(Reading time: 48 - 95 minutes)

வள் வதனத்தையே கண்டிருந்த மானகவசர் இப்போது ஒருவிதமாய் முறுவல் பூக்க…

“ம்..ஹ்ம்….” செருமிக் கொண்ட ருயம்மா தேவியோ….

“அந்த ஏறுதழுவல்…… அதில்... ஒரு பெண் மனம் என்ன பாடுபடும்….. எவனோ ஒருவன் வந்து தன் வீட்டு காளையை அடக்கிய காரணத்திற்காக அவனை மணப்பதாமா….? பெற்றோர் ஒரு மணமகனின் குணம், குடும்பம், தொழில் என அதைக் கண்டு மகளை மணமுடித்து கொடுப்பதென்பது வேறு…..இங்கு எருதை அடக்கிவிட்ட காரணத்திற்காகவே கொடுப்பதென்றால் சரியில்லையே…” என சுட்டிக் காட்டினாள்…. அதன் மூலம் தங்கள் இருவரின் கவனத்தையும் தன் மீதிருந்து ஏறுதழுவல் புறம் திருப்பினாள்….

பராக்கிரமன் வதனத்தில் இப்போது ஒரு பாந்த புன்னகை….

“எப்போதும் பெண்கள் மனம் பற்றிய அதீத அக்கறை ருயமரே உமக்கு…. நிச்சயமாய் அக்குணம் என்னை மிகவும் கவர்கிறது…. ஆணுக்கு அடங்கிப் போகத்தானே பெண் என்று நினையாமல் அவளும் மனம் உடையவள்தானே என்ற உமது பார்வை பாராட்டுக்குரியது”  என பாராட்டிவிட்டே தன் விளக்கத்தை தொடர்ந்தான் பாண்டிய வேந்தன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“உண்மையில் ஏறுதழுவல் காதலும் வீரமும் கலந்த விளையாட்டு…. இதோ இப்போது என்னை ருயம்மாவுக்காக ஏறுதழுவ நீர் தூண்டியது போல….ஏறுதழுவல் நடைபெறுவதற்கு முந்திய தினம்…. தன் மனம் கவர்ந்த ஆண்மகனை ஏறுதழுவும் படி தூண்டுவதே அவன் மீது காதலுற்றிருக்கும் பெண்பிள்ளைதான்….

எங்கள் பெண்களுக்கு கல்வி உண்டு…… நிலமும் பொருளும் உண்டு…. உடல் வலுவிலும் சளைத்தவர்கள் அல்லர்…. அவர்கள் தொழில் துவங்கவும் அதை நடத்தவும் இங்கு முறையுண்டு….அவ்வாறான பெண்கள் தங்கள் மண காரியங்களில் வெறும் கைபாவையாக செயல்பட இயல்பே அனுமதிப்பதில்லை ருயம்மரே….

உமக்கு தெரியுமே இங்குள்ள தாய்மாமன் மகனை மணக்கும் முறை பற்றி…..அவ்வகையில் மணவினைக்கு உட்படாமல் தன் குடும்பம் சாராத அந்நிய ஆடவனை ஒரு பெண் விரும்பும் போதுதான் இந்த ஏறுதழுவல் செயலுக்கு வருகிறது…

தன் காதலை வேண்டி நிற்கும்…. தன் மனதை ஈர்க்க துவங்கியுள்ள  ஆடவனை இடக்கான சம்பாஷணைகள் மூலமோ அல்லது பாடல்கள் மூலமோ ஏறுதழுவ தூண்டுவாள் பெண்…. உன்னால் ஏறுதழுவி என் பெற்றோரை சம்மதிக்க செய்ய முடியுமெனில் எனக்கும் இவ் விவாஹத்தில் விருப்பமிருக்கிறது என அவனுக்கு அப்பெண் கொடுக்கும் மறைமுக செய்தி அது….

அதை ஆயர்குரவை என்போம்…… ஆதியில் இது ஆயர்குல பெண்களிடம் தோன்றிய பழக்கமென்பதால் அப்படி ஒரு பெயர்….பின் நாளில் இது அனைத்து சமூகத்தவரிடமும் பரவிவிட்ட ஒரு பாரம்பரியமும் கூட….

அவ்வாறு அவள் விருப்பமறிந்து வந்து ஏறுதழுவி தன்னை நிரூபிப்பவன் அடுத்து அப்பெண்ணிற்கு பரிசமிட வரும்போது அவனது தகுதி அறிந்த அவளது பெற்றோர் அதை எளிதாய் ஏற்றுக்கொள்ள…..விவாஹம் நிறைவேறும்….. இதில் அப்பெண் மனம் மகிழத்தானே செய்யுமே ஒழிய துன்புற ஏதுமில்லை….

