(Reading time: 32 - 64 minutes)

ரவு எப்பொழுது நித்திரை தேவதை கண்களை தழுவினாள் என்றே தெரியவில்லை அஞ்சனாவிற்கு! அந்த இரவின் சோர்வோ என்னவோ அடித்து போட்டது போன்று தூங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவிற்கு...

அதிகாலையில் “சைலு”, என்ற சன்னமான கமிஷனர் அழைப்பில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சோர்வு அவளை எழ விடவில்லை! கண்களை மூடிக் கொண்டிருக்க...

அவள் அருகில் இருந்த சைலஜா சட்டென்று  எழுந்து கொண்டார். இரவு முழுவதும் கணவனை எதிர்பார்த்து அரைகுறை தூக்கத்தில் இருந்தவர் அவரைக் கண்டதும்,

“என்னங்க! ராத்திரி முழுக்க எங்கே போனீங்க? வீட்டுக்கே வரலை! அந்த ஆர்யமன் ஃபோன் வரவும் விழுந்தடிச்சு ஓடுனீங்க! என்ன பிரச்சனை?”,  மண்டையை குடைந்த அத்தனை கேள்விகளையும் கேட்டுக் கொண்டே அருகே சென்றார்.

முந்தைய இரவு தாமதமாக வந்த அஞ்சனா சைலஜாவிடம் எதுவும் சொல்லவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஆபிஸ்ல வேலை! அதான் லேட்டாகிடுச்சு! டயர்ட்டா இருக்கு”, என்ற பதிலோடு முக்காடு கோலத்திலே படுக்கையில் விழுந்து விட...

சைலஜாவும் விடாமல் துக்க வீட்டில் ஆர்யமனிடம் இருந்து வந்து அழைப்பை பற்றி விசாரிக்க முயன்றார். அவளோ  அது பத்தி தெரியாது என்று மழுப்பி கண்களை இறுக மூடி நடித்தவள்... சற்று நேரத்தில் அப்படியே தூங்கியும் போனாள்.

இப்பொழுது அதே கேள்விகள் கமிஷனருக்கு திரும்ப, இதற்கு பதில் சொன்னால் அதிலிருந்து இன்னும் பல கேள்விகள் கேட்பாள் என்று நினைத்த கமிஷனர்,

அஞ்சனாவின் அலைபேசியை கொடுத்து,

“குட்டி பக்கத்தில் வைச்சிட்டு! நைட் ஹால்லே மறந்து வைச்சிட்டா போல”

அது  அஞ்சனாவின் செவியில் விழ ‘என் ஃபோன் அங்கிள் ஃபிலோகிட்ட இருந்து ரெகவர் செய்துட்டாங்களா?’, என்று கேள்வி வந்தாலும்.. எழுந்து அதை கேட்க தோன்றவில்லை. அப்படியே படுத்திருந்தாள்.

கணவனிடம் அலைபேசியை வாங்கி வைத்தவர்,  “உங்க ஃபோன் பத்திரமா பாக்கெட்டில் தானே இருக்கு! எத்தனை தடவை கால் பண்ணேன்! அதை எடுத்து பேசினா தான் என்ன??” என்று கேட்டார் ஆதங்கமாக!   

“டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் உயிரோட போராடிகிட்டு இருக்கான். சி.எம்., மினிஸ்டர்ன்னு.. அத்தனை ப்ரஷர்ல உனக்கு போன் பேசிகிட்டு இருக்க முடியுமா? அதிலயும் லேட்டாகும் மெசேஜ் போட்டேன் தானே!”

என்று கமிஷனர் படபடத்தது,  அவளை உலுக்க... பதறி அடித்து கொண்டு எழுந்த அஞ்சனா..

“உயிருக்கு ஆபத்தா? யாருக்கு??”

பதை பதைப்புடன் கேட்ட படி அவர்கள் அருகே ஓடி வர.. அவள் முகத்தில் இருந்த பீதியை கண்ட தம்பதியர் நெஞ்சம் கலங்கி போய் விட்டது!

