(Reading time: 48 - 95 minutes)

யிர்தொழில் மற்றும் வணிகம் இவைதான் இங்கு பிரதான தொழில்கள்…..இதில் ஈடுபடாத நபரே பாண்டியத்தில் இல்லை…..ஆக இங்கு அனைத்து தர மக்களின் அடிப்படை செல்வமாய் இருப்பது காளைகளும் ஆவினங்களும்….

முன்பானால் போர் தோன்றும் நாட்களில் முதலில் எதிரி தேசத்திலிருந்து கவர்ந்து வருவது அங்குள்ள பசுக்களையும் காளைகளையுமே….

ஏனெனில் அதிலேயே அத்தேச பொருளாதாரம் கவிழ்ந்துவிடும் என்பதனால்…

அந்த அளவிற்கு எம் தேசத்தின் அச்சாணி இந்த காளைகளும் பசுக்களும்…. அது இல்லாத இல்லம் என்றோ குடி என்றோ ஏதும் இருக்காது…..

ஆக  ஒரு ஆண்மகனால் தன் மீதும் காயம் படாது……காளைக்கும் தீங்கு நேராது அதை அத்தனை ஜன சந்தடியில் கையாள முடியுமெனில்….. அவன் சிறு வயது முதல் தன் வீட்டிலிருக்கும் காளைகளுடன் நன்கு பழகி அவைகளை பேணியவனாய் இருப்பான்….. அதாவது குடும்ப பணிகளை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பானவன்….

அதோடு தொடர் உடல் உழைப்பு இல்லாமல் காளையை அடக்கும் உடல் தகுதியை யாரும் பெற இயலாது….. ஆக அவன் உழைப்பாளி….

இவை இல்லாமல் திடீரென போட்டிக்குள் இறங்குபவன் காயமுறுகிறான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அதோடு காளையுடன் அதிகம் பழகியவன் என்றாலே…..அடிப்படையில் அவன் தன் வீட்டு தொழிலில் பக்க பலமாய் நின்றிருந்திருக்க வேண்டும்…. காளைக்கும் தொழிலுக்குமான தொடர்பை முன்பே குறிப்பிட்டேன்….. ஆக காளை கற்றவன் தொழில் கற்றவன்  என்று பொருளாகிறது…

அதோடு ஒரு பெண்ணிற்காய் அவன் இத்தனை தூரம் ஆபத்தில் இறங்குகிறான் என்றால்….அவன் அப் பெண்ணை தன் வாழ்வில் பிரதான படுத்துபவனாய் இருப்பான்….. அவள் பாதுகாப்பிற்கும் ஒரு நாளும் குறைவிராது…..

இவ்வாறான காரணங்களுக்காகவே எம் பெண்களும் பெற்றவர்களும் ஏறு தழுவிய ஆண் மகனை மண வாழ்க்கைக்கு ஏற்றவனாக எண்ணுவது….. “ மானகவசர் காரண காரியங்களை இவ்விதமாய் எடுத்துச் சொல்ல

அவைகளை ஊன்றி கவனித்திருந்த ருயம்மா தேவியோ…..ஒவ்வொரு காரியத்திற்கும் இத் தேசத்தில்தான் எத்தனை எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன….. எத்தனை நுண்ணிய சிந்தனை…. என்ன ஒரு அகன்ற பார்வை என அதீத பிரமிப்பில் கட்டுண்டு கிடந்தாள்….

அதோடு பெண்களை இவர்கள் எவ்விதமாய் முக்கியதுவ படுத்துகிறவர்களாகவும்….. சமநிலையில் காண்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு வித வியப்பில் வார்த்தை இழந்து நின்றாள்….

தன் பாட்டி ருத்ரமா தேவியை ஆடவர்கள் எதிர்த்ததால் இப் பிராந்திய ஆண்களால் பெண்களை மதிக்கவே இயலாது என்ற அவளது காயம் காணாமல் போவதாய் ஒரு உணர்வு….

