமர்த்திக் கொண்டு இவள் தன் விவாஹ விஷயம் குறித்து பாண்டிய சேனாதிபதியிடம் கலந்தாலோசிக்க இயலாது.

மேற்கொண்டு அப்பாண்டிய படைதலைவனை  தனிமையில் சந்தித்தால் மாத்திரமே  இது குறித்து இவள் பேச முடியும்...

ஆனால் தங்களை தனிமையில் சந்திக்க விரும்புகிறேன் என இவள் எக்கணம் அப்பாண்டிய பிரபுவை அழைக்க கூடும்?

பணிபெண்கள் வாயிலாக செய்தி அனுப்பினால் கூட இது மிக மிக ஆபத்தை விளைவிக்க வல்ல செய்தி….. வழியில் செய்தி ஓலை யாரிடம் அகப்பட்டாலும் இவள் மீது கடும் களங்கம் கற்பிக்கும் அது….

அஃதோடு அந்த சேனாதிபதியும் இவளது இந்த செய்தியை தவறாக நினைக்க வாய்ப்பு ஏராளம்….மேற்கொண்டு அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தலும் போர் அச்சம் காரணமாக கடும் கண்காணிப்பிற்குள் இருக்கும் கோட்டையில் அச்சந்திப்பு பிறர் கண்களில் விழவும் நேரிடும்… இவ்வகை  எண்ணங்களின் காரணமாய்….மீண்டுமாய் ஆண் வேடத்தில் சென்றே மானகவசனை சந்திக்க  முடிவெடுத்தாள் ருயம்மாதேவி.

ஏறத்தாழ அப்பொழுது பொழுது புலரும் தருவாயில் இருந்ததால் அன்றைய பகல் கழிந்து இரவில் ஆண் வேடத்தில் சென்று பாண்டிய சேனாதிபதியை சந்திக்கலாம் என நிச்சயத்துக் கொண்டாள் அவள்.

அந்நினைவுடன் ஓய்வெடுக்கவும் சென்றாள்.

இரவு முழுவதும் போர் அச்சம் மற்றும் பயணம் என பல வகை பணி பளுவுக்கு உள்ளாகியிருந்த அவள் மனமும் உடலும்….. முந்தைய சில பல தினங்களாய் இவ் விவாஹ பேச்சுகளினால் துயிலற்று துவண்டிருந்த அவள் நிலையுடன் சேர்ந்து இவ்வாறு ஆயிற்று போலும்……ஆம் அவள் மீண்டுமாய் துயில் நீங்கி விழித்துக் கொண்ட நேரம் உச்சிப் பொழுதை கடந்திருந்தது அன்றைய தினம்.

நன்றாகவே ஆழ்ந்து உறங்கி இருந்தாள் ருயம்மா…. விழித்தெழவும் சாளரம் வழியாய் வதனம் தொட்ட கதிரவ கதிர்களின் வெம்மையும் சாய்வும் மதிய போஜன நேரம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு பறை சாற்ற….

பரபரப்புடன் எழுந்துகொண்டாள் அவள்….

விருந்தினராய் தங்கி இருக்கும் பாண்டியரை நேற்று வரை இவளது தந்தை முன்னிருந்து உபசரித்தார்…. அவர் சென்றபின் அடுத்து இரு போஜன வேளைகளில் இவள் அப்பாண்டியர்களை குறித்து நினைக்கவில்லைதான்…..  அப்போதைய இவளது சஞ்சலத்தில் அதை தவறென்றும் சொல்வதற்கில்லை….

ஆனால் நேற்று அத்தனை பெரிய உதவியை பெற்றுக் கொண்டபின்னும் இவள் அப்படியே அசட்டையாக இருப்பது மாண்பற்ற செயலாயிற்றே….அவர்களுடன் இவள் உணவருந்துவதுதான் கணமும் கண்ணியமாயும் இருக்கும் என எண்ணினாள் ருயம்மா.

ஆக வெகு வேகமாக ஸ்நானம் செய்து….. இவள் சொற்படி பணிப் பெண் கொண்டு வந்திருந்த அந்த பவள வண்ண பட்டு சேலையை முறையாய் புனைந்து வந்தவள்….

அதற்கு ஏற்ற அணிகலங்களை இவள் முன் திறந்து வைக்கப் பட்டிருந்த  நகை பெட்டகங்களிலிருந்து இவள் தெரிந்தெடுத்துக் கொடுக்க……அதை பணிப் பெண்கள் இவளுக்கு  உற்ற விதமாய் அணிவித்துக் கொண்டிருந்த  சமயம்

“ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வல்லப மகராஜவின் வம்சமும் சந்திர குலத்தோன்றலும் சேரனை திருகுற்றாலத்தில் வென்றவருமான மாமன்னர் ராஜா ராஜ சடையவர்ம பராகிர பாண்டியனின் மகராணிக்கு என் வந்தனம்”  என்ற ஒரு வாழ்த்து பவ்யமும் சற்று பரிகாசமும் அஃதோடு அதிகமாய் கலந்திருந்த உவகையோடும் ஒரு கிள்ளைக் குரலில் ஒலிக்கிறது…

“வருக வருக வானர திருவுருவே….” என அவ்வாழ்த்துனருக்கு வரவேற்பளித்தாள் ருயம்மா…..வந்திருந்தது இவள் தங்கை மும்மம்மா தேவி.

 கோலகொண்டா கோட்டையிலிருந்து முந்தினம் பொழுது புலரும் வேளைதானே கிளம்பிச் சென்றிருந்தார் ருயம்மாவின் தந்தை……அவருக்கு இத் துருக்கிய படையெடுப்பு குறித்து  செய்தி அனுப்ப கட்டளையிட்டுருந்தாள் இவள்…..அச் செய்தி கிடைக்கவும் அவர் திரும்பி வந்திருந்தார்….

செல்வது போல் போக்கு காட்டிவிட்டு துருக்கியர் மீண்டுமாய் தாக்கவும் வாய்ப்பிருக்கிறதுதானே…… ஆகையால் கோட்டையின்  பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு கிளம்ப எண்ணினார் அவர்.  தன் படையில் ஒரு பகுதியை இங்கு விட்டு செல்ல தீர்மானித்து அதை செயலாக்க வந்திருந்தார்..

அவர் பாதி பிரயாணத்தில் திரும்பியதால் அவருடன் சென்றிருந்த அவரது அடுத்த மகள் மும்மம்மாவும் திரும்பியிருந்தாள்.

அவள் ருயம்மாவின் வானரமே என்ற வரவேற்பை கேட்ட மாத்திரம் “ஆஹா அற்புதம் அற்புதம்…  “ என இன்னுமாய் சிலாகிக்கவும் செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.