இவ்வளவு ஏன்…ஏறுதழுவுதல் முடியவும்…தன் தலைமகனை சந்தித்து அப்பெண் காதலுற புகழ்ந்துபாடும் வழமையும் கூட இங்குண்டு….. நியாயப்படி ஏறுதழுவல் முடியவும் ருயம்மா தேவி எனக்காக அப்பாடல் பாட வேண்டும்….” என திட விளக்கமாய் துவங்கி விஷமமாய் தன் விடையை முடித்தான் பாண்டிய வேந்தன்…

சம்பாஷணையை எங்கு சுற்றினாலும் என்னிடமே வந்து நிறுத்துகிறார் இவர் என மனதிற்குள் குறைபட்டுக் கொண்ட இளவரசியோ சாமர்த்தியமாய்..…

“பெண்ணுக்கு விருப்பமில்லா ஒருவன் காளையை அடக்கிவிட்டால்…?”  என மீண்டும் ஏறுதழுவலின் பால் சம்பாஷணையை திருப்பினாள்.

“விவாஹம் செய்ய வேண்டும் என எக்கட்டாயமும் இல்லை…. பெண்ணின் பெற்றோர் பரிசத்தை தாரளமாய் மறுக்கலாம்…..நீர் பரிசத்தை ஏற்க வேண்டும் என நான் குறிப்பிட்டது நம் இருவருக்குமான உடன்பாடே தவிர…..ஏறுதழுவலின் பொது சட்டமில்லை அது….”

“பெண்ணிற்கு விருப்பமென்பதெல்லாம் கூட சரிதான்….ஆனாலும் காளையை அடக்கியதற்காக விவாஹம் என்பது ஏனோ மனம் ஒவ்வவில்லை வேந்தே…. காளைக்கும் விவாஹ வாழ்விற்கும் என்ன தொடர்பிருக்கிறது?”  என மீண்டுமாய் தன் மறுப்பையே வெளியிட்டாள் ருயம்மா தேவி…..

“ அது அப்படியல்ல ருயம்மரே..…இங்கு காளைகளையும் பசுக்களையும் மாத்திரமே தங்கள் தொழிலாக வைத்து வாழ்க்கை நடத்தும் ஆயர் குலமும் உண்டு…..அது தவிர…..எங்கள் நகரங்களை நீர் கண்டால் புரிந்து கொள்வீர்…..இங்கு பயிர்தொழில் என்பது கிராமம் மாத்திரம் சார்ந்த காரியம் அல்ல…உண்மையில் அது நகரம் சார்ந்த தொழில்….. ஆற்றங்கரைகளில் குடியேறி, நகர் நிர்மாணித்து அங்கு பயிர் செய்வோம் நாங்கள்…..

 எங்களது செண்ப பொழில் நகரையோ, நெல்வேலி பட்டிணத்தையோ என்றாவது ஒருதினம் மதுரை மாநகரையோ நீர் பார்த்தால் புரிந்து கொள்வீர்….நகரின் நானா பக்கமும் பயிர் தொழிலே பரந்து விரிந்து காணக்கிடைக்கும்…. அப்பயிர்தொழிலுக்கும் அடிப்படை இந்த காளைகளும் ஆவினமுமே…

அத்தோடு அடுத்த பெரும் தொழில்….பாண்டிய தேசத்தை உலக அளவில் உயர்த்திய தொழில்…..வணிகம்….

ஒவ்வொரு ஊரிலும் விளையும் விளை பொருட்களையும், பட்டு பருத்தி ஆடைகளையும்…. மலைகளில் தேடி எடுக்கும் விலையுயர்ந்த கற்களையும்…..அனைத்திற்கும் மேலாய் ஆழியில் மூழ்கி எடுக்கும் முத்துக்களையும்….

உள்ளூர் விவசாயிகளும்…சிறு வணிகர்களும் அருகிலிருக்கும் சந்தைக்கு கொண்டு செல்வதும்…..உள் நாட்டு வணிகர்கள் அதை அவர்களிடமிருந்து கொள் முதல் செய்வதும்…..அதை கடல் கடந்து வெளி நாடு  சென்று தொழில் செய்யும் வணிகர்களிடம் சென்று அவர்கள் விற்பதும்…. கடலாடும் வணிகர்கள் அதை துறைமுகங்களுக்கு எடுத்து செல்வதும்….

பின் வெளி தேசத்திலிருந்து மரகலத்தில் வந்து இறங்கிய குதிரை தவிர ஏனைய கண்ணாடி பொருட்கள், கலிங்க வஸ்திரம் போன்றவற்றை உள்ளூர் சந்தைக்கு எடுத்து வருவதுமென….

இவை எல்லாவற்றின் அடிப்படையானது பண்டங்களை ஏற்றி செல்லும் பாரவண்டிகளும்…… அவைகளை இழுத்து செல்லும் காளைகளும்…… அவை இன்றி வணிகமே இல்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.