இன்ன காரணங்களால் அவளிடமிருந்து பதிலேதும் கிளம்பாமல் போக….. மானகவசனோ தற்போது இவளை கண்ணோடு கண் நோக்கிய வண்ணம்…

“பாண்டிய வேந்தனை ருயம்மா மணமுடிக்க வேண்டி இருக்கிறது என்ற காரணத்திற்காகவே  தற்கொலைக்கு முயன்றதாக நீர் தெரிவித்தும்…..நான் இன்றுவரை அதைப் பற்றி ஏன் என்னவென்று எதுவும் கேட்டதில்லை…..  என்னை புரிந்து ஏற்று என்னிடம் வந்து நீரே மனம் திறப்பீர் என ஒரு  அசைக்க முடியாத நம்பிக்கை….

ஆனால் இன்றுவரை அத்திரை அப்படியே விலகாமல் இருக்கின்றது…..

காகதீய கோட்டைக்காக நான் போர்களம் வந்த செயலிலிருந்து இன்று வரை நான் நடந்து கொண்ட எல்லா காரியத்திலும் ருயம்மாவின் நன்மை மாத்திரமாய் இல்லாமல் தேச நன்மையும் இணைந்தே கிடந்ததால்……  எனக்குள் இருக்கும் ஒரு சராசரி ஆண் மகனின் காதலும் வாஞ்சையும் உமக்கு புரியாமலே போகிறதோ என்றெண்ணி…… உயிரினும் மேலாய் காதலிக்கும் பெண்ணிற்காக மட்டுமே  ஒரு ஆடவன் செய்யும் செயலை இன்று செய்வித்தால்….. அதுவும் உமக்கு விபரீதமாக…..உம்மிடத்தில் நான் இதை எதிர் பார்க்கவில்லை என குறைபடுமளவு இழி செயலாகவே  தெரிகின்றது…. “ என சொல்லியபடி ஒரு கணம் கண் மூடி தன் சம்பாஷணையை நிறுத்த…

நிலைகுலைந்து போனாள் ருயம்மா தேவி…..

அவனோடு அறிமுகமாகிய தினத்திலிருந்து இந்நொடி வரை எப்போதும் ஒரு ஆளுமை நிறைவோடும், நின்றாடும் மகிழ்வோடுமே மானகவசனை பார்த்திருந்த அவளை, முதன் முதலாக அவன் வதனத்தில் கண்ட சோர்வும் வேதனையும்....மூடிக் கிடந்த இமையின் மேல் படுத்திருந்த தோல்வியின் சுவடும் பெரும் வீரியமாய் தாக்கிற்று…

அவனது குரலில் செவியில் விழுந்த ‘சராசரி ஆண்மகனின் காதலும் வாஞ்சையும் உமக்கு புரியாமலே போகிறதோ’ என்ற வார்த்தைகள் இதயம் வரை உருவ துளைக்கிறது….

‘அவர் என்னை ஆண் என்று நினைக்கிறாரா…பெண் என புரிந்தாரா….என்பதிலேயே கவனம் செலுத்திவிட்டேனே…..  என் சரீரத்தில் சிரசும்….என் நாசியில் சுவாசமும் இருக்கும் வரை  வரும் கால பாண்டிய ராணியை எத்தீங்கும்  நெருங்குவதை என்னால் அனுமதிக்க இயலாது என முதல் சந்திப்பிலேயே சூளுரைத்த அவரது காதலை கவனியாது விட்டுவிட்டேனே…..’ என தவிக்கிறது இவள் உள்ளம்….

அவனது அத்தனை அருஞ்செயல்களிலும் தன்னை வெளிப்படுத்தி  சிக்கி கொள்ள நினையாத ருயம்மா தேவி…..இதோ இந்த அவனது சிறு துவளலில் எதிர் இருக்கையில் இருந்த அவன் அருகில் சென்று மண்டி இட்டிருந்தாள்……

தன்னை….. தன் செயலை அவனிடம் வெளிப்படுத்திவிட முடிவெடுத்திருந்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.