(Reading time: 21 - 42 minutes)

க்கணமே தங்கையிடம் தனித்து சம்பாஷிக்க முடிவு செய்தாள் ருயம்மா.. ஏனெனில் இத்தகைய உவமையை தங்கை மற்ற நேரத்தில் எத்தனைதான் விளையாட்டு கேலி என தெரிந்தாலும் சிரித்தெல்லாம் ஏற்க மாட்டாள்…. ஆகையால் இதில் இன்னுமாய் ஏதோ முக்கிய விஷயம் இருக்கின்றது என்பது இவளது கணிப்பு….

அடுத்த கணம் இவள் கண் சமிஞ்சையில் அனைத்து பணிப் பெண்களும் விடை பெற்று விலக

“என்னடி அற்புதத்தைக் கண்டாய் ?” என அதட்டலாக மொழிந்தாள் ருயம்மா….. அதே வேளை அவளது கண்கள் தன் முன்னிருந்த அப் பெரும் பாரசீக ஆடியில் தன் சிகை அலங்காரத்தை கவனித்திருக்க…

அவளது கரங்களோ, முன்னிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் உயர்த்திப் போடப்பட்டிருந்த அவளது கொண்டையில்  பொன்னாலான இரு கொண்டைப் பூக்கள் சொருகுவதிலும், அதை சுற்றிலுமாய் ஒரு நீண்ட முத்து சரத்தை சூடுவதிலுமாய் முனைந்திருந்தன.

அவள் அதரங்கள் சிந்திய வார்த்தைகளின் உஷ்ணம் ருயம்மாவின் செயலில் இல்லை.

 தமக்கையின் அவயங்கள் போன்று தானும் அவளது அதட்டலை சற்றும் சட்டை செய்யவில்லை தங்கை.

ஆக வெகு இயல்பும் உரிமையுமாய் தன் மூத்த சகோதரியை பின் புறமாய்  அணுகி, அவள் முயன்று கொண்டிருந்த முத்து சரத்தை தான் கைப்பற்றி நளினமும் அழகுமாய் அவள் கொண்டையின் மீது அதை சூட்ட துவங்கியவள்….

“அற்புதம்தான் அக்கையாரே….. அனைத்து அடையாளமும் தப்பாமல் இருக்கின்றதே அது அற்புதம்தானே…” என இன்னுமாய் பரிகசித்தாள்.

“என்னதது  அடையாளம்….? என்னத்தையடி கண்டு இப்படி உளறுகிறாய்?” ருயம்மாவின் வார்த்தையில் இன்னும் கடினம் குறைவுபடாமல்  இருந்தாலும்,

 அவளது கண்கள் மற்றும் கவனம்  தன் உடைக்கு ஏற்றது என தேர்தெடுத்திருந்த அந்த மரகதமும் முத்துக்களும் பதிக்கப் பட்டிருந்த  நெற்றி சுட்டியை ஒழுங்கும் கிரமுமாய் அணிவதில் பதிந்து கிடந்தது…

இப்போது மும்மம்மாவும் முத்துசரத்தை தனது சகோதரியின் கொண்டையில் சூடி முடித்திருந்ததால், அடுத்த பணியாக அருகிருந்த மலர் சரத்தை எடுத்து ருயம்மாவின் மேற்பக்க கொண்டைக்கு கீழாக விருப்பம் போல் விரிந்து விளையாட அனுமதிக்கப் பட்டிருந்த கேசத்தில் சூட துவங்கியவள்….

அதுவும் சைகையால் இவ்வாறு சூடலாமா என தன் தமக்கையிடம் அனுமதி கேட்டு சம்மதமும் வாங்கிய பின் சூட முனைந்தவள்…..

“அடையாளமேதான்……வேம்பு தித்திக்குமாம்…..வேனல் குளிர்விக்குமாம்……விருப்பமான உணவையோ வெறுத்தொதுக்குமாம் நாவு…..பஞ்சனையோ நோகுமாம்…… செந்தேன் கசப்பென்றாகுமாம்…. “ என் ராகமிழுத்து அபிநய பாவமாய் சொன்னாள்……

“இன்னவிதமாய் ஆன்றோர்களும் அனுபவபட்டவர்களும் சொல்லி வைத்திருக்கிறார்களே அடையாளங்கள்…….அந்த அடையாளங்களை குறிப்பிட்டேன்….” பரிகாசம் சற்றும் தணியாத குரலில் உரைத்தவள்….

“அக் காதல் இலக்கணப்பிரகாரம் அழகிய என் வதனம் உனக்கு  வானர திருவுருவாய்தானே தெரிந்தாக வேண்டும்…..இது காதல் அடையாளம்” என ஒருவிதமாய் விளக்கி முடித்தாள்.

அவ் வார்த்தைகளின் நிமித்தம் உதித்த “மும்மி” என்ற ருயம்மாவின் இந்த அழைப்பில் முழு உஷ்ணமிருந்தது…….

 “என்ன விளையாட்டு இது…? எதற்காய் இவ்வாறு பிதற்றுகிறாய்?” என இப்போது பின் நின்ற தங்கை புறமாய் திரும்பி அவளை முகமோடு முகம் நோக்கி எரிந்தும் விழுந்தாள் அவள்.

ருயம்மாவின் மனம் இந்நேரம் கனன்று கொண்டிருந்தது…..அவளுக்கு எப்பொழுதும் இத் தங்கையுடன் அன்யோன்யம் அதிகம்.

தனக்கு பாண்டிய மன்னருடனான திருமணத்தில் விருப்பம் இல்லை என இவள் தன் தந்தையிடம் ஜாடையாய் கூட கோடிட்டது இல்லை…. .தாயிடம் சற்றாய்  முறையிட்டிருக்கிறாள்…… ஆனால் இந்த மும்மியிடமோ தன் தற்கொலை முடிவைத் தவிர முழுவதுமாய் குமுறியதுண்டு….

இவளது எண்ணம் இயல்பு எல்லாம் அறிந்த அந்த தங்கையே இவ்வாறு பேசவும் கொதித்துப் போனாள் ருயம்மா….. என்னதான் கேலியாய் பேசினாலும் மும்மியின் வார்த்தைகள் அவளது அடிப்படை நம்பிக்கையிலிருந்து பிறந்தவை என இவளுக்கு தெரிகிறதே…

அது இவளுள் சீற்றத்தை கிளறி எழுப்பியது….

தமக்கையின் சீற்றத்தில் அதுவரையிலும் ருயம்மா நாணத்தின் நிமித்தம் கோபம் போல்  சம்பாஷித்துக் கொண்டிருக்கிறாள் என எண்ணியிருந்த மும்மியோ சற்று தயங்கி நின்றாள் இப்பொழுது.

ருயம்மா எண்ணியிருப்பது போல் இன்னும் உணவு வேளை முடியாமலில்லை….உண்மையில் போஜன சாலையில் அது சிறப்பாக நிறைவேறி இருந்தது…. களைப்பில் துயிலும் ருயம்மாவைத்தான் யாரும் துயில் எழுப்பி இருக்கவில்லை. இவளது தந்தை தாய் என குடும்பமாக ஒரு சிறப்பு விருந்து அளித்திருந்தனர் பாண்டிய சேனாதிபதிக்கும் அமைச்சர்  வரதுங்கனுக்கும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.