சட்டென்று சுதாரித்த கமிஷனர்,

“ஆபத்துலாம் இல்லை! க்ரிட்க்கல் கண்டிஷன்ல இருந்து  வெளியே வந்தாச்சு!  பயப்படாதே!”,

என்றதும் அஞ்சனாவின் முகத்தில் தெரிந்த பயம் மறைய....  அதுவரை அவளைப் பார்த்த படி இருந்த சைலஜா கணவனிடம் திரும்பி,

“யாருக்கு ஆக்ஸிடென்ட்?”, என்று கேட்டார்!

“ACP ஸ்ரீவாசன்”, என்ற கமிஷினருக்கு அஞ்சனா சைலஜாவிடம்  என்ன சொல்லி வைத்திருக்காளோ என்ற சந்தேகம் இருந்தது! எனவே,

“ஒரு டீ போடுறியா? தலை வலிக்குது!”, 

என்று மனைவியை அந்த இடத்தில் இருந்து கழட்டி விட்ட பின்.. அஞ்சனாவிடம் ரகசியமாக,

“சைலுகிட்ட நீ எதுவும் சொல்லலை தானே?”,

வினவினார். மனைவி எட்ட சென்று பொழுதிலும்.. இந்த காக்கி சீருடை  பம்முவதை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது!

“நான் சொல்லியிருந்தேனா ஆண்ட்டி ஏன் உங்ககிட்ட கேள்வி கேட்க போறாங்க?”, என்றாள் சிரிப்புடன்.

அதற்கு அவரும் விளையாட்டாக,

“அவ எமபாதகி! தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே கேள்வி கேட்டு நம்மளை வைச்சு செஞ்சிடுவா!”,

சொல்லி விட்டு அவள் சிரிப்பில் இணைந்தார்! அவர் ட்ரேட் மார்க் இடி சிரிப்பு!!!

எப்பொழுதும் போல அதை கிண்டல் செய்யாமல், இன்னும் அவள் மனம் ஸ்ரீ வாசனின் உடல் நிலையிலே நிற்க, மீண்டும் அவனை பற்றி விசாரித்தாள். குடும்பத்தில் நிறைய மருத்துவர்கள் இருப்பதால் சிறிது கேள்வி ஞானம் அதில் இருக்க தான் செய்தது அவளுக்கு!

“தலையில் அடிபட்டதாலே, நாளைக்கு மூளையில் ஒரு சின்ன சர்ஜரி பண்றாங்க! அதுவும் நல்ல படியா முடிஞ்சிட்டா அப்புறம் பயப்பட தேவையில்லை!”

என்றார் கமிஷனர். அவன் உடல் நிலையின் தீவிரத்தை மறைக்க முயன்றார். ஆனால், அஞ்சனா,

“மண்டை ஓட்டை ஓபன் பண்றது சின்ன சர்ஜரின்னு சொல்றீங்க??!!!! நம்ம கிரி மாமா அதுல பெரிய எக்ஸ்பெர்ட்! அவர்கிட்ட ஒரு ஒபினியன் கேட்போம்!!”,

அவள் சொன்ன பின் தான் அந்த யோசனையே வந்தது கமிஷனருக்கு! தனக்கு உதவப் போய் தான் ஸ்ரீ வாசனுக்கு விபத்து நேர்ந்ததோ என்ற உறுத்தல் ஒரு புறம்.. மறுபுறம் நேர்மையான அதிகாரியின் நலன் அதிகமாக பட்டது! ஆனால், அமெரிக்காவில் இது ராத்திரி நேரமாக இருக்குமே.. அவர் எவ்வளவோ பெரிய ஆள்! இந்த நேரம் அவரை தொந்தரவு செய்யணுமா என்று தயங்கினார்.

“அதை நான் பார்த்துக்கிறேன்! நீங்க மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்சை மட்டும் மாமாக்கு பேக்ஸ் பண்ணுங்க”

என்று  உறுதியாய் பேசி, மருத்துவமனை கோப்புகளை கிரிதரனுக்கு அனுப்ப வைத்து அவரிடமும் பேசினாள். அவரும் ஒரு கை தேர்ந்த நிபுணரை ஸ்ரீவாசனை சென்று பார்க்குமாறு சொல்கிறேன் என்றதும் கமிஷனருக்கும் அவளுக்கும் மகிழ்ச்சியாகி போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.