(Reading time: 14 - 27 minutes)

திருமணத்திற்கு முதல் நாள் இரவே அனைவரும் காரில் புறப்பட, எப்பவும் மறுப்பு சொல்லும் ஜெய், இம்முறை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை… மாறாக அந்த இடத்தைப் பார்க்க அவன் மனது ஆவல் கொண்டது அதிகமாய்…

அதை யாருக்கும் அவன் தெரியப்படுத்திக்கொள்ளாவிட்டாலும், அவனை அறிந்தே வைத்திருந்தார் பிரம்மரிஷி…

நள்ளிரவைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தது அவர்களின் கார்…

வந்தவர்களை வரவேற்ற தட்சேஷ்வரின் நண்பர் அனைவரையும் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு செல்ல,

அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கிக்கொண்டனர் அனைவரும்…

காரில் வந்த களைப்பா, இல்லை, அசதியா என தெரியாது சற்றே கண் அயர்ந்தான் ஜெய்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஜெய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவனின் கண்களுக்குள் செந்தழல் மின்னியது காட்சியாய்….

விழிகளை லேசாக சுருக்கினான் ஜெய்…

சுற்றிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்க, இன்னும் கனலென பரவியிருந்த நெருப்பின் அருகே ஒரு ஆணின் பாதம் தென்பட்டது…

நடுங்கும் விரல்களை கட்டுப்படுத்த முடியாது, மெல்ல கை நீட்டி அங்கு ஓர் ஆடை கொண்டு போர்த்தியிருந்த ஓர் உடலை அப்படியே அள்ளி தன் தோள்களில் போட்டு எழுந்து கொள்ள, போர்த்தியிருந்த அந்த வஸ்திரம் காற்றில் பறந்தது….

மெல்ல அந்த உடலில் அந்த ஆணின் பார்வை பட, அவன் விழிகள் வேதனையையும், துயரத்தையும் கக்கியது…

நெருப்பென்னும் கொடிய நோய் உடலெங்கும் தனது தாக்கத்தை பிரதிபலித்திருக்க, முற்றிலும் எரிந்து சிதைந்து போன நிலையில் இருந்த உடலை பார்க்கையில் நெஞ்சில் தீ வேகமாக பெருக,

அந்த ஆணின் பாதங்கள் சட்டென தரையிலிருந்து எழும்பி உயர்ந்தன… நிலம் அதிர, அந்த பாதங்கள் பூமியில் பதிந்தது மீண்டும்…

கைகள் காற்றையே வளைக்கும் வண்ணம் சுழல, கண்களில் அக்னி ஜூவாலை கொழுந்துவிட்டெரிய, பரதம் என்னும் பெயரில் ஒரு பெரும் தாண்டவத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்தான் அந்த ஆண்….

யாரும் அவனை நெருங்கக்கூட முடியவில்லை… நெருங்க எண்ணி செய்த முயற்சிகள் அனைத்தும் அவனது நடனத்தினால் எழுந்த புழுதியில் தடைப்பட்டு போனது…

மணிக்கணக்கில் ஆடியும் கொஞ்சமும் உடலில் அதற்கான சோர்வோ அயர்வோ தெரியவில்லை… ஆனால் ரத்த நிற விழிகளில் மட்டும் வலி பரவியிருந்தது முழுதாய்…

பூமியே அதிரும் வண்ணம் தரையில் கால் பதித்து தனது தாண்டவத்தை நிறுத்திய போது,

அந்த ஆண் சுமந்து கொண்டிருந்த பெண்ணின் உடலில் பார்வையை பதித்தான் ஜெய்….

“சதி…………” என அந்த ஆண் அலற, அந்த எதிரொலி அக்கம் பக்கம் இருந்த மலைகளிலும் கேட்டு திரும்ப,

இங்கே ஜெய்யும் “சதி……………………” என்ற அலறலோடு கண் விழித்தான் சட்டென…

காண்பவை அனைத்தும் கனவென்று புரிந்துகொள்ள பல நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு….

“சதி….. சதி….. சதி….” என இதழ்கள் வேகமாய் முணுமுணுக்க, அவனிருந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினான் ஜெய்…

சதி தங்கியிருந்த அறையின் பக்கம் வேகமாய் வந்தவன், அப்போது தான் தைஜூ அறையிலிருந்து வெளிவந்து மெதுவாக கதவை சத்தமில்லாது சாத்திவிட்டு செல்வதைப் பார்த்ததும் அப்படியே நின்றான்..

அவள் கதவை சாத்திவிட்டு, “எங்க இருக்குறீங்க இஷான்?... இந்த நடுராத்திரியில அப்படி என்ன பேசணும்?...” என்றவாறு போனின் அந்த பக்கம் இருந்தவனிடம் கேட்க, அவன் அதற்கு என்ன பதில் சொன்னானோ தெரியாது…

“இருங்க உங்களை வந்து பேசிக்கிறேன்...” என கோபமாக சொன்னவள் போனை கட் செய்துவிட்டு விறுவிறுவென்று நடந்து வாசல் பக்கம் சென்றாள்…

அவள் செல்வதற்காகவே காத்திருந்த ஜெய், அதற்கும் மேல் தாமதிக்காது, சட்டென சதி இருந்த அறைக்கதவை திறந்து கொண்டு புயலென உள் நுழைந்தான்…

விடிவிளக்கின் வெளிச்சத்தில் மெய்மறந்து உறங்கிக்கொண்டிருக்கும் தன்னவளை பார்த்த பிறகே அவன் மனம் சற்று நிம்மதியடைந்தது…

மெல்ல அவளருகில் வந்தவன், அவள் முகத்தையே பார்த்தவண்ணம் இருந்தான்…

மாசு மருவற்ற முகமும், அதில் தெரிந்த குழந்தைத்தனமும், அவனைக் கவர்ந்தது வெகுவாய்…

அவன் அதில் லயித்திருந்த நேரம், அவனது கண்களுக்குள் அக்னி பிரவாகம் தோன்ற, அதில் தன்னை எரித்துக்கொண்டிருந்தாள் சதி….

“சதி………..” என அவன் வாய்விட்டே கூற, அவனின் சத்தத்தில் சட்டென அவள் விழிகள் திறந்து கொண்டது……

விழி திறந்தவளின் பார்வையில் ஜெய் தென்பட, பட்டென எழுந்து கொண்டாள் அவள்…

கனவு என்று எண்ணமிடவும் தோன்றாது, அவனை உதட்டில் தோன்றிய முறுவலோடு பார்த்தவளுக்கு,

“அவளுக்காக எத்தனை தடவைன்னாலும் சாக நான் தயார்…”

சட்டென்று அன்று ஜெய் பிரம்மரிஷியிடம் பேசியது நினைவுக்கு வர, அவனை நெருங்கினாள் அவள்...

அவள் நெருங்கவும் விலக தோன்றாமல் நின்றவன் மெதுவாக நகர்ந்து கொள்ள, அவன் கைகளைப் பிடித்தாள் சதி…

அவன் உதறிக்கொள்ளவில்லை… அவள் புறம் திரும்பவுமில்லை…

மெல்ல அவனின் முன் வந்தவள், அவனையே இமைக்காமல் பார்க்க, அவள் விழிகளில் நீர் திரண்டது…

அதைக் கண்டவன் மனம் வலிக்க, அழாதே என்றான் தலையசைத்து…

அந்த ஒற்றை தலையசைப்புக்காக காத்திருந்ததோ, காதல் கொண்ட பெண் மனம்?...

சட்டென தன்னவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அவள்…

 

Episode 26

Episode 28

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.